3 - இலக்கியம் - #முப்பதுக்கும் இருபத்தாறுக்கும் ஓர் உரையாடல்



ஆக, என் இருபத்தாறு வயது பிம்பத்தோடு ஒவ்வொரு தலைப்பாக உரையாடிக் கொண்டிருக்கிறேன். பணம், தொழில், பயணம் என்றெல்லாம் சுற்றிய பின் இன்று இலக்கியம் பற்றிப் பேசுகிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் என் மேல் எனக்கு இருக்கும் வருத்தங்களைப் பட்டியலிட்டால் முதல் இடத்தில் வந்து உட்காரும் விஷயம் இலக்கியம். வாசிப்பும் எழுத்தும் மிகவும் குறைந்து விட்டிருக்கும் காலம் இது. அந்த உண்மை உரைக்கும் நேரங்களில் சில சமயம் குற்ற உணர்ச்சி வருகிறது, சில சமயம் பயம் வருகிறது. அதே சமயம், இந்தப் புழுக்கத்தின் குரலுக்கு இடையே கொஞ்சம் உன்னிப்பாகக் கேட்டால் என்னுள் முன்னில்லாத ஒரு புது அடையாளத்தின் குரல் மெல்ல ஒரு விளக்கத்தை முனகிக் கொண்டிருக்கிறது. வாசிப்பும் எழுத்தும் நிஜமாகவே குறைந்து விடவில்லை என்று அந்தக் குரல் சொல்கிறது. மாறாக, முன்னை விட இப்போது இன்னும் அதிகமாக வாசித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறேனாம். ஆனால் அவற்றை வாசிப்பு என்றோ எழுத்து என்றோ என் மனம் ஏற்க மறுக்கிறதாம். இந்தக் குழப்பத்துக்குத் தெளிவான விடை அந்தக் குரலிடமே இல்லாததால் தான் அதனால் என் புழுக்கத்தோடு உரத்து வாதாட முடியாமல் சன்னமாக முனகிக் கொண்டிருக்கிறது. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் என் இரண்டாம் சிறுகதைத் தொகுப்பை எழுதிக் கொண்டிருந்தேன். தினமும் எழுதுவதில்லை என்றாலும் அது ஒரு இலக்காக இருந்து கொண்டிருந்தது. யாராவது இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டால் சொல்ல ஒரு விடை இருந்தது. 12 சிறுகதைகளுடன் அந்தத் தொகுப்பை ஒரு தவம் போல எழுதி முடித்து அகநாழிகை பதிப்பகத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தும் விட்டேன். இப்போது ஒரு இலக்கு இல்லை. இலக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலும் இல்லை. புத்தகம் வெளியிட்ட அனுபவமே ஒரு நகைமுரணாக நான் எழுதாமல் இருப்பதற்குக் காரணமோ என்று சில சமயம் தோன்றுகிறது. 

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பர்களோடு வசித்து வந்தேன். பின்னிரவுகளில் மொட்டை மாடியில் புத்தகங்கள் பற்றிப் பேசித் திரிய ஒரு கூட்டம் இருந்தது. அந்தச் சகவாசம் அவ்வப்போது எதையாவது எழுதுவதற்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தது. இப்போது அவனவனும் குடும்பஸ்தனாகி ஆளுக்கு ஒரு திசையில் இருக்கிறோம். இப்போது பின்னிரவுகள் விழித்து இலக்கியம் பேச ஆள் இல்லை. பொழுதோடு தூங்கப் போனால் தான் மறுநாள் காலையில் ஒழுங்காக வேலைக்குப் போக முடிகிறது. அவளும் நானும் மட்டும் இருக்கும் மாலை நேரங்களைப் புத்தகங்களோடு செலவிட மனமும் அவளும் ஒப்பவில்லை. இரவுக்கு என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கிறோம். ஏதேதோ கதைகள் பேசுகிறோம். கொஞ்சம் டிவி பார்க்கிறோம். இல்லறத்தை இன்புற ரசித்தே வாழ்ந்து கொண்டிருந்தாலும் அதற்கு இலக்கியத்தை விலையாகக் கொடுக்கிறோமோ என்று சில சமயம் தோன்றுகிறது. 

எல்லா எழுத்தாளர்களின் வாழ்விலும் இலக்கற்று எதையும் எழுதத் தெம்பற்றுத் திரியும் ஒரு காலம் வரும் என்று படித்திருக்கிறேன். Writer's Block வந்து விட்டதோ என்று சில சமயம் தோன்றுகிறது. 

ஏன் எழுதுவதில்லை என்று யோசிக்கப் போனால் ஏன் எழுதினேன் என்றும் ஏன் எழுத வேண்டும் என்றும் கேள்விகள் முளைக்கின்றன. எழுதத் துவங்கியபோது ஒரு பைத்தியக்காரக் குரங்கைப் போல மனம் எல்லாவற்றையும் எழுதி விடத் துடித்தது. அந்தக் குரங்கிற்குப் பெரும் பசியும், நிறைய நேரமும் இருந்தன. உண்ட களைப்பில், உறக்கம் வராத இரவில், விடிகாலைக் கனவில் என்றெல்லாம் அரை மயக்கத்தில் இருந்த பொழுதுகளில் கண்டதையும் கலைத்துப் போட்டுப் புனைந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தது. இளைய குரங்கு எழுதத் தொடங்கியபின் சராசரி குரங்கு முதிர்ச்சியைக் காட்டிலும் மனதளவில் வேகமாகப் பக்குவப்படத் தொடங்கி விட்டது. புனைவுகளைத் தவிர்த்து அனுபவங்களில் இருந்து மட்டுமே கதைகளைத் தேடித் தேடித் தேர்ந்தெடுத்து எழுதத் தொடங்கியது. கதைகளுக்குக் கரு கிடைக்காத போது அனுபவங்களைத் தேடிப் போகத் தொடங்கியது. அனுபவங்களின் வெளியில் வனத்தைப் பார்க்கத் தொடங்கியதும் எழுத நேரம் கிடைக்காது அனுபவங்களில் தொலைந்து போனது. இன்னமும் அது பசியோடு திரியும் பைத்தியக்காரக் குரங்குதான். ஆனால் பசிக்காகத் தின்னாமல் ருசிக்காகத் தின்னப் பழகிக் கொண்டு, ஓரளவுக்குப் பசியை மறக்கவும் பழகிக் கொண்டிருக்கிறது. 

இரண்டாவது சிறுகதைத் தொகுப்பை எழுதி முடித்து, கைக்காசைச் செலவழித்து அச்சாக்கிப் பார்த்தபோது ஒரு பெரிய திருப்தி இருந்தது. அந்தப் புத்தகத்தை வாசித்த நிறைய பேர் மனதார வாழ்த்தினார்கள். ஆனால் ஒரு சிறு குமிழைத் தாண்டி வேறெந்த அதிர்வையும் அந்தப் புத்தகம் உண்டாக்கவில்லை. அப்போது கிடைத்த சில புரிதல்கள் எல்லாம் ரொம்பக் குழப்பமானவையாக இருந்தன.

ஓர் எழுத்தாளன் கவனிக்கப் பட வேண்டுமென்றால் கவனத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. தினமும் எதையாவது ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துச் சொல்லிச் சொல்லி ஒரு வாசகர் வட்டத்தை வளர்த்துத் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. ஓர் எழுத்தாளனுக்கு நேரும் உச்சபட்ச தர்மசங்கடமாக, எழுதியதைப் பற்றிப் பேச வேண்டி இருக்கிறது. மார்க்கெட்டிங் செய்ய வேண்டி இருக்கிறது. 

வளர்த்து விட்ட வாசகர் வட்டத்தின் ருசிக்கேற்ப எழுத வேண்டி இருக்கிறது. 'நான் உணர்ந்ததை எழுதி இருக்கிறேன் பாருங்கள்' என்று பார்வைக்கு வைக்கும் சரக்கை வாசிக்கும் வாசகன் 'அட நானும் இதைப் பல முறை உணர்ந்திருக்கிறேன்' என்று ஆமோதிப்பதோ, 'அட இப்படி இதை நான் எப்படி உணராது போனேன்' என்று ஆச்சரியப்படுவதோ தான் எழுதியவனுக்குக் கிடைக்கும் வெற்றி. இன்று எங்கோ இந்தச் சமநிலை திரிந்து வாசகன் எதை உணர்கிறான் எதனோடு தொடர்புப்படுத்திக் கொள்கிறான் என்று தேடி அவனுக்காகவே படைத்துப் பரிமாறும் எழுத்தில் படைத்தவனுக்குத் திருப்தி இருப்பதற்கான வாய்ப்பு குறைகிறது போலத் தோன்றுகிறது. எழுத்து தொழிலாக மாறும்போது, கையெழுத்துப் பிரதிகள் புத்தகமாக மாறும்போது, வாசகர்கள் எண்ணிக்கை வருமானமாக மாறும்போது கூடவே வரக்கூடிய சுமைகளா இவை? 

இந்தப் பதிவின் தொடக்கத்தில் சொல்லி இருந்தேனே ஒரு சன்னமான முனகல். அது மறுபடியும் தன் தரப்பை முன்வைக்கிறது. முன்னைக் காட்டிலும் இப்போது அதிகமாகவே வாசிக்கிறேன். மாலை நேரங்களில் தேனீர்க் கோப்பைகளோடு புத்தகங்களாக அல்ல. போகிற போக்கில் திரைகளின் வழியே content-ஆக! முன்னைக் காட்டிலும் இப்போது அதிகமாகவே எழுதுகிறேன். பின்னிரவுகள் விழித்திருந்து திருப்தி வரும்வரை கிறுக்கிக் கிறுக்கிச் செதுக்கும் படைப்புகளாக அல்ல. அட்டவணைகள் இட்டு, கெடுவுக்குள் ஒப்படைக்கும் project-களாக! எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் Freelance செய்ய ஆரம்பித்திருக்கிறேன். நல்ல எழுத்திற்கும் மொழிபெயர்ப்புக்கும் இப்போது நிறைய தேவை இருக்கிறது. அங்கீகாரத்தோடு சம்பாத்தியமும் வருகிறது. ஆனால் வாழ்வின் அர்த்தத்தைப் பேசும் இலக்கியமாக அல்ல. Corporate manual, Educational content, promotional content, User Interface போன்ற பெயர்களால் பொதுவாகக் குறிப்பிடப்படும் content-ஆக! இலக்கியவாதியாக நினைத்தவன் freelance content writer ஆகவும் ஆகி இருக்கிறேன். ஓவியன் ஒருவன் பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் வேலைக்குப் போவதைப் போல! இதோ இந்தப் பதிவை எழுதும் போது கூட, வாசிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு மேல் ஆகுமென்றால் யாரும் வாசிக்க மாட்டார்கள், சுருக்கமாக எழுதி முடி என்று அந்த content writer நினைவூட்டிக் கொண்டே இருக்கிறான். வருங்காலம் இப்படித்தான் இருக்கும் என்றும் அவன் சில சமயம் வெகு தைரியமாக வாதிடுகிறான். அவனை நினைத்தால் பயம் வருகிறது. 

கடந்த இரண்டு மாதங்களில் நாம் வாசித்த புத்தகம் தான் இப்போது நாம் எவ்வளவு சுவாரசியமாக உரையாடுகிறோம் என்பதற்கு அடிப்படை என்று எங்கோ வாசித்திருக்கிறேன். அதன் அடிப்படையில் பார்த்தால் இப்போது நான் வெகு சராசரியானவன் தான். இருபதுகளின் ஆரம்பங்களில் வாசித்ததை எல்லாம் வைத்து வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சரக்கும் சீக்கிரம் தீர்ந்து விடலாம் அல்லது நடைமுறைக்குப் பொருந்தாமல் போய்விடலாம். 

இந்தக் குற்ற உணர்ச்சி, பயம், குழப்பம் எல்லாவற்றையும் தாண்டி வர ஒரே வழி, எதைப் பற்றியும் யோசிக்காமல் எனக்காக வாசிக்கவும் எனக்காக எழுதவும் மறுபடியும் முதலில் இருந்து முயற்சி எடுப்பதுதான். என் நாற்பது வயது பிம்பத்துடன் உரையாடும்போதும் இதே குறை இல்லாமல் இருந்தால் அதை ஒரு சிறு வெற்றியாகக் கருதிக் கொள்ளலாம். 

அடுத்த வாரம் உறவுகளைப் பற்றிப் பேசுகிறேன். 

- மதி

கருத்துகள்

தொடர்ந்து வாசிக்க..