Nov 18, 2015

திருவனந்தபுரம் வண்டி வந்தால் தெரிந்திருக்கும்கோவை ரயில் நிலையத்திற்கு வெகு சீக்கிரமாகவே வந்து விட்டேன். சென்னை செல்லும் என் ரயில் வர இன்னும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் இருந்தது. வழக்கம் போல வேடிக்கை பார்க்க வசதியாக ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். முதலாம் நடைமேடையில் வேறேதோ ஒரு ரயில் புறப்படத் தயாராய் நின்று கொண்டிருந்ததால், அந்த ரயிலுக்கான அவசரம் நடைமேடை முழுவதும் நிரம்பி வழிந்தது.

ஒரு மணல் கடிகாரத்தைப் போலவே நடைமேடைகள் இயங்குகின்றன. ஒவ்வொரு ரயிலும் வந்து சேர்வதற்கான அறிவிப்பு ஒலிக்கவும், ஒரு அமானுஷ்யமான கை கடிகாரத்தை நிமிர்த்தி வைத்து விடுகிறது. மேல் குப்பியில் இருக்கும் மணல் சீராகக் கீழே இறங்கி நிரம்பும் காலத்தில் வருகைகளும், புறப்பாடுகளும், விடைபெறுதல்களும், தவற விடுதல்களும், வியாபாரமும், வெறும் இரைச்சலும் அவசரமாக அரங்கேறுகிறது. மணல் முழுவதும் கீழே நிரம்பவும் ரயில் கிளம்பவும் சரியாக இருக்கும். பிறகு அடுத்த அறிவிப்பு லிக்கவும் அதே கை வந்து கடிகாரத்தைத் திருப்பி வைக்கும் வரை நிதானமாக ஒரு யோக நிலைக்குச் சென்று விடுகின்றன நடைமேடைகள். நாள் முழுக்க, இப்படியும் அப்படியும் ஒவ்வொரு ரயிலுக்கும் ஏற்றாற்போல் ஒவ்வொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிற நாடகமேடைகளாகவே இந்த நடைமேடைகள் இருக்கின்றன. அந்தந்த நாடகத்திற்கான நடிகர்கள் அவரவர் பாத்திரத்தைச் செய்து முடித்து விட்டு அவசரமாகக் கிளம்பி விடுகிறார்கள்.

இவர்கள் அல்லாமல் நடைமேடைக்கான நிரந்தரக் கதாபாத்திரங்கள் சிலர் ஒவ்வொரு நடைமேடையிலும் டீ,காபி, இட்லி, வடை விற்றுக் கொண்டும், மூட்டை இறக்கி ஏற்றிக் கொண்டும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் நடைமேடைக்கு அதிகாரப்பூர்வமான சொந்தக்காரர்கள். இவர்களும் அல்லாமல் வெறும் அனுபவப் பாத்தியதையை மட்டுமே நம்பி நடைமேடைகளில் ஒதுங்கி, கண்களுக்குப் புலப்படாமல் வாழும் நடைமேடை மனிதர்களும் எல்லா நடைமேடைகளிலும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே பிச்சைக்காரர்கள் இல்லை. இவர்களில் ஒரு சிலர் வாழ்வில் ஏதோ ஒரு ரயிலில் இருந்து இறங்கி மற்றொரு ரயிலுக்கு மாறுவதற்காக இந்த நடைமேடைக்கு வந்தவர்கள் தான். ஏதேதோ காரணங்களால் அவர்களின் இருப்பு நீண்டு நீண்டு அவர்களை நடைமேடையின் தற்காலிகக் குடிமக்களாக மாற்றி விடுகிறது. இவர்கள் வெளிப்படையாகக் கை நீட்டி இரப்பதில்லை. கிடைப்பதைப் பற்றிக் கொண்டு, ஏதோ ஒரு வண்டிக்காக எப்போதும் காத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

Oct 28, 2015

காரியாலயம்(இந்தச் சிறுகதை சொல்வனம் இணைய இதழில் ஏற்கெனவே வெளிவந்தது)

நமக்குத் தொழில் கூவுதல். கூலி கொடுக்கிறவர்களுக்காக, அவர்களின் பெயரைச் சொல்லி அதன் கூடவே இன்ன பிற கவர்ச்சிகளைச் சேர்த்துச் செருகிக் கேட்பவர்களின் கவனத்தைத் திருப்புமாறு கூவுதல். விளம்பரப்படங்கள் எடுக்கும் நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறேன். கூடவே நிறுவனப் படங்களும் எடுத்துக் கொடுப்பதுண்டு. இவை இரண்டுக்கும் ஒரு நுட்பமான வித்தியாசம் உண்டு. ஒன்றரை நிமிடங்களில் ஒரு பிராண்டை வாங்கச் சொல்லிக் கூவுதல் விளம்பரப் படம். கொஞ்சம் நீட்டி நிதானமாக, பத்து பதினைந்து நிமிடங்களுக்கு வருகிறாற்போல் ஒரு நிறுவனத்தின் வரலாறு, வளர்ச்சி, வருங்கால வாய்ப்புகள் என எல்லாவற்றையும் கோர்வையாக விளக்கிக் கூஉவுதல் (எழுத்துப் பிழை அல்ல, அளபெடை) நிறுவனப் படம் - கார்ப்பரேட் ஃபிலிம்! கான்ஃபரன்ஸ் அறைகளுக்காகவே உருவான ஒரு கலை வடிவம் இது. 

சமீபமாக ஒரு அரசு நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட படம் ஒன்று உயர்மட்டங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படத்தைப் பார்த்த மந்திரி 'நல்லாயிருக்கே, ஏன் இந்தப் படத்துல நான் கூட ரெண்டு வார்த்தை பேசலாமே' என்று இந்தியில் சொல்ல, நிறுவனத்தாரும் உடனே 'மே மே' என்று சகல மொழிகளிலும் ஆமோதிக்க, படம் பந்தாக மீண்டும் என் கைகளில் வந்து விழுந்தது. மூத்த மந்திரி பேசினால் இளைய மந்திரியையும் பேச வைத்தாக வேண்டும். நிறுவனத்திலிருந்து என்னை அழைத்துப் புதிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டார்கள். படப்பிடிப்புச் செலவைக் கருத்தில் கொண்டு இரண்டு மந்திரிகளுக்கும் தோதுபட்ட ஒரு நாளாகப் பார்த்து இருவரையும் தனித்தனியே அவர்களின் அலுவலத்தில் ஓரிரு நல்ல வார்த்தைகள் பேச வைத்துப் படமெடுத்துக் கொண்டு, முன்பே எடுத்திருந்த படத்தோடு பொருந்தச் சேர்த்துத் தர வேண்டும். இதற்காக நான் தலைநகருக்குச் செல்லும் செலவுகளை எல்லாம் நிறுவனம் தந்து விடும். ஆனால் மந்திரிகளின் காரியதரிசிகளை எனக்கு அறிமுகப்படுத்துவதோடு அவர்கள் விலகிக் கொள்வார்கள். நல்ல நாள் பார்த்து இருவரையும் ஒரு இடத்தில் அமர வைத்து ஒருங்கிணைக்க வேண்டியது முழுக்க என் பொறுப்பு.

இதற்கிடையே ஒரு நாள் இளைய மந்திரி குடியரசுத் தலைவரோடு வெளி நாட்டில் பிரயாணம் மேற்கொண்ட செய்தி தொலைக்காட்சியில் வர, இவரைத் தான் நான் படமெடுக்கப் போகிறேன் என்று வீட்டில் சொல்லித் தம்பட்டம் அடித்திருந்தேன். பிள்ளையாருக்குப் பிடித்து வைத்த கொழுக்கட்டையை எறும்பு எடுத்துத் தின்பது போல! இரண்டு மூன்று முறை நாள் தப்பித் தப்பிக் கடைசியாக ஒரு முகூர்த்தம் வந்தது. எப்படியும் இரண்டு மந்திரிகளும் அன்று தலைநகரில் ஒரே மேடையில் அமருமாறு ஒரு நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது. 'கெளம்புடா கைப்புள்ள' என்று காரியதரிசிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே அறைகூவல் விடுக்க, ஆகாயமார்க்கமாகத் தலைநகரம் கிளம்பினேன். ஏதோ ஓர் உள்ளுணர்வு, திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்யவில்லை. முதலில் வேலையை ஒழுங்காக முடித்து விட்டுப் பிறகு கூட ஒரு நாள் தங்கிச் சுற்றிப்பார்த்து விட்டுக் கிளம்பலாம் என்று எண்ணம்.

Oct 19, 2015

என் கல்லூரி இருக்கும் கோவைகடைசியாக எப்போது கோவைக்கு வந்தேன் என்பதே நினைவில்லை. அவ்வளவு காலமாகி விட்டது. இந்த முறை கோவைக்கு உற்ற நண்பன் ஒருவனின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வந்தேன். கோவையில் உள்ள ஒரு பிரபலமான அரசுக் கல்லூரியில் தான் நான் பொறியியல் படித்தேன். 2005-இல் கல்லூரியில் சேர்வதற்காக மற்றும் ஒரு மாணவனாக இந்த ஊருக்கு வந்தவன் நான். நான்கு ஆண்டுகள் படித்து முடித்து விட்டு ஊரை விட்டுச் சென்று அப்படி இப்படி வாழ்க்கையின் ஓட்டத்தோடு கூடவே ஓடிப் பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கல்யாண மாப்பிள்ளையும் நானும் மிக நெருங்கிய கல்லூரி நண்பர்கள். எங்கள் நட்புக்கும் இப்போது பத்து வயதாகிறது. நண்பன் கல்யாணம் என்பது ஒரு தனி விசேஷம் தான். கல்லூரியில் சேர்ந்த காலம் முதலே தனக்கு வரப்போகும் பெண் யார் என்ற ஆர்வத்துக்கு இணையாக இருந்த இன்னொரு ஆர்வம் நண்பர்களுக்கு வரப்போகும் பெண்களைப் பற்றியது. இன்னும் இரண்டு மாதங்களில் எனக்குத் திருமணம் (அது தனிக்கதை. அப்புறம் பேசுவோம்). ஒன்றிரண்டு பேரைத் தவிர உடன் படித்த நண்பர்கள் பலரும் குடும்பஸ்தர்களாகி விட்டனர். விடுபட்டவர்களுக்கும் தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் பயணம் தொடங்கும் முன் இந்த மன நிலைக்கு நான் வருவேன் என்று பெரிதாக நினைக்கவில்லை. கல்யாணத்துக்கு முந்தின நாள் நண்பரோடு சேர்ந்து பழைய கதைகள் பேச ஆரம்பித்து முளைத்த வினை, இன்று கல்யாணம் முடிந்ததும் சொல்லிக் கொண்டு விடைபெற்றுத் தனியாக இந்த ஊரைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறேன். காணும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு ஞாபகத்தைக் கிளறி விடுகிறது. கல்லூரி படித்த ஊருக்குப் பல வருடங்கள் கழித்து வந்து தனியாக ஞாபகங்களை மட்டும் அசைபோட்டுச் சுற்றும் அனுபவம் வெகு பரவசமாக இருக்கிறது. இது போன்ற அனுபவங்களைத் தர வல்லதால்தான் கல்லூரி நம் வாழ்வில் பெரிய சிறப்படைகிறது.

இந்தக் கல்லூரிக்கு வருகையில் எனக்கென ஒரு பெரிய அடையாளம் இல்லை. ஆனால் நான்கு வருடங்களில் வாழ்க்கையின் அடிப்படைப் பாடங்களையும், ஒரு அடையாளத்தையும், வெகு ஆழமான நட்புகளையும் உருவாக்கித் தந்தது இந்தக் கல்லூரி. விடுதிகளில் பற்பசை கடன் கேட்டு வாங்கிப் பல் விளக்கிய போதெல்லாம் நினைத்தும் பார்த்ததில்லை, பத்து வருடங்களுக்குப் பிறகும் இந்த நட்புகள்தான் நிலைத்திருக்கும் என்று. இதற்குப் பின் ஒரு கல்லூரியில் மேல் படிப்பெல்லாம் படித்தாலும் முதல் கல்லூரி முதல் காதலைப் போல இனிப்பாக மனதில் அப்பி இருக்கிறது.

Oct 7, 2015

பெற்றவர்களின் கவனத்துக்குமழை கொட்டும்போது
மணியடித்துக் கொண்டொரு
ஐஸ்கிரீம் வண்டிக்காரன் வந்தால்
உங்கள் பிள்ளைகளை
நன்றாகக் கவனியுங்கள்
பெற்றவர்களே!
ஐஸ்கிரீம் ஆசையை
அவர்கள் அணுகும் விதம் கொண்டு
பின்னாளில் அவர்கள் காதலித்தால்
எப்படி நடந்து கொள்வர்
என மூன்று வகைப்படுத்தலாம்.
உடம்புக்கு ஆகாது என்று
உங்கள் பேச்சைக் கேட்பவர்கள்;
உங்களைச் சம்மதிக்கவைத்து
ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள்;
மற்றும்
ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடியவர்கள்!

- மதி

ஐஸ்கிரீம் படம் தந்து உதவியவர்: Loring Loding

Sep 26, 2015

குற்றம் கடிதல் - நன்னயம் பாராட்டல்


நேற்றிரவு 'குற்றம் கடிதல்' திரைப்படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போதே இந்தப் படத்தில் நான் ரசித்தவற்றை எழுதிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. முதலில் இது ஒரு மிக நல்ல திரைப்படம் என்பதையும் பிறகு நான் ஒரு சினிமா விமர்சகன் அல்ல என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நிறைய சினிமா பார்ப்பேன் என்பதைத் தவிர சினிமாவைப் பற்றி நுட்பமாக விமர்சிக்கப் பெரிய தகுதிகள் எவையும் எனக்கில்லை. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி நான் எழுதுவதைப் போலவே இந்தத் திரைப்படத்தைப் பற்றியும் அனுபவப்பூர்வமாக எழுதலாம் என்பதே இந்தப் பதிவு. இன்னும் திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் கூட இந்தப் பதிவை வாசிக்கலாம். மேலோட்டமாகக் கதையைச் சொல்வதைத் தாண்டி எந்த இரகசியத்தையும் நான் சொல்லப் போவதில்லை. மேலும் எல்லாம் தெரிந்து பார்த்தால் கூட இந்தப் படம் ரசிக்கத்தக்க படைப்பே.

என்னைப் பொறுத்தவரை யதார்த்தப் படைப்புகள் அனைத்தையும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். மனிதத்தின் மேல் ஒரு நம்பிக்கை ஏற்படுத்துமாறான படைப்புகள் ஒருவகை. யதார்த்தம் என்பது சோகமும் தோல்வியும் தான் என்று அடம் பிடிப்பது மற்றொரு வகை. யதார்த்தத்தின் அழகையும் அதனுள் பொதிந்திருக்கும் நன்னம்பிக்கையையும் வெளிக்கொணருமாறான இந்தப் படைப்புகள் எப்போதுமே என்னைக் கைதட்டி ரசிக்க வைக்கின்றன. இந்தப் படத்தின் மையக் கதாபாத்திரங்கள் அனைவருமே மிக மிக யதார்த்தமான மனிதர்கள். புதிதாகக் கல்யாணம் ஆகியிருக்கின்ற காதல் மயக்கம் கலையாத தம்பதி, அந்தத் தம்பதியரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி புரியும் மனைவி, அதே பள்ளியின் முதல்வரும் மற்றொரு ஆசிரியையுமான முதிர்ந்த தம்பதி, அந்தப் பள்ளியில் படிக்கும் ஒரு நோஞ்சான் சுட்டிப் பயல், அவனுடைய ஆட்டோ ஓட்டும் தாய், அவளின் கம்யூனிஸப் போராளி அண்ணன் - ஆகிய இவர்கள் தான் முக்கியக் கதாபாத்திரங்கள். எதேச்சையாக அந்த ஆசிரியை அந்தப் பையனை ஒரு நாள் வகுப்பில் அடித்து விட, அவன் மயக்கம் போட்டு விட, அதன் பின் நிகழும் பரபரப்பே கதை.

Sep 10, 2015

துளசியும் நிலாவும்


துளசி ஒரு அழகான குட்டிப் பெண். இந்த வருடம் தான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்திருக்கிறாள். அவளுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அவளுடைய வீட்டிலேயே பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா எல்லாம் அவளுடைய நண்பர்கள். அப்புறம் அவள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஜோசஃப் அண்ணாவும் அவனுடைய குட்டித் தம்பி ஜாண் பாப்பாவும் அவளுடைய நண்பர்கள். அவள் வகுப்பில் அவளுக்கு ரேணுகா தான் மிக நெருக்கமான தோழி. தன் கூடப் படிக்கும் நிறைய குட்டிப் பெண்களெல்லாம் அவளுடைய தோழிகள்.

இவர்கள் இல்லாமல் துளசி தினமும் காலையில் பள்ளிக்குத் தாத்தாவோடு செல்லும்போது ஒரு பசுமாட்டிற்குப் பழம் கொடுப்பாள். அந்த மாடு அவளுக்குத் தோழி. அப்புறம் மூன்றாவது வீட்டில் வளர்க்கும் கிளிகள் துளசி அந்த வீட்டைத் தாண்டிச் செல்லும்போதெல்லாம் அவள் பெயரைச் சொல்லிச் சொல்லிக் கூப்பிடும். அழகான கிளிகள்! ஆட்டுக்குட்டி, பூனை, நாய்க்குட்டி என்று தன் வீட்டைச் சுற்றி நிறைய நன்பர்கள் உண்டு அவளுக்கு.

Jul 3, 2015

உயிருக்கும் மயிருக்குமான தர்மயுத்தம்வாழ்க்கை ஒரு வட்டம் என்பதைத் தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கக்கூடிய விஷயம் கட்டாய ஹெல்மெட் சட்டம். எனக்குத் தெரிந்து இது வரை மூன்று முறையாவது இந்தச் சட்டம் மிகக் கெடுபிடியாக அமுலுக்கு வந்து, அமோகமாக ஹெல்மெட்கள் விற்றுத் தீர்ந்து, சாலையோர வசூல்கள் செழித்தோங்கி, அதிகபட்சம் மூன்று மாதத்தில் ஆரவாரம் குறைந்து 'ஹெல்மெட் அணிவதால் பெண்கள் தலையில் பூச்சூட முடியவில்லை' என்பன போன்ற சல்லித்தனமான காரணங்களால் காணாமல் போயிருக்கிறது. மீண்டும் ஒரு முறை இந்த வாரம் மொத்தக் கூத்தும் அரங்கேறி இருக்கிறது. நீங்கள் புது ஹெல்மெட் வாங்கி விட்டீர்களா?

ஹெல்மெட் அணிவதால் பாதுகாப்பு இருக்கிறது என்பதைக் குறித்து எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். நம் ஒவ்வொருவருக்கும் எப்படியும் ஹெல்மெட்டால் பயனடைந்த யாராவது ஒருவரையாவது கட்டாயம் தெரிந்திருக்கும். பயனடைதல் என்று நான் இங்கே குறிப்பிடுவது திடீர் ஹெல்மெட் வியாபாரம் செய்து லாபம் பெறுவதை அல்ல. ஏதேனும் ஒரு விபத்தில் சிக்கி, அந்த நேரத்தில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சேதாரம் குறைந்த பயன். என் அக்காவுக்கும், நண்பர்களில் குறைந்தது இருவருக்குமாவது இது போன்ற கதைகள் இருக்கின்றன. மற்றொரு நண்பன் ஹெல்மெட் இல்லாமல் ஒரு நாள் பைக்கில் சில்லறை வாரி, முன் பல் தெறித்து, பொய்ப் பல்லை மாட்டிக் கொண்டபின் தீவிர ஹெல்மெட் விசுவாசி ஆகியிருக்கிறான். எப்போதாவது ஒரு நாள் பக்கத்தில் இருக்கும் மளிகைக் கடைக்குத் தானே என்று நான் ஹெல்மெட் போடாமல் போனால் கூட என்னை ஹெல்மெட் போடச் சொல்லி வற்புறுத்துகிறான். நல்ல மண்டைக்கு ஒரு விபத்து என்றாலும் எல்லாருமே இப்படிப் பட்டுத் திருந்தட்டும் என்று எதிர்பார்க்க முடியாதல்லவா?

எப்பேற்பட்ட அப்பாடக்கரானாலும் ஒரு நாள் சறுக்கலாம். ஒரு நாள். (மாரி தனுஷ் போல மேற்கண்ட இந்த வாக்கியத்தை உச்சரித்துப் பார்க்கவும்). அந்த ஒரு நாள் அவன் ஹெல்மெட் அணிந்திருந்தானா இல்லையா என்பதே கடைசியில் முக்கியமான கேள்வியாக மாறலாம்.

Jun 22, 2015

கனகதுர்கா - புன்னகை சுரக்கும் கேணி


புத்தகம்: கனகதுர்கா (சிறுகதைகள்)
ஆசிரியர்: பாஸ்கர் சக்தி
பக்கங்கள்: 400 சொச்சம்
வாசிக்க எடுத்துக் கொண்ட நாட்கள்: ஒரு வாரம்
ஒரு வரியில்: வெகு இயல்பான நடையிலும் மொழியிலும் ரசித்து எழுதப்பட்டுள்ள கதைகள். ரசனையின் மிகுதியில் வரும் புன்னகை உங்கள் இதழ்களில் விரிந்திருப்பதை உணராமலே நீங்கள் கதைகளில் மூழ்கியிருப்பீர்கள்.

'அழகர்சாமியின் குதிரை' என்று தமிழில் ஓரிரு வருடங்களுக்கு முன்பு அற்புதமான ஒரு திரைப்படம் வந்திருந்தது. பார்த்திருந்தீர்களானால் மிகவும் ரசித்திருப்பீர்கள். அந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் அந்தப் படம் ஒரு சிறுகதையின் மூலத்தைக் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் அந்தக் கதையை எழுதியவர் பாஸ்கர் சக்தி என்றும் அறிந்தேன். எனக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்! ஒரு தமிழ்ச் சிறுகதையைத் திரைப்படமாக எடுக்கும் அளவுக்குச் சினிமாவில் இங்கே நல்லவர்கள் இருக்கிறார்களா என்று ஒரு ஆச்சரியம். பாஸ்கர் சக்தி என்பது மற்றொரு ஆச்சரியம். அதற்கு முன் அவரின் பெயரை அடிக்கடி வீட்டுத் தொலைக்காட்சியில் சீரியல் 'கதை-வசனம்' என்று பெயர் போடுகையில் பார்த்திருக்கிறேன். சீரியல்களுக்கும் எனக்கும் ஒரு ஜென்ம விரோதம் இருப்பதால் அந்த உலகத்தோடு தொடர்புடைய எவரின் மேலும் எனக்குப் பொதுவாக ஒரு நல்லபிப்பிராயமே இருந்ததில்லை. அப்படியாப்பட்ட சீரியல் வசனகர்த்தா ஒருத்தரா இவ்வளவு யதார்த்தமான அழகியலோடு இந்தக் கதையை எழுதினார் என்று என்னால் நம்பவே முடியவில்லை. சரி, அவருக்கும் பிழைப்பு ஓட வேண்டுமே!

அதற்குப் பிறகுச் சில மாதங்கள் கழித்துச் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஒரு முறை அவரின் 'கனகதுர்கா' என்ற சிறுகதைத் தொகுப்பில் 'அழகர்சாமியின் குதிரை' சிறுகதையைக் கண்டுபிடித்தேன். பாஸ்கர் சக்தியின் அதுவரையிலான மொத்தக் கதைகளின் தொகுப்பு அது. அன்று நேரம் குறைவாக இருந்ததால் அந்த ஒரு கதையை மட்டும் வாசித்து விட்டுப் புத்தகத்தை வைத்து விட்டு வந்து விட்டேன். நல்ல கதை. சினிமாவில் அதன் மூல அழகு கெடாமல் எடுத்திருக்கிறார்கள்.  அந்தப் புத்தகத்தைப் பிறகு வாசிக்க வேண்டும் என்று குறித்துக் கொண்டிருந்தேன். அதன்படியே ஒரு புத்தகக் கண்காட்சியில் கண்ணில் படவும், என் அலமாரிக்கு வந்தது கனகதுர்காவின் ஒரு பிரதி. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் அலமாரியில் எனக்காகக் காத்திருந்து இப்போதுதான் எனக்கு வாசிக்க வாய்த்திருக்கிறது இந்தப் புத்தகம். நல்ல காரியங்கள் நடக்க வேண்டுமானால் காலம் கூடி வர வேண்டுமே.

May 31, 2015

Disabled-ஆ Differently abled-ஆ Specially abled-ஆ ?முழுக்க முழுக்கச் சந்தர்ப்பவசமாகக் கிடைத்த இரு வாய்ப்புகளால் கடந்த ஒரு மாதத்தில் நான் சில வெகு சுவாரசியமான மாற்றுத் திறனாளிகளைச் சந்தித்தேன். இந்த இரு சந்திப்புகளும் என்னில் ஏற்படுத்தின தாக்கங்களை ஒரு பதிவாக எழுத வேண்டும் என்ற உந்துதல்தான் இது.

நிகழ்வு 1 - கை இல்லை, கால் இல்லை; ஆனால் ஆடுகளத்தில் பேதமில்லை

தமிழ் நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியினருடன் சென்னையில் உள்ள பட்டயக் கணக்காளர்கள் (chartered accountants - இந்த வார்த்தையை நானும் இன்றுதான் கண்டுபிடிக்கிறேன்) சங்கம் இணைந்து அஸ்தா என்ற அமைப்பின் மூலமாக ஒரு மும்முனைக் கிரிக்கெட் போட்டியை நிகழ்த்தியது. ஆவடியில் உள்ள முருகப்பா கல்லூரி மைதானத்தில் ஒரே நாளில் ஒன்றன் பின் ஒன்றாக நான்கு 12-ஓவர் போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியிலும் மாற்றுத்திறனாளிகள் ஐந்து பேரும் உடல் குறைபாடுகள் இல்லாதோர் ஆறு பேரும் கலந்து விளையாடியதால் இதற்கு ஜுகல்பந்தி கிரிக்கெட் என்று பெயர் சூட்டி இருந்தார்கள். எனக்குத் தெரிந்த ஒரு CA நண்பர் மூலமாக எனக்கும் ஒரு அழைப்பு வரவே, நானும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டேன்.

மே மாதத்தின் ஈவு இரக்கமற்ற வெயிலில் ஒரு நாள் முழுக்க மைதானத்தில் ஓடியாடி விளையாண்டு களைத்த போதும், என்னோடு விளையாடிய மாற்றுத் திறனாளிகளின் உடல் வலிமையையும் மன வலிமையையும் விளையாட்டுணர்வையும் கண்டு என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை. நாங்கள் எவரும் தொழில்முறை விளையாட்டு வீரர்கள் இல்லை. அவர்கள் இந்த விளையாட்டையே தொழிலாகக் கொண்டவர்கள். இருந்தாலும் அவர்களின் உடல் குறைபாடுகளின் காரணமாக அவர்களால் எங்களைப் போலச் சில விஷயங்களைச் செய்ய முடியாது என்றும் அவர்களோடு அனுசரித்து விளையாட வேண்டும் என்றும் விளையாட்டு தொடங்கும் முன் எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் ஆட்டத்திற்கு முன்னால் மைதானத்தைச் சுற்றி ஒரு சுற்று அவர்களோடு ஓடி, அவர்களின் பயிற்சிகளைக் கண்ட உடனேயே அந்த எண்ணம் சுக்கு நூறாக உடைந்து விட்டது. பல வகைகளில் normal மக்களை விட அவர்கள் திறமைக்காரர்களாக இருந்தார்கள். Normal என்ற வார்த்தையை இங்கு பயன்படுத்தியது பற்றிப் பிறகு பேசுகிறேன்.


Jan 24, 2015

ஓர் எழுத்தாளனைக் கொன்ற புத்தகம்புத்தகம் : மாதொருபாகன் (புதினம்)
எழுத்தாளர் : பெருமாள் முருகன் (இவர் தற்போது உயிரோடு இல்லை. இதை அவரையே சொல்ல வைத்து விட்ட அளப்பரிய சாதனையை நிகழ்த்திய சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு முறை காறித் தரையில் உமிழ்ந்து கொள்க)
பக்கங்கள் : 100 சொச்சம்
ஒரு வரியில் : குழந்தை இல்லாத ஒரு கணவன் மனைவியின் மனச்சிக்கல்களை மிக நுட்பமாகப் பகிர்ந்திருந்தும் கூட, வேகம் குறையாமல் ஒரு விறுவிறுப்பான முடிவை நோக்கிச் செல்லும் கதை.

சமீபத்தில் பல சர்ச்சைகளுக்குள்ளாகிச் செய்திகளில் பிரபலமாகி எல்லாரையும் ஏதாவது கருத்துச் சொல்ல வைத்த புத்தகம். கருத்துரைத்தவர்களில் எத்தனை பேர் புத்தகத்தை வாசித்திருப்பார்களோ தெரியாது. அரசியலுக்கு அதெல்லாம் தேவை இல்லையே. அந்தச் சலம்பலில்தான் இந்தப் புத்தகத்தினைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். ஒரு எழுத்தாளனைத் தன் மரண அறிக்கையைத் தானே எழுதுமளவு செய்துவிட்ட பெருமைக்கு ஆளாகுமளவுக்கு அப்படி என்னதான் இருக்கிறதென்று இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்கும் போது இந்தச் சர்ச்சைகளை மனதிற்குக் கொண்டு வராமல் புத்தகத்தைப் பற்றி எவ்வித மதிப்பீடுகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் வழக்கமாக ஒரு புத்தகத்தை அணுகுவது போலவே வாசித்து ரசித்தேன். வழக்கம் போலவே கதையைப் பற்றி நான் பெரிதாய்ச் சொல்லப் போவதில்லை. என் வாசிப்பு அனுபவங்களே இந்தப் பதிவு. இதன் முதல் பாதியில் புத்தகத்தைப் பற்றியும் பின் பாதியில் இந்தச் சர்ச்சைகளைப் பற்றியும் எழுதுகிறேன்.

Jan 22, 2015

மேம்பாலத்தில் ஏறின மாடுபுறவழிச்சாலை மேம்பாலத்தின் மேல்
சம்பந்தமே இல்லாமல்
ஒரு மாட்டைப் பார்த்தேன்.
நீண்ட மேம்பாலம்.
ஏறினால்
பல மைல் தாண்டியே இறங்க முடியும்.
ஒதுங்கவும் முடியாது.
நான் கண்டபோது மாடு
நடுப்பாலத்தில் நடந்து கொண்டிருந்தது.
என்ன உந்துதலில் ஏறியதோ !
கண்ட வாகனமும் கடந்து போகும்.
அடிபடாது பிழைத்தால் புண்ணியம்.
இறங்கும் வழி தெரியாமல் தவித்தாலும்
பராக்கு பார்ப்பதில் மட்டும் குறைவில்லை.
நம் பலரின் வாழ்க்கைக்கும்
ஒரு புதிய உவமையைக் கொடுத்ததன்றி
வேறெதற்கும் உதவாமல்
நிதானமாக நடந்து கொண்டிருந்தது மாடு.
எகத்தாளம்தான்!

- மதி

படம் தந்து உதவியமைக்கு நன்றி : C. Bolon