Dec 13, 2014

காசு இருக்கறவன் குடிச்சா தப்பில்லையா ?


எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். குடியைப் பற்றி நான் எழுதுகிறேன் என்று தெரிந்தால் எக்கச்சக்கமாகச் சிரிப்பான். 'ஒரு குவாட்டர் விலை என்னன்னு தெரியுமாடா உனக்கு? ஒரே ஒரு நாள் குடிச்சிருக்கியாடா நீ? எந்த சரக்கு உசத்தி எது இல்லைன்னு தெரியுமாடா உனக்கு? நீயெல்லாம் குடியைப் பத்தி எழுத உனக்கு என்ன தகுதி இருக்கு?' என்று அவன் கேட்பது இந்த நிமிடம் என் மனக்குரலில் தெளிவாக ஒலிக்கிறது. எனக்குக் குடிப்பதைப் பற்றி ஒன்றும் தெரியாதுதான். ஆனால் கடந்த சில வருடங்களாகக் குடிப்பவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதியின் அடிப்படையில் எனக்கிருக்கும் ஒரு எளிய சந்தேகத்தை முன்வைப்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதார ரீதியாக அதிக வசதியில்லாத குடும்பங்களின் பிள்ளைகள் பலரோடு நட்புக் கொள்வதற்கு ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தயவில் எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. வறுமையோடு வாழ்வதைப் பற்றிப் பல நேர்முகப் பாடங்களை எனக்கு அளித்து வரும் அனுபவம் இது. நான் பார்க்கும் பிள்ளைகளில் குறைந்தது இருபதில் ஒருவர் குடிப்பழக்கத்தால் பெற்றவரையோ அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் எவரையோ பறிகொடுத்தவர்களாக இருக்கிறார்கள். ஐந்தில் ஒருவர் வெகு விரைவில் அப்படி ஒருவரை இழந்து விடுவோமோ என்ற பயத்தை உள்ளூரக் கொண்டிருக்கிறார்கள். குடி என்பது அவர்களின் வாழ்வில் இருக்கும் பொதுப் பிரச்சனையாக இருக்கிறது. பெற்றவர்கள் குடிப்பதால் பிள்ளைகள் எவ்வளவு கவலை கொள்கிறார்கள் என்று பல பரிமாணங்களில் கண்டிருக்கிறேன். 'தந்தை' குடிப்பதால் அல்ல. 'பெற்றவர்கள்' குடிப்பதால் என்று பொதுவாகச் சொல்கிறேன். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

'எங்க அப்பா ரொம்ப நல்லவரு. ஆசையா என்ன அடிக்கடி பீச்சுக்கு இட்டுனு போவாரு. பாவம் குடிச்சுக் குடிச்சு வயித்து வலில செத்துப் போயிட்டாரு'

'எங்க வீட்ல தினமும் சண்டை.. அப்பா குடிச்சிட்டு வந்து அம்மாவையும் என்னையும் போட்டு அடிக்கிறாரு. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குப் போகவே பயமா இருக்கு'

'எங்க அண்ணன் ஒரு ஆக்ஸ்டெண்ட்ல செத்துப் போச்சி.. எவனோ ஒருத்தன் குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வந்து கொன்னுட்டான்'

'என் அம்மா சரி இல்ல.. சொல்லவே அசிங்கமா இருக்கு. ரெண்டு மூணு பேர் வீட்டுக்கு வராங்க. எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நெனைச்சிட்டிருக்கு இன்னும்'

'ஒரு பையன் தான் முதல்ல கத்துக் குடுத்தான். வெறும் பேப்பர்ல விக்ஸைத் தேச்சு வைச்சு நைட்டு ஃபுல்லா மூக்கை உறிஞ்சினே இருந்தா ஒரு மாதிரி ஜிவ்வுன்னு இருக்கும்'

'வீட்ல படிக்க வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்பா இல்லை. அம்மாவால முடியல. வேலைக்குப் போவணும்'

'அப்பா குடிப்பாரு. வீட்டுக்குக் காசு தர மாட்டாரு. அம்மா காசை ஒளிச்சு ஒளிச்சு வெக்கும். அப்பா நெறைய கடன் வாங்குவாரு. ஆனா ஒழுங்கா வேலைக்கும் போவ மாட்டாரு. யார்யாரோ வீட்டுக்கு வந்து கத்துவாங்க. அம்மாதான் ஒண்டியா சமாளிக்கும் பாவம்'

இதை எல்லாம் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். குடியால் வறுமைக்குடும்பங்கள் எவ்வளவு துயரத்துக்கு ஆளாகின்றன என்பது பொதுவாகவே உங்களுக்குப் புரியும். சமீபத்தில் தி இந்துவில் படித்த இந்தக் கட்டுரை மீண்டும் என்னுள் இதைப் பற்றி நிறைய எண்ணங்களைத் தூண்டி விட்டது. குடியை ஒழிக்க மாணவர்களின் துணை கொண்டு எடுக்கப்படும் இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி அடைந்து மாற்றத்தை உருவாக்கி வருவதாய் வாசித்தது மிகவும் நிறைவாக இருந்தது. இந்த முயற்சிகள் பரவலாக வெளியே தெரிய வேண்டும். ஒரு தீர்வு நிச்சயம் சாத்தியமாகலாம்.

என்னை இப்போது அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி - வறுமை இல்லாத இடங்களில் குடிப்பழக்கம் பாதகமில்லையா? காசு இருக்கிறவன் குடிச்சா தப்பில்லையா?

Dec 6, 2014

நான் செத்தால் யாரெல்லாம் வருவார்கள்


புத்தகம் : சுமித்ரா (புதினம்)
ஆசிரியர் : கல்பட்டா நாராயணன் (மலையாளம்) ; தமிழில் கே.வி.ஷைலஜா
பக்கங்கள் : 119
வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் : 4 நாட்கள்
ஒரு வரியில் : தற்காலக் கவிஞனுக்கு உகந்த எழுத்து வடிவம் புதினம்தான் என்று முன்னுரையில் எஸ். ராமகிருஷ்ணன் கூறியிருப்பது போல ஒரு கவிதையான புதினம். வாசித்து முடித்ததும் நிறைய யோசிக்க வைக்கும் புத்தகம்.

மரணம் என்னும் பெருவிந்தை எப்போதும் என்னை ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது. பழுத்த முதியவர் ஒருவரிடம் ஒரு குழந்தை கேள்விகள் கேட்பதைப் போல அதனிடம் நான் பல கேள்விகளை அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். அந்த முதியவர் குழந்தைக்குப் பதில் சொல்வதைப் போலவே மரணம் என் கேள்விகளுக்குப் புன்னகையை மாத்திரமே பதிலாக அளித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் புரிந்து கொள்ளும் சக்தி குழந்தைக்கு இருப்பதில்லை. ஆனாலும் 'அட! இந்தக் குழந்தை துறுதுறுவென்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறதே' என்று முதியவர் சந்தோஷப் படுவார்.

'சுமித்ரா' புதினம் மரணத்தைப் பற்றி மீண்டும் என்னைப் பல கேள்விகளை எழுப்ப வைத்துவிட்டது. கதையின் ஒற்றை வரி இதுதான். சுமித்ரா என்னும் நடுவயது கேரளச் சீமாட்டி ஓர் அதிகாலையில் எதிர்பாராதவிதமாக மரணித்து விடுகிறாள். அது தொடங்கி அன்று பிற்பகல் அவளைக் கொண்டு எரிக்கும் வரை அவளைக் கிடத்தி வைத்திருந்த கூடத்தில் வந்து சேர்ந்த ஒவ்வொருவரின் பார்வையில் அவளின் மரணம் எழுப்பும் சலனங்கள் தான் இந்தக் கதை. கவித்துவமாகப் பல பேருண்மைகளை அனாயசமாக எழுதியிருக்கிறார் கல்பட்டா நாராயணன். மொழிபெயர்ப்பிலும் கே.வி.ஷைலஜா அவர்கள் மிக நேர்த்தியாக அந்த உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார். அற்புதமான கதைகள் பலவும் மொழிபெயர்ப்பில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஜாக்கி சான் படம் பார்ப்பது போலாகி விடக்கூடும். பல முறை நானே நொந்திருக்கிறேன். அந்த மாதிரி எதுவும் பண்ணாமல் கூடவே நிஜமாகவே கேரளச் சாயலும் வயநாட்டின் குளிரும் தொலைந்து போகாமல் மொழி பெயர்த்திருக்கும் இவருக்கு ஒரு பெரிய நன்றி.

Dec 2, 2014

ஊடறுப்பில் இடமில்லை(ஊடறுப்பு = intersection)

உன் வட்டத்தில் இருந்து நீயும்
என் வட்டத்தில் இருந்து நானும்
பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டோம்.
பழக்கப் போக்கில்
நெருங்கி நெருங்கி
இரு வட்டங்களுக்கும் பொதுவான
ஊடறுப்பை வந்தடைந்தோம்.
நாம் இருவரும்
கால் பரப்பி நின்று பேச
ஊடறுப்பில் இடமில்லை.
நமக்குப் பொதுவென்றிருந்தவை
ஓரிரு அழகிய அங்குலங்கள் மட்டுமே!