அகநுண்ணுணர்வுகளும் ஆச்சரியக் குறிகளும்


புத்தகம் : பெயர் தெரியாமல் ஒரு பறவை (சிறுகதைகள்)
எழுத்தாளர் : வண்ணதாசன்
பக்கங்கள் : 112
வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் : 3 வாரங்கள்

ஒரு வரியில் : அகநுண்ணுணர்வுகள். அதுதான். அதேதான். ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும்.

வேகாத வெயிலில் காயாது காய்ந்து சிறகு களைத்துப் பறந்து திரியும் பறவைக்கு ஒரு புண்ணியவான் வீட்டு மொட்டை மாடியின் கல் தொட்டியில் குடிக்கத் தண்ணீர் கிடைப்பது போன்ற தருணம் வண்ணதாசனை வாசிப்பது. வாழ்க்கை அதன் பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்கும். நின்று நிதானித்து அதை அசைபோட நேரம் கிடைத்தால்தான் வண்ணதாசனை வாசிக்க முடியும் போல. அவர் பாட்டுக்கு மழை எப்படிப் பெய்கிறது, அணில் எப்படி ஊர்கிறது, ஆட்டுக்குட்டி எப்படி மேய்கிறது என்றெல்லாம் கவனிக்க வைத்து விடுவார். அடுத்த நாள் பிழைப்பைப் பார்க்கப் போகிறவனுக்கு இதெல்லாம் வாகாகுமா? வண்ணதாசனை வாசிப்பதற்கு ஒரு பிராப்தம் வேண்டும். பிழைப்புக்கும் பணத்துக்கும் பிரச்சனை இல்லை என்ற மனநிலையில்தான் அவரை வாசிக்க முடியுமோ என்னவோ. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த மாதிரி எண்ணங்கள் வரலாம்.

ஆனால் நிஜத்தில் அவரை வாசிக்க வேண்டிய பிராப்தம் அமைதி சார்ந்தது. மனதில் அமைதி இருக்கிற கணங்களில் தான் இவரை ரசிக்க முடிகிறது. அமைதிக்கும் பொருளுக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை. சில காலம் முன்னால் மொட்டை மாடி இரவுகளை இலக்கியம் பேசிக் கழிக்க வாகாக என் நண்பர்கள் சிலருக்கு நேரம் இருந்தது. எல்லோர் மனதிலும் அமைதி இருந்தது. 'மொட்டை மாடி இலக்கியக் குழு'! அந்த மாடியில் பல முறை வண்ணதாசன் சிலாகிக்கப்பட்டிருப்பார். கவித்துவ முரண் போல இன்று பிழைப்பின் நிமித்தம் அந்தக் குழு கூடிப்பேச வாய்ப்பற்றுச் சிதறிக் கிடக்கிற நேரத்தில் இந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். என் பிறந்த நாள் ஒன்றிற்காக நண்பர்கள் சேர்ந்து 'GS என்ற பறவைக்கு' என்றெழுதி மொட்டை மாடி இலக்கியக் குழுவின் சார்பாக அன்பளித்த புத்தகம் தான் நான் வாசித்த இந்தப் பிரதி. அந்த வகையில் இந்தப் பிரதி எனக்கு ஒரு அடையாளச் சின்னம் கூட!



இந்த நினைப்போடு புத்தகத்தை வாசிக்கலாம் என்று அட்டையைப் பிரித்த போதே அற்புதமான ஒரு நிகழ்வை உணர்ந்தேன். சில வரிகள் நமக்காகவே நாம் வாசிக்கிற அந்தத் தருணத்திற்காகவே எழுதப்பட்டிருப்பதாய்த் தோன்றும். அத்தகைய வரிகளை முதல் பக்கத்திலேயே கண்டேன். அவரின் வார்த்தைகளிலேயே இதோ...
//அதனதன் காரியங்களை அவையவையும் அவரவர் காரியங்களை அவரவரும் செய்து வருகிறோம். இதில் ஒப்பிட ஒன்றுமில்லை. ஒரு கூழாங்கல் போல இன்னொன்றில்லை. ஒரு குன்னி முத்துப் போலப் பிறிதொன்றில்லை. ஒரு வேப்பங்கன்றின் காற்றை இன்னொன்று தருவித்து விடாது. இன்றைய சூரியன் நேற்றைய சூரியன் அல்ல. நாளைய கல்யாணி இன்றினுடையவன் அல்ல. எதன் எதன் நீட்சியாகவோ எல்லாம். அடிக்கணு இனிப்பு நுனிக்கரும்புக்கு அகப்படவில்லை. இதற்கிடையில் ஆரக்காலை நொந்து கொள்ளக் கடையாணிக்குத் துப்பில்லை. எல்லாம் உருண்டு உருண்டு, நடந்து நடந்து, கடந்து கடந்து....// அவ்வளவுதானே வாழ்க்கை!

1980-களில் அவர் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம். திருநவேலிக்காரனாக இதை வாசிப்பது கூடுதல் மகிழ்ச்சி. 'சங்கிலி', 'அந்தந்த தினங்கள்', 'போய்க் கொண்டிருப்பவள், 'அடங்குதல்' ஆகியன இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள். மற்றபடிக்குக் கதைகளைக் குறிப்பிட்டு இந்தப் புத்தகத்தின் அனுபவத்தைச் சொல்வதை விடப் பொதுவாகவே சொல்ல விரும்புகிறேன். அனைத்துக் கதைகளின் மனிதர்களும் வண்ணதாசனின் மைச்சாயல்களை உடையவர்களே. ஒரு காம்பவுண்டில் வாழ்ந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு கதை நடந்தாலும் பொதுவாக அந்தக் காம்பவுண்டின் மனிதர்கள் சேர்ந்து கூட்டாக ஒரே கதையை வாழ்ந்து கொண்டிருப்பதான உணர்வை அப்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள். அது போல வண்ணதாசனின் கதைகள் எழுதுகிறவனையும், கதையில் வாழ்பவனையும், கதையை வாசிப்பவனையும் சேர்த்து ஒரே காம்பவுண்டில் அண்டை வீடுகளில் வசிக்க வைத்து விடுகிறது. நாம் எல்லோரும் சேர்ந்த ஒரு கதையை ஒவ்வொருவரின் கிளைக் கதைகளின் மூலம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். அவ்வளவே !

மழையைப் பற்றி ஒரு கதையில் இப்படிச் சொல்கிறார். //மழையைப் பார்ப்பது போல ஏமாற்றி அழைத்து, மழையைத் தவிர்த்த வேறெங்கேயோ நம்மை அனுப்பிவிட்டு, மழை மாத்திரம் தனித்துப் பெய்கிற வழக்கமான காரியம்தான் நடந்தது. எந்தச் சூழலிலும் மழை தன்னுடைய தன்னிச்சையைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகவும், பார்வையாளனாக நாம் இருந்து செய்கிற இடையூறுகளைக் கூட மிகச் சுலபமாக அப்புறப்படுத்தி விடுவதாகவும் மட்டுமே தோன்றுகிறது மறுபடியும். தொலைந்து போனதிலிருந்து நம்மை மீட்டுக் கொண்டு வரும்போது மழை அனேகமாகச் சிரித்துக் கொண்டே நின்று விட்டிருப்பதுதான் தெரியும்//.. இந்த வரிகளை நான் வாசித்துக் கொண்டிருக்கும்போது என் வீட்டு மொட்டை மாடியில் மழை பெய்து கொண்டிருந்தது! சொன்னேனே. நமக்காகவே, நாம் வாசிக்கிற அந்தக் கணத்துக்காகவே.. அந்த ரகம்! இவரின் கதைகளும் கூட இவர் காணும் மழை போலத்தான். ஒரு கதையின் உள்ளாகச் சென்று, எங்கேயோ மனதை எடுத்துச் சென்று நம் கதை ஒன்றையே நினைவூட்டி, இரண்டு கதைகளையும் இணையாக மனதில் கிரகித்துக் கொண்டே வரும்போது ஏதோ ஒரு கதை மன அலையில் மேல்மட்டத்துக்குத் தளும்பி வரும்போதே மற்ற கதை முடிந்து விடுகிற வேடிக்கை நிச்சயமாக உங்களுக்கும் நடக்கும்.

கதைகள் சம்பவங்களுக்குள் ஒளிந்து இருக்கக் கூடியவை. பழகப் பழகத் தான் அவை நம் கண்களுக்கு அகப்படும். அதிலும் தேர்ச்சி பெறப் பெறத் தான் அகநுண்ணுணர்வுகளை அடையாளம் காண முடியும். அதையும் தாண்டிய ஒரு நிலைதான் அவ்வுணர்வுகளை எழுத்தின் வழி கடத்துவது. எந்த நிலையில் நாம் கதையை வாசிக்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் 'இதெல்லாம் ஒரு கதையா' என்பதில் இருந்து 'இப்படி ஒரு கதையா' என்ற வியப்பின் நிலைக்கு வாசகராக வளர முடிகிறது. இந்தத் தொகுப்பில் உள்ள பல கதைகள் சம்பவங்களைச் சார்ந்தவையே அல்ல. ஒரு சிறு பொய், ஒரு சிறு தவிப்பு, ஒரு சிறு புன்னகை அல்லது ஒரு சிறு முரண் என்று ஒரு சிறு பொறியை எடுத்து அதைத் துளைத்துத் துளைத்து உள்ளே சென்று பார்க்குமாறான கதைகளும் இருக்கின்றன. மாறாக ஒரு மரணம் போன்ற பெரு நிகழ்வின் பின்னணியிலும் கூட மனம் உள்ளுக்குள் உணரும் நுட்பமான விஷயங்களைச் சொல்லும் கதைகளும் இருக்கின்றன.

இவ்வாறெல்லாம் எழுதுவதற்கு எப்படி இவரால் முடிகிறது என்று யோசிக்கிறேன். அவர் மனிதர்களைப் பார்க்கும் பார்வை! அங்கேதான் சூட்சுமம் இருக்கிறது. புத்தகத்தின் முன்னுரையில் தனக்குப் பழக்கமான மனிதர்களைப் பற்றிச் சொல்லும்போது கவிஞர் சுகுமாரனைப் பற்றி நினைக்கையில் பூமியை வாசிக்கும் சிறுமியின் எவ்வளவு அண்மையில் அல்லது எவ்வளவு தொலைவில் இருந்திருப்பார் என்று எழுதுகிறார். ஒரு படைப்பாளனை இப்படியும் அறிமுகப்படுத்த முடியுமா என்ற நினைப்பு எனக்கு வந்தது. இந்த முன்னுரையில் ஒவ்வொரு கதை உருவான கணத்தைப் பற்றி எழுதியிருப்பார். இதனை நான் கதைகளை வாசிக்கும் முன் ஒரு முறையும் புத்தகத்தை முடித்த பிறகு மறு முறையும் வாசித்தேன். இரண்டு வாசிப்புகளுக்கும் இடையில் பல புரிதல்களைப் பெற்றிருந்தாற்போல் இருந்தது.

ஒரு ஆச்சரியக்குறியின் வழியாகவே முச்சூடும் உலகத்தைப் பார்க்கும் மனிதன் ஒருவன் 'இந்தா என் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் வாழ்க்கையை வேடிக்கை பார்த்து விட்டுக் குடு' என்று தருகிற மாதிரியான அனுபவம் இது. அகநுண்ணுணர்வுகளும் ஆச்சரியக்குறிகளும் நீடுழி வாழட்டும்!

- மதி

படம்: Mirza Azad Baig
(யாரு பெத்த புள்ளையோ எந்த ஊரோ, என் பதிவிற்குப் படம் தந்து புண்ணியம் தேடிக் கொள்ளும் இவருக்கு மனமார்ந்த நன்றி)

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..