குழந்தைகள் பெண்கள் ஆண்கள்


குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (புதினம்) - சுந்தர ராமசாமி
பக்கங்கள் : 649
எடுத்துக் கொண்ட நேரம் : 1 மாதம்

ஒரு வரியில் : 1930களில் கோட்டயத்தில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு உண்மையாகச் செதுக்கப்பட்ட படைப்பு. மனித மனத்தின் போக்கைப் படிக்க விழைவோர்க்கு மிகச் சிறந்த புத்தகம்.

சமீபமாக, எனக்கு ஒரு புது உலகை அறிமுகம் செய்து வைக்கும் புதினங்களையே அதிகம் பிடித்திருக்கிறது. இந்தப் புதினம் சுதந்திரப் போராட்டம் சூடு பிடிக்கும் காலத்தின் கோட்டயத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதற்கு முன் ஏற்கெனவே போராட்ட காலத்துக் கோவில்பட்டியை 'கோபல்லபுரத்து மக்கள்' புதினத்திலும், சுதந்திரம் கிடைத்த சூடு ஆறாத காலத்தின் நிஜாம் ஆட்சி ஐதராபாதை '18-ஆம் அட்சக்கோடு' புதினத்திலும் தெரிந்து கொண்டது போல் இந்தப் புதினமும் என் புரிதலுக்கு மற்றுமொரு புள்ளி வைத்திருக்கிறது. புள்ளிகள் சேரச் சேரப் பலவற்றையும் இணைத்துப் பார்க்க முடிகிறது.

மேலோட்டமாக அந்தக் காலகட்டத்தின் கதையாய் இருப்பினும் அடியாழத்தில் காலங்களைக் கடந்த, மனித மனங்களின் போக்கைச் சித்தரிக்கும் ஒரு கதையும் ஓடிக் கொண்டே வருகிறது. இரண்டு தளங்களில் இந்தப் புதினத்தை வாசிக்க முடிகிறது. ஆழமான எண்ண ஓட்டங்களைப் பேசும் இப்புத்தகத்தின் அடித்தளம்தான் இந்தப் புத்தகம் எனக்குள் விட்டுச் செல்லும் பெரும் பாதிப்பாக இருக்கும். இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றோடும் என்னையும் என்னோடு வாழும் பலரையும் வெகு சுலபமாகப் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் என் குணம் ஏதோ ஒன்று கொஞ்சம் அப்பிக் கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது.



கண்டிப்புடன் பிள்ளைகளை வளர்க்கும் அப்பாவின் பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது. எதையும் கனகச்சிதமாகச் செய்ய மெனக்கெடும் ஒரு perfectionist! அனைவராலும் மதிக்கப்படுகிறவர். தனக்கான கோடுகளை அழுத்தமாகப் போட்டு வாழும் மனிதர். சமூக மாற்றமும் தன் வீட்டுப் பிள்ளைகளும் அவருக்குள் உருவாக்கும் குழப்பங்கள் எல்லாருக்கும் வரக்கூடியவை. இந்தப் பாத்திரத்தில் என் தந்தையையே என்னால் பல முறை காண முடிந்தது. அவருக்கும் இந்தக் குழப்பங்கள் வந்திருக்குமே என்று ஊகிக்க முடிந்தது. தன்னைச் சமமான மனிதனாகப் பார்க்காமல், ஒருபடி மேலேயே வைத்துப் பார்க்கும் சக உறவுகளிடையே விழுந்து விடும் திரையினால், உண்மையான அன்பையும் வெளிக்காட்ட முடியாமல் தயங்கி அவர் தவிக்கும் காட்சிகள் பலவற்றில் என்னையே கண்ணாடியில் பார்த்தது போல் கூட இருந்தது.

பிறர் பாராட்டும்படி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவனின் மனதினுள்ளும் சதா காலமும் பிறாண்டிக் கொண்டே இருக்கும் பலவீனங்களும், சுய சந்தேகங்களும் இந்தப் புத்தகத்தில் நிர்த்தாண்யட்சமாக வெளிப்பட்டுள்ளன. நியூட்டனின் மூன்றாம் விதியைப் போல ஒரு மனம் வெளிப்பார்வைக்கு எந்த அளவுக்குத் திடமாகவும் பிரகாசமாகவும் இருகிறதோ அந்த அளவுக்கு உள்ளுக்குள்ளே பலவீனமாகவும் இருட்டாகவும் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. வெளியே எவ்வளவு அமுதமோ உள்ளே அவ்வளவு நஞ்சு. உள்ளதிலேயே நல்லவன்தான் உள்ளுக்குள் உள்ளதிலேயே கெட்டவனாக வாழக் கூடிய சாத்தியக் கூறுகளை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறான். பெரும்பாலும் அந்த இருட்டும் பலகீனமும் வெளிப்படாமல் அமுக்கி வைக்கப்பட்டு விடுகின்றன. ஆனாலும் அவை இருப்பதை அந்த மனமன்றி வேறு யாரும் அறிவதில்லை. அவற்றின் இருப்பை அந்த மனம் ஒருபோதும் மறுப்பதுமில்லை. வெளியே போடுவது வேஷம்தானோ என்ற எண்ணம் வராமல் வாழ்ந்த மனிதன் ஒருவனேனும் உண்டா?

புத்தகத்தில் வரும் வேனில் பந்தல் கூட்டங்கள் எங்கள் மொட்டை மாடி இலக்கியக் குழுவின் விவாதங்களை நினைவூட்டின. சட்ட திட்டங்களுக்கு அடங்கி வளர்ந்த சிறு பிராயத்தில், துடுக்காய்ச் சாகசங்கள் செய்து நாயகனாய்ச் சுற்றிக் கொண்டிருந்த அண்டை வீட்டு அண்ணாக்கள் பலரையும் இலட்சிய புருஷர்களாய்ப் பார்த்து இளகினது ஞாபகம் வந்தது. கணவன்-மனைவி, அக்கா-தம்பி, தந்தை-மகன், தந்தை-மகள், அங்காளி-பங்காளி, காதலன்-காதலி, காந்தி-பக்தன், என எல்லா வகையான உறவுகளிலும் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நுணுக்கங்களை அழகாகச் சொல்லியிருக்கிறார் சு.ரா. சில விஷயங்களை ஆழ்ந்து கவனித்தால் நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளையும் புரிந்து கொள்ள உதவும். கல்லூரியின் கடைசி நாள் இரவில் விடுதியில் ரா முழுக்கத் தூங்காமல் நினைவுகளை அசை போட்டபடியே ஒவ்வொரு மரத்தினோடும் கட்டடத்தினோடும் விடைபெற்றுக் கிளம்பின வெறுமையின் பாரத்தை மறுபடி வாழ்ந்த அனுபவம் வரும் பக்கங்கள் இருக்கின்றன. ஒரு உளவியல் புதிராகவே வளைய வரும் சிறுவன் பாலுவின் கதாபாத்திரம் பல புரிதல்களைத் தர வல்லது. சிறுவர்களின் உலகைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பாலு நிறைய உதவி செய்வான். அவனை அதட்ட மட்டும் கூடாது. மிடுக்கன்!

இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் இதன் பாத்திரங்கள் பிரச்சனைகளைக் கையாளும் விதம். கிட்டத்தட்ட அத்தனை நல்ல புதினங்களிலும் ஒரு மெல்லிய இழையாகச் சோகம் இருக்கிறது. சில புதினங்கள் அவற்றை அந்த மட்டிலேயே இழைய விட்டிருக்கின்றன. பல புதினங்கள் கண்ணீரிலேயே பக்கங்களைக் கரைத்து விடத்தான் துடிக்கின்றன. அழாமல் வலியைச் சொல்லும் போதுதான் உரைக்கிறது. சோகம் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதனூடே வாழ்க்கை காட்டும் நம்பிக்கையின் கீற்றுகளையும் சொல்ல வேண்டிய கடமை எழுத்திற்கு உண்டு. பல கதைகள் இதைச் சொல்வதில்லை. பிழியப் பிழிய ஒரு துயரக் கதையை உண்மையாகப் பதிவு செய்து பேர் வாங்கி விடுகின்றன. எனக்கு அவை அவ்வளவாய்ப் பிடிப்பதில்லை.

புத்தகத்தில் ஒரு பகுதியில் வரும் வாக்கியம் - 'வாழ்க்கை என்றைக்குமே நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. வீணாக அதைக் குறை கூறிப் பயனில்லை. இருக்கின்ற வாழ்க்கையில் நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது' இந்தப் புத்தகத்தை வாசித்த பின் இந்த வாக்கியத்தை இன்னும் முழுதாகப் புரிந்து கொள்ளலாம்.

- மதி

கருத்துகள்

  1. பிரச்சனைகளைக் கையாளும் விதம் நன்றாக உள்ளது என்றால், எவ்வாறு என்று அறிய வாங்கி விட வேண்டியது தான்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. :) 649 பக்கங்கள் !!! //வாழ்க்கை என்றைக்குமே நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. வீணாக அதைக் குறை கூறிப் பயனில்லை. இருக்கின்ற வாழ்க்கையில் நம்மைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது'// இந்த வார்த்தைகளை மனதிற்குள் பதித்துக் கொண்டேன் :) :)

    இந்த நாவலை வாசிக்கும் ஆசை வந்துள்ளது :)

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன் சார்.. நன்றி விஜயன்.. நிச்சயமாக இந்த நாவலை வாசியுங்கள். நீங்களும் உணர்வீர்கள்.. என்னைவிட சுந்தர ராமசாமி பன்மடங்கு அழகாகப் புரிய வைப்பார்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..