Dec 13, 2014

காசு இருக்கறவன் குடிச்சா தப்பில்லையா ?


எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். குடியைப் பற்றி நான் எழுதுகிறேன் என்று தெரிந்தால் எக்கச்சக்கமாகச் சிரிப்பான். 'ஒரு குவாட்டர் விலை என்னன்னு தெரியுமாடா உனக்கு? ஒரே ஒரு நாள் குடிச்சிருக்கியாடா நீ? எந்த சரக்கு உசத்தி எது இல்லைன்னு தெரியுமாடா உனக்கு? நீயெல்லாம் குடியைப் பத்தி எழுத உனக்கு என்ன தகுதி இருக்கு?' என்று அவன் கேட்பது இந்த நிமிடம் என் மனக்குரலில் தெளிவாக ஒலிக்கிறது. எனக்குக் குடிப்பதைப் பற்றி ஒன்றும் தெரியாதுதான். ஆனால் கடந்த சில வருடங்களாகக் குடிப்பவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதியின் அடிப்படையில் எனக்கிருக்கும் ஒரு எளிய சந்தேகத்தை முன்வைப்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதார ரீதியாக அதிக வசதியில்லாத குடும்பங்களின் பிள்ளைகள் பலரோடு நட்புக் கொள்வதற்கு ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தயவில் எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. வறுமையோடு வாழ்வதைப் பற்றிப் பல நேர்முகப் பாடங்களை எனக்கு அளித்து வரும் அனுபவம் இது. நான் பார்க்கும் பிள்ளைகளில் குறைந்தது இருபதில் ஒருவர் குடிப்பழக்கத்தால் பெற்றவரையோ அல்லது குடும்பத்தின் மூத்த உறுப்பினர் எவரையோ பறிகொடுத்தவர்களாக இருக்கிறார்கள். ஐந்தில் ஒருவர் வெகு விரைவில் அப்படி ஒருவரை இழந்து விடுவோமோ என்ற பயத்தை உள்ளூரக் கொண்டிருக்கிறார்கள். குடி என்பது அவர்களின் வாழ்வில் இருக்கும் பொதுப் பிரச்சனையாக இருக்கிறது. பெற்றவர்கள் குடிப்பதால் பிள்ளைகள் எவ்வளவு கவலை கொள்கிறார்கள் என்று பல பரிமாணங்களில் கண்டிருக்கிறேன். 'தந்தை' குடிப்பதால் அல்ல. 'பெற்றவர்கள்' குடிப்பதால் என்று பொதுவாகச் சொல்கிறேன். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

'எங்க அப்பா ரொம்ப நல்லவரு. ஆசையா என்ன அடிக்கடி பீச்சுக்கு இட்டுனு போவாரு. பாவம் குடிச்சுக் குடிச்சு வயித்து வலில செத்துப் போயிட்டாரு'

'எங்க வீட்ல தினமும் சண்டை.. அப்பா குடிச்சிட்டு வந்து அம்மாவையும் என்னையும் போட்டு அடிக்கிறாரு. ஒவ்வொரு நாளும் வீட்டுக்குப் போகவே பயமா இருக்கு'

'எங்க அண்ணன் ஒரு ஆக்ஸ்டெண்ட்ல செத்துப் போச்சி.. எவனோ ஒருத்தன் குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வந்து கொன்னுட்டான்'

'என் அம்மா சரி இல்ல.. சொல்லவே அசிங்கமா இருக்கு. ரெண்டு மூணு பேர் வீட்டுக்கு வராங்க. எனக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நெனைச்சிட்டிருக்கு இன்னும்'

'ஒரு பையன் தான் முதல்ல கத்துக் குடுத்தான். வெறும் பேப்பர்ல விக்ஸைத் தேச்சு வைச்சு நைட்டு ஃபுல்லா மூக்கை உறிஞ்சினே இருந்தா ஒரு மாதிரி ஜிவ்வுன்னு இருக்கும்'

'வீட்ல படிக்க வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்பா இல்லை. அம்மாவால முடியல. வேலைக்குப் போவணும்'

'அப்பா குடிப்பாரு. வீட்டுக்குக் காசு தர மாட்டாரு. அம்மா காசை ஒளிச்சு ஒளிச்சு வெக்கும். அப்பா நெறைய கடன் வாங்குவாரு. ஆனா ஒழுங்கா வேலைக்கும் போவ மாட்டாரு. யார்யாரோ வீட்டுக்கு வந்து கத்துவாங்க. அம்மாதான் ஒண்டியா சமாளிக்கும் பாவம்'

இதை எல்லாம் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். குடியால் வறுமைக்குடும்பங்கள் எவ்வளவு துயரத்துக்கு ஆளாகின்றன என்பது பொதுவாகவே உங்களுக்குப் புரியும். சமீபத்தில் தி இந்துவில் படித்த இந்தக் கட்டுரை மீண்டும் என்னுள் இதைப் பற்றி நிறைய எண்ணங்களைத் தூண்டி விட்டது. குடியை ஒழிக்க மாணவர்களின் துணை கொண்டு எடுக்கப்படும் இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி அடைந்து மாற்றத்தை உருவாக்கி வருவதாய் வாசித்தது மிகவும் நிறைவாக இருந்தது. இந்த முயற்சிகள் பரவலாக வெளியே தெரிய வேண்டும். ஒரு தீர்வு நிச்சயம் சாத்தியமாகலாம்.

என்னை இப்போது அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி - வறுமை இல்லாத இடங்களில் குடிப்பழக்கம் பாதகமில்லையா? காசு இருக்கிறவன் குடிச்சா தப்பில்லையா?

Dec 6, 2014

நான் செத்தால் யாரெல்லாம் வருவார்கள்


புத்தகம் : சுமித்ரா (புதினம்)
ஆசிரியர் : கல்பட்டா நாராயணன் (மலையாளம்) ; தமிழில் கே.வி.ஷைலஜா
பக்கங்கள் : 119
வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் : 4 நாட்கள்
ஒரு வரியில் : தற்காலக் கவிஞனுக்கு உகந்த எழுத்து வடிவம் புதினம்தான் என்று முன்னுரையில் எஸ். ராமகிருஷ்ணன் கூறியிருப்பது போல ஒரு கவிதையான புதினம். வாசித்து முடித்ததும் நிறைய யோசிக்க வைக்கும் புத்தகம்.

மரணம் என்னும் பெருவிந்தை எப்போதும் என்னை ஈர்த்துக் கொண்டேயிருக்கிறது. பழுத்த முதியவர் ஒருவரிடம் ஒரு குழந்தை கேள்விகள் கேட்பதைப் போல அதனிடம் நான் பல கேள்விகளை அடிக்கடி கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். அந்த முதியவர் குழந்தைக்குப் பதில் சொல்வதைப் போலவே மரணம் என் கேள்விகளுக்குப் புன்னகையை மாத்திரமே பதிலாக அளித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மேல் புரிந்து கொள்ளும் சக்தி குழந்தைக்கு இருப்பதில்லை. ஆனாலும் 'அட! இந்தக் குழந்தை துறுதுறுவென்று கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறதே' என்று முதியவர் சந்தோஷப் படுவார்.

'சுமித்ரா' புதினம் மரணத்தைப் பற்றி மீண்டும் என்னைப் பல கேள்விகளை எழுப்ப வைத்துவிட்டது. கதையின் ஒற்றை வரி இதுதான். சுமித்ரா என்னும் நடுவயது கேரளச் சீமாட்டி ஓர் அதிகாலையில் எதிர்பாராதவிதமாக மரணித்து விடுகிறாள். அது தொடங்கி அன்று பிற்பகல் அவளைக் கொண்டு எரிக்கும் வரை அவளைக் கிடத்தி வைத்திருந்த கூடத்தில் வந்து சேர்ந்த ஒவ்வொருவரின் பார்வையில் அவளின் மரணம் எழுப்பும் சலனங்கள் தான் இந்தக் கதை. கவித்துவமாகப் பல பேருண்மைகளை அனாயசமாக எழுதியிருக்கிறார் கல்பட்டா நாராயணன். மொழிபெயர்ப்பிலும் கே.வி.ஷைலஜா அவர்கள் மிக நேர்த்தியாக அந்த உணர்வுகளைக் கடத்தியிருக்கிறார். அற்புதமான கதைகள் பலவும் மொழிபெயர்ப்பில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஜாக்கி சான் படம் பார்ப்பது போலாகி விடக்கூடும். பல முறை நானே நொந்திருக்கிறேன். அந்த மாதிரி எதுவும் பண்ணாமல் கூடவே நிஜமாகவே கேரளச் சாயலும் வயநாட்டின் குளிரும் தொலைந்து போகாமல் மொழி பெயர்த்திருக்கும் இவருக்கு ஒரு பெரிய நன்றி.

Dec 2, 2014

ஊடறுப்பில் இடமில்லை(ஊடறுப்பு = intersection)

உன் வட்டத்தில் இருந்து நீயும்
என் வட்டத்தில் இருந்து நானும்
பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டோம்.
பழக்கப் போக்கில்
நெருங்கி நெருங்கி
இரு வட்டங்களுக்கும் பொதுவான
ஊடறுப்பை வந்தடைந்தோம்.
நாம் இருவரும்
கால் பரப்பி நின்று பேச
ஊடறுப்பில் இடமில்லை.
நமக்குப் பொதுவென்றிருந்தவை
ஓரிரு அழகிய அங்குலங்கள் மட்டுமே!

Sep 10, 2014

கடல் பார்த்தல்கடற்கரைக்குச் சென்றால் மட்டும்
கூடிவிடும் காரியமல்ல
கடல் பார்த்தல்.
அது தியானம்.
நிலைகளைக் கடந்திட
மெனக்கெடல் வேண்டும்.

கரையில் மேயும் கூட்டம் விடாது
கட்டி விளையாடும் காதல் விடாது
மணலை அளையும் மழலை விடாது
மாங்காய் தேங்காய் சுண்டல் விடாது
பேச்சுக்குத் துணை இருந்தாலே
பெருசாய் எதையும் உணர விடாது
மனிதப் பிரக்ஞை
முற்றிலும் துறந்து
கரையின் நிலை கடந்தாலும்...

காலோடு ஓடும் நண்டு விடாது
கரையோடு ஒதுங்கும் கிளிஞ்சல் விடாது
இரைந்து அழைக்கும் அலையும் விடாது
அது இட்டுச் செல்லும் நுரையும் விடாது
இடைக்கிடை ஒரு கணம்
தரிசனம் கிடைப்பினும்
அலையின் நிலை கடலை
அணுகவே விடாது.

Aug 26, 2014

சாமீ காப்பாத்து


அண்ணா நகர்
மாலையின் நெரிசல்
அணை கட்டி நகர விடாத வண்டிகள்
கீங்கீங்கீங் கீங் கீஈஈங்
வொயங் வொயங் என்று ஓயாமல்
அலறிக் கொண்டே
ஒரு 108 ஆம்புலன்ஸ்
ஒலிபெருக்கியில் மங்கள இசையோடு
அலங்கார விளக்குகள் மின்ன
விசேஷ பூஜை சிறப்புற நிகழும்
சாலையோரக் கோவிலுக்கு எதிர்த்தாற்போலவே
தரிசனத்திற்குக் காத்திருப்பது போல்
நகராமல் உறைந்து நிற்கிறது.
அதுனுள் ஒரு பெண்
மௌனமாகப்
பிரார்த்தித்துக் கொண்டிருக்கலாம் !

- மதி

படம் : நன்றி : Niels Sienaert

Jul 26, 2014

அகநுண்ணுணர்வுகளும் ஆச்சரியக் குறிகளும்


புத்தகம் : பெயர் தெரியாமல் ஒரு பறவை (சிறுகதைகள்)
எழுத்தாளர் : வண்ணதாசன்
பக்கங்கள் : 112
வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் : 3 வாரங்கள்

ஒரு வரியில் : அகநுண்ணுணர்வுகள். அதுதான். அதேதான். ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும்.

வேகாத வெயிலில் காயாது காய்ந்து சிறகு களைத்துப் பறந்து திரியும் பறவைக்கு ஒரு புண்ணியவான் வீட்டு மொட்டை மாடியின் கல் தொட்டியில் குடிக்கத் தண்ணீர் கிடைப்பது போன்ற தருணம் வண்ணதாசனை வாசிப்பது. வாழ்க்கை அதன் பாட்டுக்கு ஓடிக் கொண்டே இருக்கும். நின்று நிதானித்து அதை அசைபோட நேரம் கிடைத்தால்தான் வண்ணதாசனை வாசிக்க முடியும் போல. அவர் பாட்டுக்கு மழை எப்படிப் பெய்கிறது, அணில் எப்படி ஊர்கிறது, ஆட்டுக்குட்டி எப்படி மேய்கிறது என்றெல்லாம் கவனிக்க வைத்து விடுவார். அடுத்த நாள் பிழைப்பைப் பார்க்கப் போகிறவனுக்கு இதெல்லாம் வாகாகுமா? வண்ணதாசனை வாசிப்பதற்கு ஒரு பிராப்தம் வேண்டும். பிழைப்புக்கும் பணத்துக்கும் பிரச்சனை இல்லை என்ற மனநிலையில்தான் அவரை வாசிக்க முடியுமோ என்னவோ. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த மாதிரி எண்ணங்கள் வரலாம்.

ஆனால் நிஜத்தில் அவரை வாசிக்க வேண்டிய பிராப்தம் அமைதி சார்ந்தது. மனதில் அமைதி இருக்கிற கணங்களில் தான் இவரை ரசிக்க முடிகிறது. அமைதிக்கும் பொருளுக்கும் சம்பந்தம் இருக்கத் தேவையில்லை. சில காலம் முன்னால் மொட்டை மாடி இரவுகளை இலக்கியம் பேசிக் கழிக்க வாகாக என் நண்பர்கள் சிலருக்கு நேரம் இருந்தது. எல்லோர் மனதிலும் அமைதி இருந்தது. 'மொட்டை மாடி இலக்கியக் குழு'! அந்த மாடியில் பல முறை வண்ணதாசன் சிலாகிக்கப்பட்டிருப்பார். கவித்துவ முரண் போல இன்று பிழைப்பின் நிமித்தம் அந்தக் குழு கூடிப்பேச வாய்ப்பற்றுச் சிதறிக் கிடக்கிற நேரத்தில் இந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். என் பிறந்த நாள் ஒன்றிற்காக நண்பர்கள் சேர்ந்து 'GS என்ற பறவைக்கு' என்றெழுதி மொட்டை மாடி இலக்கியக் குழுவின் சார்பாக அன்பளித்த புத்தகம் தான் நான் வாசித்த இந்தப் பிரதி. அந்த வகையில் இந்தப் பிரதி எனக்கு ஒரு அடையாளச் சின்னம் கூட!

Jul 7, 2014

மொழி பெயர்த்துக் கிடைத்த ஒரு குதிரைச் சவாரி


புத்தகம் : கருப்பழகன் (Black beauty என்ற புகழ் பெற்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு)
ஆசிரியர் : அன்னா சிவெல் (தமிழில் யூமா வாசுகி)
பக்கங்கள் : 200+
எடுத்துக் கொண்ட நேரம் : 1 வாரம்

ஒரு வரியில் : ஒரு குதிரையின் வாயிலாகவே சொல்லப்படும் ஒரு குதிரையின் வாழ்க்கைக் கதை. மனிதர்களைப் பற்றியும் குதிரைகளைப் பற்றியும் நிறைய சிந்திக்க வைக்கும். மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஒரு ஆழமான புத்தகம்.

1870-களில் ஆங்கிலத்தில் அன்னா சிவெல் என்ற பெண்மணி எழுதிய புகழ் பெற்ற நாவல். ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே அதிகமாக விற்பனையாகி இருக்கும் முதல் பத்து புத்தகங்களுள் ஒன்றாம். Black beauty என்ற பெயருடைய ஒரு குதிரையின் கதை. இது ஒன்றும் போர்க்குதிரை அல்ல. இங்கிலாந்தின் தெருக்களில் பிரபுக்களுக்கு வண்டியிழுத்த சராசரிக் குதிரைதான். ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் சரித்திர முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. அதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கையாக மாறி அது பெற்ற அனுபவங்களையும் புரிதல்களையும் அதன் பார்வையிலேயே விவரிக்கிறது இந்தக் கதை. தன் பதின்வயதிலேயே ஒரு விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் ஆனவர் அன்னா சிவெல். பிறகு அவரின் வாழ்க்கை முழுக்க அவர் நடமாடியது குதிரைகளின் மேல்தான். அதனால் குதிரைகளைப் பற்றி ஆச்சரியப்படும் அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார். கடற்கரையில் குதிரைச் சவாரி செய்து மட்டுமே குதிரைகளோடு பரிச்சயமான நம் தலைமுறையினர்க்கு இந்தப் புத்தகம் ரொம்பப் புதிதாக இருக்கும்.

Jun 17, 2014

கொல்லும் வெள்ளை யானைபுத்தகம் : வெள்ளை யானை (புதினம்)
ஆசிரியர் : ஜெயமோகன்
பக்கங்கள் : 400+
வாசிக்க எடுத்துக் கொண்ட நேரம் : 1 மாதம்
ஒரு வரியில் : எனக்குத் தெரியாத ஒரு வரலாற்றைச் சொல்லி என்னைக் கூச்சப்படவும், கோபப்படவும், நிறைய சிந்திக்கவும் வைத்த புதினம். 

ஐஸ் ஹவுஸ் என்று சென்னையில் இருக்கின்ற இடத்திற்குப் பின்னால் இப்படி ஒரு உறைய வைக்கும் வரலாறு இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. 1875 வாக்கில் இந்த மாகாணத்தில் லட்சக்கணக்கானோர் பலியான ஒரு பஞ்சம் நிகழ்ந்திருக்கிறது என்று நான் அறிந்திருக்கவில்லை. அப்புராணியாக இருக்கும் ஐஸ் கட்டிகள் அளவில் பெரியதானால் இவ்வளவு பயங்கரமான மிருகமாக மாற முடியும் என்று நான் உணர்ந்ததில்லை. அடிமை நிலையில் பஞ்சம் என்பது இத்தனை கொடூரமானது என்று எனக்கு இதுவரை தெரிந்ததில்லை. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாது என்று முன்னுரை எச்சரிக்கிறது. நிஜம் தான்!

போதி நாற்காலிபோதி நாற்காலி

நாவிதன் கடை நாற்காலியில்
நேற்று எனக்கு ஞானம் கிடைத்தது. 
சதா காலமும் தலைக்கு மேல்
கத்தி விளையாடுவது போல்
இந்த வாழ்க்கை. 
கத்தி ஒரு போதும் நம் கையில் இருப்பதில்லை. 
நம்பித் தலையைக் கொடுத்துவிட்டால்
ஐம்புலன்களையும் அடக்கி
நடப்பதை அனுபவிக்கப் பழகிக் கொள்ள வேணும். 
என்ன ஆனாலும்
மயிரே போச்சு என்று இருத்தல் உசிதம்.
கழுத்தில் கத்தி படரும் நொடியிலும்
விழிப்போடு இருந்தால்
கருத்தில் கவிதை வரலாம்.
காரியம் முடிந்து கண்ணாடியில் பார்த்தால் 
எது நடந்ததோ
அது 
எப்போதும் நன்றாகவே நடந்திருக்கும். 

- மதி

படம் : நன்றி : Kenneth Tan

Jun 11, 2014

கனவீர்ப்பு விசை


கனவீர்ப்பு விசை

தரைக்கும் வானத்துக்குமாய்
கனவு ஒரு கயிறாய் நீள்கிறது.
சந்தேகங்கள் தரையிலும்
நம்பிக்கைகள் வானிலும் 
நடுவில் நம்மைக் கட்டி
இழுத்து விளையாடுகின்றன. 
எடை கூடும் திசையில் இழுபடுகிறோம். 

ஒவ்வொருவர்க்கும் 
ஒரு கயிறு. 
வானும் தரையும்
பொதுச் சொத்து.
இடுப்பில் ஒரு கத்தியுடன்
எல்லோரும் அந்தரத்தில். 

கனவின் ஈர்ப்பு விசை
எப்போதும் வான் நோக்கியே இழுக்க,
கைவிடப் பட்ட கனவுகளே
புவி ஈர்ப்பு விசையை மதிக்கின்றன. 

மூன்றே தேர்வுகள் தான்
நம் எல்லோர் முன்னும். 
பற்றி மேலேறுவதா? 
அறுத்துக் கொண்டு வீழ்வதா?
ரெண்டுக்கும் பயந்து
அந்தரத்து மந்தைக்கு நம்மை
அர்ப்பணித்துக் கொள்வதா?

- மதி

படம் : நன்றி : Send me adrift.

May 12, 2014

வயிறொட்டிய ஜீவன்கள்


நான் பார்க்கும்
நடைபாதை இரவலர் பலர்
பிச்சைக் காசில் வாங்கிய உணவைத்
தெரு நாய்களோடு
பகிர்ந்துண்டு வாழ்கிறார்கள்.
அவர்களை நாய்கள்
மனிதர்களிடம் இருந்து
காப்பாற்றுகின்றன.

-மதி

படம்: நன்றி: ஜுகைர் அகமத்

Mar 15, 2014

போங்கடா டேய்

(நன்றி) படம்:  Leif Carlsen

திருவள்ளுவர் என்றொரு தாடிக்காரர் நம் மயிலாப்பூரில் ரொம்ப நாட்களுக்கு முன்பு வாழ்ந்தார். அவருக்குச் சதா ஏதாவது அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பதே இயல்பு. திண்ணையில் சாய்ந்து ஊர் இளவட்டங்களைக் கூட்டி உட்கார்த்தி வைத்துக் கொண்டு 'இப்படி இப்படித்தானப்பா வாழ வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தவர், ஒரே பாட்டில் பெரிய ஆளாய் மாறுவதைப் போல் ஒரு சில பாடல்களில் திடீரென்று பெரிய ஆளாகிவிட்டார். ஒட்டுமொத்த சமுதாயமே அவரின் அறிவுரைகளைக் கேட்டு அதன் படி வாழ முயற்சிக்கத் தொடங்கியது. அவர் சொன்னதுதான் வாழ்க்கைக் கோட்பாடு என்றே நம்பப் படும் அளவுக்கு ஆகிவிட்டது. பல நூறு வருடங்களைத் தாண்டியும் அதே மயிலாப்பூரில், 'படில தொங்காதேடா சாவுகிராக்கி' என்று திட்டும் நடத்துனரின் கண் பார்வையிலேயே இருக்குமாறு 'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்று பொறித்து வைத்திருக்கும் அளவுக்கு மனிதர் நிலைத்து நின்று விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். என்றைக்காவது அந்த நடத்துனர் காயை விட்டு விட்டு கனியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் திருவள்ளுவர் தன் கடமையை நிறுத்தப் போவதே இல்லை. மனிதன் தன் வாழ்க்கையில் அறம், பொருள், இன்பம் என்று மூன்று விஷயங்களைத் தேடிச் சம்பாதிப்பது தான் பிரதானம் என்றும் அவற்றை ஒவ்வொன்றாய் எப்படியெல்லாம் அடையலாம் என்றும் சமையல் குறிப்பைப் போல் விலாவாரியாய் எழுதி வைத்து விட்டார். அவரை மதிக்கலாம். தப்பில்லை. மனிதர் கருத்தாய்த் தான் பேசியிருக்கிறார்.

என் பிரச்சனை இப்போது உருவாகி வரும் புதுக் கோட்பாடு தான். அவரை மாதிரியே இப்போது சில பல பேர்வழிகள் இந்தச் சமுதாயத்தையே ஒரு புதிய கோட்பாட்டை நம்ப வைத்து விட்டார்கள். ஒவ்வொரு திண்ணையிலும் ஒவ்வொரு இளைஞனிடமும் இந்தக் கோட்பாடுதான் இப்போது போதிக்கப் படுகிறது. வெகு லாவகமாக அவனையும் கிட்டத்தட்ட நம்ப வைத்து விட்டார்கள். அறம், பொருள், இன்பம் போலவே மூன்று விஷயங்கள் தான். இதை முப்பதுக்குள்ளே முடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு சிறு சட்டத் திருத்தத்தை இப்போது சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அதிகாரமாக இந்த மூன்று விஷயங்களைப் பற்றியும் பக்கம் பக்கமாகச் சரக்கு வைத்திருக்கிறார்கள். வெகு நேர்த்தியான விவாதங்களோடும், வெகு பொருத்தமான உவமைகளோடும்! இவர்களின் கோட்பாட்டுப் புத்தகத்தின் முதல் குறள் இப்படித்தான் இருக்கும்.

கார்வீடு கல்யாணம் இம்மூன்றும் எய்தினாரே
சால்போடு வாழத் தகார்.

'நன்றாகக் கேட்டுக் கொள் இளைஞனே! கார். வீடு. கல்யாணம். ஓடு. ஓடு. ஓடு. இதுதான் வாழ்க்கை. இதுதான் மதிப்பு. இதுதான் மோட்சம். முப்பது வரைதான் கெடு. ஓடு.'

'போங்கடா டேய்' என்ற குரல் இவர்களை எதிர்த்து பலத்து ஒலிக்க வேண்டிய தேவையும், சமீபத்தில் கொஞ்சம் அதிகமாக எனக்கு நானே இதைச் சொல்லிக் கொண்டிருந்ததும் சேர்ந்து ஒரு முறை இதைச் சத்தமாகச் சொல்ல வைத்து விட்டிருக்கிறது.

Feb 14, 2014

ஒருமையின் கணம்
    முதல் துளி வீழ்கையில்
    நிமித்தமாய் நிமிர்ந்து
    கண்ணுக்குள் மழையைக்
    களவாண்டு கொள்வது போல்
    மிகச் சரியான தருணத்தில்
    நிகழ வேண்டும்
    அவளுடனான பேச்சில்
    ஒருமை புகுதல்.
    நீங்க என்பது
    நீ ஆவது
    இமைக்கணம் முந்தினாலோ
    இல்லை பிந்தினாலோ
    நட்பென்னும் சாபத்தோடே
    நனையாமலேயே முழுக   வேண்டியதுதான்.


    - மதி

    (படம் : நன்றி : tsaiproject)

Feb 1, 2014

குழந்தைகள் பெண்கள் ஆண்கள்


குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (புதினம்) - சுந்தர ராமசாமி
பக்கங்கள் : 649
எடுத்துக் கொண்ட நேரம் : 1 மாதம்

ஒரு வரியில் : 1930களில் கோட்டயத்தில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் அவ்வளவு உண்மையாகச் செதுக்கப்பட்ட படைப்பு. மனித மனத்தின் போக்கைப் படிக்க விழைவோர்க்கு மிகச் சிறந்த புத்தகம்.

சமீபமாக, எனக்கு ஒரு புது உலகை அறிமுகம் செய்து வைக்கும் புதினங்களையே அதிகம் பிடித்திருக்கிறது. இந்தப் புதினம் சுதந்திரப் போராட்டம் சூடு பிடிக்கும் காலத்தின் கோட்டயத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதற்கு முன் ஏற்கெனவே போராட்ட காலத்துக் கோவில்பட்டியை 'கோபல்லபுரத்து மக்கள்' புதினத்திலும், சுதந்திரம் கிடைத்த சூடு ஆறாத காலத்தின் நிஜாம் ஆட்சி ஐதராபாதை '18-ஆம் அட்சக்கோடு' புதினத்திலும் தெரிந்து கொண்டது போல் இந்தப் புதினமும் என் புரிதலுக்கு மற்றுமொரு புள்ளி வைத்திருக்கிறது. புள்ளிகள் சேரச் சேரப் பலவற்றையும் இணைத்துப் பார்க்க முடிகிறது.

மேலோட்டமாக அந்தக் காலகட்டத்தின் கதையாய் இருப்பினும் அடியாழத்தில் காலங்களைக் கடந்த, மனித மனங்களின் போக்கைச் சித்தரிக்கும் ஒரு கதையும் ஓடிக் கொண்டே வருகிறது. இரண்டு தளங்களில் இந்தப் புதினத்தை வாசிக்க முடிகிறது. ஆழமான எண்ண ஓட்டங்களைப் பேசும் இப்புத்தகத்தின் அடித்தளம்தான் இந்தப் புத்தகம் எனக்குள் விட்டுச் செல்லும் பெரும் பாதிப்பாக இருக்கும். இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றோடும் என்னையும் என்னோடு வாழும் பலரையும் வெகு சுலபமாகப் பொருத்திப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் என் குணம் ஏதோ ஒன்று கொஞ்சம் அப்பிக் கொண்டிருப்பது போலவும் தோன்றுகிறது.

Jan 26, 2014

நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்


புவி ஈர்ப்பு விசை பற்றி நீங்கள் முதன் முதலில் தெரிந்து கொண்ட நாள் நினைவிருக்கிறதா? கொடுத்து வைத்த சில பேருக்கு அந்தக் கணம் பெற்றோர் மூலமாகவோ அண்ணன்/ அக்கா மூலமாகவோ, ஏதோ ஒரு கேள்வியில் முளைத்து ஓர் உரையாடலில் கிளைத்து நிகழ்ந்திருக்கலாம். அனேகம் பேர்க்கு அந்தக் கணம் ஆறாங்கிளாஸ் இயற்பியல் வகுப்பில் தான் நிகழ்ந்திருக்கும். அந்த நிகழ்வைக் கொஞ்சம் மனதின் முன் கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள். சர் ஐசாக் நியூட்டன் ஆப்பிள் மரத்தினடியில் உட்கார்ந்திருக்கும் படம் போட்ட புத்தகம். அந்த வகுப்பறை. அந்த இயற்பியல் ஆசிரியர். அன்று உங்கள் பெஞ்ச்சில் உங்கள் அருகில் உட்கார்ந்திருந்த மாணவன்/ மாணவி. அன்று நீங்கள் செய்யாமல் மறந்திருந்த கணக்கு வீட்டுப்பாடம். இன்னும் எவ்வளவு துல்லியமாக அந்த நாளை நினைவு கூற இயலுமோ முயற்சித்துப் பாருங்கள்.

நம் ஆசிரியர் மெதுவாக ஒரு கேள்வியைக் கேட்பார். 'ஒரு பந்தை மேலே தூக்கிப் போட்டா ஏன் அது எப்பவுமே கீழே வருதுன்னு யாராவது யோசிச்சிருக்கீங்களா?' யாரும் பதில் சொல்லி இருக்க மாட்டோம். அதிலிருந்து துவங்கி அந்த ஆப்பிள் மரத்தடியில் இருக்கும் மனிதரைப் பற்றிச் சொல்லத் தொடங்குவார். 'சர் ஐசாக் நியூட்டன் ஒரு நாள் ஆப்பிள் மரத்துக்கு அடில உக்காந்து புக் படிச்சிட்டு இருந்தார். அப்போ ஒரு ஆப்பிள் திடீர்னு அவர் தலை மேல வந்து விழுந்துச்சு.. உடனே அவருக்கு 'என்னடா இந்த ஆப்பிள் எப்பவும் கீழேயே விழுந்துட்டு இருக்கு; ஏன் மரத்துல இருந்து விழும்போது மேல போக வேண்டியதுதானே' அப்டின்னு தோணிச்சாம்' இந்த வசனம் வரையிலும் நம் ஒவ்வொருவரின் கதையிலும் சின்னச் சின்ன மாற்றங்கள் வந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்குப் பின் நம் ஆசிரியர் வாயில் இருந்து வந்திருக்கக் கூடிய வாக்கியம் அட்சரம் பிசகாமல் நம் அனைவரின் கதையிலும் இருக்கும்.

வாத்தியார் சொல்லியிருப்பார், 'நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம். ஐயா ஆப்பிள்ன்னு அதைச் சாப்பிட்டுட்டு விதையைத் தூக்கித் தூர எறிஞ்சுட்டு நம்ம வேலையைப் பாத்திருப்போம்'. உண்டா இல்லையா?

இன்று தற்செயலாக சிறுவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு அறிவியல் விளக்க நிகழ்ச்சியில் பார்வையாளராக அமர நேரிட்டது. இதே கதை. இதே வசனம். முன்பு பெரிதாய்த் தோன்றியிருக்கவில்லை. இப்போது இந்த வசனம் என்னை எக்கச்சக்கமாக யோசிக்க வைத்து விட்டது.

Jan 17, 2014

குமார பர்வதம் - மலையும் மலை சார்ந்த நினைவுகளும்

வெற்றிக்குறி
((இந்தப் பதிவை ஆங்கிலத்தில் வாசிக்க இங்கே கிளிக்கவும்))

புஷ்பகிரி என்கிற குமார பர்வதம். கர்நாடக மாநிலம். மேற்குத் தொடர்ச்சி மலையில் 5,617 அடி உயரத்தில் அமைந்திருக்கும் அழகான சவால். தென்னிந்தியாவின் மிகக் கடினமான மலையேற்றங்களில் ஒன்று. ஏறி இறங்க மொத்தம் 22 கிலோ மீட்டர். இரண்டு நாட்கள். பதிமூன்று பேர். இனிதே துவங்கியது எங்கள் 2014.

இந்தப் புத்தாண்டை எங்கே கொண்டாடலாம் என்று கடந்த சில மாதங்களாகவே நண்பர்கள் அடிக்கடி யோசித்து யோசித்துக் குழம்பிக் கொண்டிருந்தோம். பெசண்ட் நகர் கடற்கரையிலிருந்து அந்தமான் கடற்கரை வரை அலசிப் பார்த்தாயிற்று. உருப்படியாய் வித்தியாசமாய் ஏதாவது செய்யலாம் என்ற ஒரு உந்துதல் வேறு. அப்படியாகத் தேடி அகப்பட்ட ஒரு திட்டம் தான் இந்த மலையேற்றம். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் நண்பர் ஒருவர் வேறு ஒரு குழுவோடு ஏற முயற்சித்து, அட்டைக் கடியாலும் அடைமழையாலும் சாகசம் பாதியிலேயே சொதசொதவென்று ஆகித் திரும்பி வந்திருந்தார். அவர்தான் முதலில் வெள்ளோட்டம் விட்டது. சிலருக்குப் பிடித்துப் போகவே, வெகுஜனத்திற்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு சேர்க்கத் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு, இவன் வருகிறான் என்று அவனையும் அவன் வருகிறான் என்று இவனையும் வர வைத்து ஒரு வழியாக ஏற்பாடெல்லாம் பலமாகச் செய்து விட்டோம். மயிரைக் கட்டி மலையை இழுத்த கதைதான். வந்தால் மலை. போனால் கொஞ்சம் முட்டி வலி என்று தயார் ஆகி விட்டிருந்தோம்.

போதுமான அளவுக்கு இணையம் தகவல்களை அளித்திருந்தது. மலையை இரண்டு பக்கங்களில் இருந்து ஏறலாம். சோம்வார்பேட்டா என்ற ஊரும் குக்கே என்ற ஊரும் மலையின் இரு அடிவாரங்களில் இருக்கிறது. குக்கேவில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. மலையைச் சுற்றிக் கொண்டு சாலை வழியாகப் போனால் இரு ஊர்களுக்கும் தூரம் 60 கிலோமீட்டர். சும்மா அப்படியே நடுவில் இருக்கும் ஒரு மலையை ஏறி இறங்கி விட்டால் வெறும் 22 கிலோமீட்டர்தான்! இவ்வாறில்லாமல் குக்கேவில் தொடங்கி மலை உச்சி வரை ஏறிவிட்டு மீண்டும் வந்த பாதையிலேயே இறங்கி குக்கேவிலேயே பயணத்தை முடிக்குமாறும் பரவலாக ஒரு அணுகுமுறை இருக்கிறது. போறதுதான் போறோம் ரெண்டு பக்கத்தையும் பாத்துருவோமே என்று நாங்கள் முடிவெடுத்தோம். பிற்பாடு மலையின் முதுகைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதில்லையா.

Jan 13, 2014

அமைப்பு அப்படி


பதினாறாயிரத்தி நானூற்றி இருபத்தொன்றாம் முறை
ஒரு குழந்தை சிரித்துப் பார்க்கும்போதும்
எட்டாயிரத்தி நூற்றி நாலாம் முறை
நிலவும் நாமும் தனிமையும் சங்கமிக்கும்போதும்
முந்நூற்றி நாற்பத்தெட்டாம் முறை
நடு நெற்றியில் அம்மா விபூதியிடும் போதும்
பன்னிரண்டாம் முறை
புது நட்பு ஒன்று உயிரில் வேர்விடும் போதும்
ஐந்தாம் முறை
காதல் வாயில்மணி அடிக்கும் போதும்
கூட
முதல் முறை போலவே
சிலிர்த்திடுகிறது.

ரெண்டாம் முறை
நேர்கையில்
நிராகரிப்பு
துரோகம்
தோல்வி
ஏமாற்றம்
எதுவுமே
வலிப்பதில்லை.

அமைப்பு அப்படி !

- மதி

படம்: உபயம்: சந்தோஷ் ராஜாங்கம்

Jan 11, 2014

புனைபெயர் சூடிப் புஸ்தகம் போட்ட கதை - 2

நான் கையெழுத்திட்டுக் கொடுத்த முதல் பிரதி
ஜனவரி 1-ஆம் தேதி இரண்டாம் பாகம் வெளிவரும் என்று சொல்லி இருந்தேன். (முன் கதைச் சுருக்கம் வேண்டுவோர் இங்கே கிளிக்கவும்). தாமதத்திற்கு மன்னிக்கவும். டிசம்பர் 31-ஆம் தேதி நடு நிசியில் இதைப் பதிவேற்றலாம் என்று தட்டத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எங்கள் மொட்டை மாடி இலக்கியக் குழுவின் நண்பர்கள் புத்தாண்டு கொண்டாட வீடு புகவும் பதிவு கொஞ்சம் ஒத்திப் போடப்பட்டது. இந்த இடைப்பட்ட பத்து நாட்களில் ஒரு முறை காய்ச்சல் கண்டு எழுந்தேன், நண்பர்களுடன் இரண்டு நாள் நடைப் பயணமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் குமார பர்வதத்தை டங்குவார் கழண்டு போக ஏறி இறங்கினேன், பிழைப்பின் நிமித்தம் வார நாட்களில் சீக்கிரம் உறங்கி விட்டேன். இந்த வெள்ளிக் கிழமை இரவுக்கு நன்றி.

ஜனவரி 1 2013- மாலை 3 30 மணிக்குச் சென்னை Express Avenue வணிக வளாகத்தில் புத்தக வெளியீடு. Express Avenue என்று முடிவெடுத்ததே கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க முடிவெடுத்தது போலத்தான் நடந்தது. புத்தகத்திற்கான ஃபேஸ்புக் பக்கத்தில் சில இடங்களைக் குறிப்பிட்டு ஒரு இணைய வாக்கெடுப்பு நிகழ்த்தி அதில் பெருவாரியான மக்கள் தேர்ந்தெடுத்த இடத்தில் ஜன நாயக முறைப்படி வெளியீட்டிற்குத் திட்டமிட்டோம். சின்ன பட்ஜெட் வெளியீடு என்பதால் கீழ்க்கண்டவாறுதான் நிகழ்ச்சி நிரல் அமைத்திருந்தோம்.

\\ புத்தக வெளியீட்டின் நிகழ்ச்சி நிரல்

1. பரஸ்பர அறிமுகங்கள்
2. புத்தக அறிமுகம்
3. சீட்டு குலுக்கிப் போட்டு முதல் போணி செய்யும் நபரைத் தேர்ந்தெடுத்தல்
4. அசின் அம்பாசிடர் காருடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டது போல் புத்தகத்துடனும் நண்பர்களுடனும் மாறி மாறி ஃபோட்டோ எடுத்துக் கொள்ளல்
5. புத்தகம் பற்றிய கேள்வி-பதில்கள் உரையாடல்கள்
6. வேடிக்கை பார்ப்பதை மையமாகக் கொண்டு ஒரு சிறு விளையாட்டு
7. கை குலுக்கி விடை பெறுதல்

பி.கு: இது இலக்கியக் கூட்டமாகையால் சிற்றுண்டி உபசரிப்புகள் கிடையாது.. சிங்கிள் டீதான் ! தேனீர் குடிப்பதனால் உடல் நலத்திற்கு விளையும் நன்மைகள் பற்றிய விவாதம் ஒன்றும் நடைபெறலாம் \\