Dec 29, 2013

புனைபெயர் சூடிப் புஸ்தகம் போட்ட கதை - 1


உங்களில் பலருக்கும் என் முதல் புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருக்கலாம். 'முதல் போணி' என்ற தலைப்பில் 16 சிறுகதைகள் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு. 2013 ஜனவரி 1-ஆம் தேதி சிலபல நண்பர்கள் சூழ, சென்னை EA வணிக வளாகத்தில் கூட்டம் குறைவான ஒரு தாழ்வாரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து கலைத்து விடுவதற்கு முன்பு கிடைத்த விலை மதிப்பில்லாத 15 நிமிடங்களில் வெளியான புத்தகம் அது. சரியாக ஒரு வருடம் முடியப் போகிறது. இப்போது அந்தத் தொகுப்பில் வராத, அது குறித்த 17-வது கதையை உங்களுக்குச் சொல்ல ஆர்வமாக இருக்கிறேன். இதுதான் கோமதி சங்கர் என்ற நான் 'மதி' என்று புனைபெயர் சூடிப் புஸ்தகம் போட்ட கதை!

கல்லூரிக் காலம் தொட்டே தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதுவதில் ஆர்வம் கொண்டு அடிக்கடி முயற்சித்து அந்தக் கதைகளை எல்லாம் ஒரு கையேட்டில் தேதியிட்டு எழுதி வைத்திருந்தேன். நல்ல புத்தகங்களை வாசிக்க வாசிக்க, நல்ல அறிமுகங்கள் கிடைக்கக் கிடைக்க என் எழுத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறிக் கொண்டே வந்தது. வலைப் பதிவில் முகம் தெரியாத வாசக நண்பர்கள் ஊக்கம் கொடுக்கும் போதெல்லாம் மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்த ஒரு ஆசை - புத்தக வெளியீடு. கல்லூரிக் காலத்திலேயே ஆர்வம் மிகுந்து என் கதைகளில் சிறந்தவை என்று சுயபரிசீலனையில் தேர்வான ஐந்து கதைகளின் நகல்களை எடுத்துக் கொண்டு ஆனந்த விகடன் அலுவலகத்துக்கும் உயிர்மை அலுவலகத்துக்கும் சென்றேன். பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எங்கேயாவது தொடங்குவோம். போகப் போக இந்தப் படைப்புலகச் சக்கரம் எப்படிச் சுழல்கிறது என்று கற்றுக் கொள்வோம் என்ற ஒரு எண்ணம். விகடன் அலுவலகத்தில் சிரித்த முகத்துடன் வரவேற்பறையில் அமர வைத்து என் நகல்களை வாங்கி வைத்துக் கொண்டு 'ஒரு மாதத்திற்குள் நாங்களாக அழைக்காவிடில் நீங்கள் மேற்கொண்டு இவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்யலாம்' என்றார்கள். உயிர்மையில் மனுஷ்யபுத்திரனையே வெகு சாதாரணமாக நேரில் பார்த்துவிட முடிந்தது. ஆனாலும் அந்தக் கணப் பரவசத்தில் சொதப்பு சொதப்பென்று சொதப்பித்தள்ளத்தான் முடிந்தது. 'இதற்கு முன் உங்கள் கதைகள் எங்காவது பிரசுரமாகி இருக்கின்றனவா?' என்றார் மனுஷ்யபுத்திரன். 'இல்லை சார்' என்றேன். 'வேறு பதிப்பகங்களில் முயற்சி பண்ணினீங்களா' என்றார் அவர். 'விகடனுக்குப் போனேன் சார்' என்றேன். அங்கு நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டு 'சரி.. உங்கள் கதைகளுக்குப் பொருத்தமான அறிமுகம் விகடனின் வாசகர்களிடம் கிடைக்குமா உயிர்மையின் வாசகர்களிடம் கிடைக்குமா' என்றார். அசாத்தியமான தன்னம்பிக்கையுடன் அதை விட அசாத்தியமான வெகுளித்தனத்துடன் 'இரண்டு தளங்களுக்குமே என்னிடம் கதைகள் இருக்கு சார்.. இடத்திற்கு ஏற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்' என்றேன்.

பதிப்புலகம் பற்றிய அரிச்சுவடி கூட அறியாத பருவம். வெறும் ஆர்வம் மட்டுமே இருந்த காலம். அதிகம் முகம் சுளிக்காமல் ஒரு பத்து நிமிடம் பேசிவிட்டு 'உங்களைப் போல தினமும் எனக்கு நூற்றுக்கணக்கில் கதைகள் வருகின்றன. என்னால் எல்லாவற்றையும் படித்துவிட முடியாது. போய் உங்கள் தகுதியை நீங்களே ஆராய்ந்துவிட்டுத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இளைஞர் ஒருவரை இப்படிப் பார்ப்பது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது' என்று அனுப்பிவிட்டார் மனுஷ்யபுத்திரன். நல்ல மனிதர் ! விகடனும் ஒரு மாதத்திற்குள் ஒன்றும் சொல்லவில்லை.


Dec 15, 2013

அடக்கம் அன்பையும் உய்க்கும்ஒவ்வொரு ஆணும்
ஒரு பெண்ணிடம் அடங்கிப் போக விழைவான்.
ஒவ்வொரு பெண்ணும்
ஒரு ஆணிடம் அடங்கிப் போக விழைவாள்.
அன்னார் இருவரும்
பரஸ்பரம் அடங்கி
ஓருணர்வில் நிறைவது
காதல்.

- மதி

படம் : நன்றி - ttstam

Dec 4, 2013

எல்லோருக்கும் கிடைக்காத இரண்டு நண்பர்கள்

படம் : டிஜிட்டல் கேயாஸ் (நன்றி)
நண்பர் ஒருவர் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார். நல்ல விஷயம்தான்! பெண்ணின் வீட்டிலும் சம்மதம் சொல்லி விட்டார்கள். எந்த விதத் திருப்பமும் வராது என்று எதிர்பார்க்கப்பட்ட திரைக்கதையில் திடீர் முடிச்சாக நண்பரின் அப்பா கொஞ்சம் முகம் சுளித்தார். முடிச்சை எப்படி அவிழ்ப்பது என்று நண்பர், நான், அவரின் அம்மா மற்றும் காதலி ஆகியோர் கூடி யோசித்த போது கிடைத்த ஞானம் தான் இந்தப் பதிவின் மூலம். பிரச்சனை என்னவென்றால் நண்பரின் அப்பா நண்பரிடம் இருந்து இன்னும் கொஞ்சம் நட்பான அல்லது சகஜமான அணுகுமுறையை எதிர்பார்த்திருக்கிறார். அது நடக்காத பட்சத்தில் 'இன்ன பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று நண்பர் அறிவித்த சமயமும் அறிவித்த முறையும் அப்பாவிடம் தனக்கும் குடும்பத்துக்கும் இருக்கும் உறவுமுறை வெறும் பரிவர்த்தனைகளின் அளவில்தான் இருக்கிறதோ என்று எண்ண வைத்திருக்கிறது. பணம் வேண்டும் போது சம்பாதித்துத் தரவும், வெளியிடங்களுக்குச் செல்லும்போது துணைக்கு வரவும், உலகம் புரியாத வயதில் பிடித்துக் கொள்ள விரலைக் கொடுக்கவும், முதிர்ந்த காலத்தில் கௌரவமான இடைவெளியில் ஒதுங்கிக் கொள்ளவும் மட்டுமே ஆனதா தன் பங்கு என்ற குழப்பம் அவருக்கு. நண்பர் தன் அப்பா மேல் மிக உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறவர்தான். அப்பாவும் தன் மகன் மேல் மிக உயர்ந்த அன்பைக் கொஞ்சம் நாசூக்கான இடைவெளியில் வைத்திருக்கிறவர்தான். ஆனாலும் இவர்களுக்குள் ஒரு கருத்துப் பரிமாற்ற இடைவெளி எங்கோ எப்போதோ நுழைந்து மறைவாகவே வளர்ந்து விட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது.

இதே சமயத்தில் யதேச்சையாக வேறு சில நண்பர்களோடான உரையாடல்களிலும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான கருத்துப் பரிமாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க நேர்ந்தது. எனக்குக் கொஞ்சம் நெருடலாக உறைத்த ஒரு உண்மை - எம் தலைமுறை இளைஞர்கள் பெற்றோருடன் பேசுவதில்லை! பேசக் கூடாது என்று இல்லை. பேசுவதில்லை. அவ்வளவுதான்.

'என்னடா பேசுறது.. அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஃபோன்ல பேச முடியலடா.. நல்லா இருக்கீங்களா.. நல்லா இருக்கேன் | சாப்பிட்டாச்சா... சாப்பிட்டாச்சு | வேலைக்குப் போனியா.. வழக்கம் போல | பணம் ஏதாவது வேணுமா (அல்லது) வேணும்.. வேண்டாம் (அல்லது) அனுப்பி வைக்கிறேன் | இதுக்கு மேல எப்பயாவது மழை பெய்யுதா | இல்லேன்னா இப்போ சமீபமா இன்னைக்கு எவ்ளோ நேரம் கரண்ட் இருந்துச்சு.. இதுக்கு மேல என்னடா பேச முடியும் அப்பா அம்மாவோட' என்று ஒரு நண்பர் சமீபத்தில் கேட்டார். அவரும் நானும் சந்தித்துக் கொள்ளும் சமயங்களில் வெகு சாதாரணமாக மணிக்கணக்கில் எங்களால் பேசிக் கொண்டிருக்க முடியும். இந்த நண்பருக்கும் தன் பெற்றோர் மேல் மிகுந்த அபிமானம் உண்டு. ஆனாலும் இதற்குக் காரணம் என்னவென்று அலசினால் 'சின்னப் பிள்ளையில இருந்து இப்படியேதானே பழகி இருக்கோம். இதைச் சாப்பிடுன்னாங்க.. சாப்பிட்டோம். படின்னாங்க.. படிச்சோம்.. இப்போ திடீர்னு வா பேசலாம்னா வர மாட்டேங்குதேடா' என்றுதான் சொல்ல முடிந்தது அவரால்.