Dec 29, 2013

புனைபெயர் சூடிப் புஸ்தகம் போட்ட கதை - 1


உங்களில் பலருக்கும் என் முதல் புத்தகத்தைப் பற்றித் தெரிந்திருக்கலாம். 'முதல் போணி' என்ற தலைப்பில் 16 சிறுகதைகள் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு. 2013 ஜனவரி 1-ஆம் தேதி சிலபல நண்பர்கள் சூழ, சென்னை EA வணிக வளாகத்தில் கூட்டம் குறைவான ஒரு தாழ்வாரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து கலைத்து விடுவதற்கு முன்பு கிடைத்த விலை மதிப்பில்லாத 15 நிமிடங்களில் வெளியான புத்தகம் அது. சரியாக ஒரு வருடம் முடியப் போகிறது. இப்போது அந்தத் தொகுப்பில் வராத, அது குறித்த 17-வது கதையை உங்களுக்குச் சொல்ல ஆர்வமாக இருக்கிறேன். இதுதான் கோமதி சங்கர் என்ற நான் 'மதி' என்று புனைபெயர் சூடிப் புஸ்தகம் போட்ட கதை!

கல்லூரிக் காலம் தொட்டே தமிழில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதுவதில் ஆர்வம் கொண்டு அடிக்கடி முயற்சித்து அந்தக் கதைகளை எல்லாம் ஒரு கையேட்டில் தேதியிட்டு எழுதி வைத்திருந்தேன். நல்ல புத்தகங்களை வாசிக்க வாசிக்க, நல்ல அறிமுகங்கள் கிடைக்கக் கிடைக்க என் எழுத்தும் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறிக் கொண்டே வந்தது. வலைப் பதிவில் முகம் தெரியாத வாசக நண்பர்கள் ஊக்கம் கொடுக்கும் போதெல்லாம் மனதில் வந்து வந்து போய்க் கொண்டிருந்த ஒரு ஆசை - புத்தக வெளியீடு. கல்லூரிக் காலத்திலேயே ஆர்வம் மிகுந்து என் கதைகளில் சிறந்தவை என்று சுயபரிசீலனையில் தேர்வான ஐந்து கதைகளின் நகல்களை எடுத்துக் கொண்டு ஆனந்த விகடன் அலுவலகத்துக்கும் உயிர்மை அலுவலகத்துக்கும் சென்றேன். பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் எங்கேயாவது தொடங்குவோம். போகப் போக இந்தப் படைப்புலகச் சக்கரம் எப்படிச் சுழல்கிறது என்று கற்றுக் கொள்வோம் என்ற ஒரு எண்ணம். விகடன் அலுவலகத்தில் சிரித்த முகத்துடன் வரவேற்பறையில் அமர வைத்து என் நகல்களை வாங்கி வைத்துக் கொண்டு 'ஒரு மாதத்திற்குள் நாங்களாக அழைக்காவிடில் நீங்கள் மேற்கொண்டு இவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்யலாம்' என்றார்கள். உயிர்மையில் மனுஷ்யபுத்திரனையே வெகு சாதாரணமாக நேரில் பார்த்துவிட முடிந்தது. ஆனாலும் அந்தக் கணப் பரவசத்தில் சொதப்பு சொதப்பென்று சொதப்பித்தள்ளத்தான் முடிந்தது. 'இதற்கு முன் உங்கள் கதைகள் எங்காவது பிரசுரமாகி இருக்கின்றனவா?' என்றார் மனுஷ்யபுத்திரன். 'இல்லை சார்' என்றேன். 'வேறு பதிப்பகங்களில் முயற்சி பண்ணினீங்களா' என்றார் அவர். 'விகடனுக்குப் போனேன் சார்' என்றேன். அங்கு நடந்தவற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டு 'சரி.. உங்கள் கதைகளுக்குப் பொருத்தமான அறிமுகம் விகடனின் வாசகர்களிடம் கிடைக்குமா உயிர்மையின் வாசகர்களிடம் கிடைக்குமா' என்றார். அசாத்தியமான தன்னம்பிக்கையுடன் அதை விட அசாத்தியமான வெகுளித்தனத்துடன் 'இரண்டு தளங்களுக்குமே என்னிடம் கதைகள் இருக்கு சார்.. இடத்திற்கு ஏற்பத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்' என்றேன்.

பதிப்புலகம் பற்றிய அரிச்சுவடி கூட அறியாத பருவம். வெறும் ஆர்வம் மட்டுமே இருந்த காலம். அதிகம் முகம் சுளிக்காமல் ஒரு பத்து நிமிடம் பேசிவிட்டு 'உங்களைப் போல தினமும் எனக்கு நூற்றுக்கணக்கில் கதைகள் வருகின்றன. என்னால் எல்லாவற்றையும் படித்துவிட முடியாது. போய் உங்கள் தகுதியை நீங்களே ஆராய்ந்துவிட்டுத் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் இளைஞர் ஒருவரை இப்படிப் பார்ப்பது கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது' என்று அனுப்பிவிட்டார் மனுஷ்யபுத்திரன். நல்ல மனிதர் ! விகடனும் ஒரு மாதத்திற்குள் ஒன்றும் சொல்லவில்லை.


Dec 15, 2013

அடக்கம் அன்பையும் உய்க்கும்ஒவ்வொரு ஆணும்
ஒரு பெண்ணிடம் அடங்கிப் போக விழைவான்.
ஒவ்வொரு பெண்ணும்
ஒரு ஆணிடம் அடங்கிப் போக விழைவாள்.
அன்னார் இருவரும்
பரஸ்பரம் அடங்கி
ஓருணர்வில் நிறைவது
காதல்.

- மதி

படம் : நன்றி - ttstam

Dec 4, 2013

எல்லோருக்கும் கிடைக்காத இரண்டு நண்பர்கள்

படம் : டிஜிட்டல் கேயாஸ் (நன்றி)
நண்பர் ஒருவர் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார். நல்ல விஷயம்தான்! பெண்ணின் வீட்டிலும் சம்மதம் சொல்லி விட்டார்கள். எந்த விதத் திருப்பமும் வராது என்று எதிர்பார்க்கப்பட்ட திரைக்கதையில் திடீர் முடிச்சாக நண்பரின் அப்பா கொஞ்சம் முகம் சுளித்தார். முடிச்சை எப்படி அவிழ்ப்பது என்று நண்பர், நான், அவரின் அம்மா மற்றும் காதலி ஆகியோர் கூடி யோசித்த போது கிடைத்த ஞானம் தான் இந்தப் பதிவின் மூலம். பிரச்சனை என்னவென்றால் நண்பரின் அப்பா நண்பரிடம் இருந்து இன்னும் கொஞ்சம் நட்பான அல்லது சகஜமான அணுகுமுறையை எதிர்பார்த்திருக்கிறார். அது நடக்காத பட்சத்தில் 'இன்ன பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்' என்று நண்பர் அறிவித்த சமயமும் அறிவித்த முறையும் அப்பாவிடம் தனக்கும் குடும்பத்துக்கும் இருக்கும் உறவுமுறை வெறும் பரிவர்த்தனைகளின் அளவில்தான் இருக்கிறதோ என்று எண்ண வைத்திருக்கிறது. பணம் வேண்டும் போது சம்பாதித்துத் தரவும், வெளியிடங்களுக்குச் செல்லும்போது துணைக்கு வரவும், உலகம் புரியாத வயதில் பிடித்துக் கொள்ள விரலைக் கொடுக்கவும், முதிர்ந்த காலத்தில் கௌரவமான இடைவெளியில் ஒதுங்கிக் கொள்ளவும் மட்டுமே ஆனதா தன் பங்கு என்ற குழப்பம் அவருக்கு. நண்பர் தன் அப்பா மேல் மிக உயர்ந்த மரியாதை வைத்திருக்கிறவர்தான். அப்பாவும் தன் மகன் மேல் மிக உயர்ந்த அன்பைக் கொஞ்சம் நாசூக்கான இடைவெளியில் வைத்திருக்கிறவர்தான். ஆனாலும் இவர்களுக்குள் ஒரு கருத்துப் பரிமாற்ற இடைவெளி எங்கோ எப்போதோ நுழைந்து மறைவாகவே வளர்ந்து விட்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது.

இதே சமயத்தில் யதேச்சையாக வேறு சில நண்பர்களோடான உரையாடல்களிலும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான கருத்துப் பரிமாற்றம் பற்றிப் பேசிக் கொண்டிருக்க நேர்ந்தது. எனக்குக் கொஞ்சம் நெருடலாக உறைத்த ஒரு உண்மை - எம் தலைமுறை இளைஞர்கள் பெற்றோருடன் பேசுவதில்லை! பேசக் கூடாது என்று இல்லை. பேசுவதில்லை. அவ்வளவுதான்.

'என்னடா பேசுறது.. அஞ்சு நிமிஷத்துக்கு மேல ஃபோன்ல பேச முடியலடா.. நல்லா இருக்கீங்களா.. நல்லா இருக்கேன் | சாப்பிட்டாச்சா... சாப்பிட்டாச்சு | வேலைக்குப் போனியா.. வழக்கம் போல | பணம் ஏதாவது வேணுமா (அல்லது) வேணும்.. வேண்டாம் (அல்லது) அனுப்பி வைக்கிறேன் | இதுக்கு மேல எப்பயாவது மழை பெய்யுதா | இல்லேன்னா இப்போ சமீபமா இன்னைக்கு எவ்ளோ நேரம் கரண்ட் இருந்துச்சு.. இதுக்கு மேல என்னடா பேச முடியும் அப்பா அம்மாவோட' என்று ஒரு நண்பர் சமீபத்தில் கேட்டார். அவரும் நானும் சந்தித்துக் கொள்ளும் சமயங்களில் வெகு சாதாரணமாக மணிக்கணக்கில் எங்களால் பேசிக் கொண்டிருக்க முடியும். இந்த நண்பருக்கும் தன் பெற்றோர் மேல் மிகுந்த அபிமானம் உண்டு. ஆனாலும் இதற்குக் காரணம் என்னவென்று அலசினால் 'சின்னப் பிள்ளையில இருந்து இப்படியேதானே பழகி இருக்கோம். இதைச் சாப்பிடுன்னாங்க.. சாப்பிட்டோம். படின்னாங்க.. படிச்சோம்.. இப்போ திடீர்னு வா பேசலாம்னா வர மாட்டேங்குதேடா' என்றுதான் சொல்ல முடிந்தது அவரால்.

Aug 26, 2013

அம்பலக்குளத்தில் முங்கியபடி மூன்று நாட்கள்பல வருட காலமாய்ப் பக்கத்திலேயே இருந்திருந்தும் நாம் தொட்டறிந்திராத விஷயங்கள் எல்லோருக்கும் சிலது இருக்கும் - அலமாரியில் இருக்கும் புஸ்தகம், அடுக்களையில் இருக்கும் ஐந்தறைப் பெட்டி, அதிர்ஷ்டம் குறைந்தவர்களுக்குக் காதலி கூட! அது போலத்தான் எனக்குக் கேரளம்! 'இந்தாத்தானே இருக்கு... எப்பயாவது போவோம்' என்ற மனநிலையிலேயே வாழ்வின் கால் பாகத்தைக் கழித்து விட்டேன். சின்னப் பிள்ளையில் விவரம் அறியாத பிராயத்திலும், கல்லூரிச் சுற்றுலா என்ற பெயரில் மந்தையாட்டைப் போலவும் எட்டிப்பார்த்ததுதான். கேரளா ஏனோ எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருந்தது. சமீபத்தில் நண்பர் ரகு ஒரு நாள் சாயந்திரம் தூக்கத்தில் எழுப்பி விளித்து, "ஜி.. கேரளால எங்க வீட்டில ஒரு சின்ன விசேஷம். வரீங்களா எல்லாருமாப் போவோம்" என்றார். சடாரென்று அந்த வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

ஒரு வெள்ளிக் கிழமை விடுப்பெடுத்துக் கொண்டு நான், ரகு, சிவா, பிரபு என்று நால்வரும் கிளம்பி விட்டோம். சென்னையில் இருந்து ஷோரனூர் வரை முன்பதிவு செய்த இரயில். அங்கிருந்து பட்டாம்பி வரை முன்பதிவு செய்யாத இரயில். பட்டாம்பியில் நள்ளிரவில் சென்றிறங்கி அங்கு திறந்திருந்த ஒரே ஒரு சாயாக் கடையில் அரை மணிக்கொரு தரம் சாயா குடித்தபடியே பொழுதைப் புலர வைத்துவிட்டு, அங்கிருந்து குன்னங்குளம் செல்லும் முதல் பேருந்தைப் பிடித்துக் குன்னங்குளத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துக் காவீடு கிராமத்தில் இறங்கி அங்கிருந்து ஈரமான சாலை ஒன்றின் வழியாகக் கொஞ்ச தூரம் நடந்து நாங்கள் சேர வேண்டிய வீட்டை அடைந்தோம். அந்தப் பட்டாம்பிச் சாயாக் கடையில் பத்திரி என்று ஒரு ஐட்டம் சாப்பிட்டோம். எல்லா இடத்திலும் கிடைக்குமாம். தனியாகவும் சுவைக்கவில்லை. சாயாவோடும் சுவைக்கவில்லை. இந்தக் கேரளப் பயணத்தில் என்னைப் பெரிதும் கவராத ஒரே விஷயம் அதுதான்.

நாங்கள் போனது ரகுவின் தாத்தா வாழ்ந்த வீடு. தற்போது அவரின் பாட்டியும் தாய் மாமா குடும்பமும் வசித்து வருகிறார்கள். நல்ல அமைதியான சூழலில் இந்தப் பக்கம் நூறு தென்னை, அந்தப் பக்கம் நூறு தென்னை, நடுவில் ஒரு திண்ணை வைத்த ஓட்டு வீடு. முதல் பார்வையிலேயே பிடித்துப் போய்விட்டது. அந்த வீட்டின் திண்ணையில் மறைந்த ரகுவின் தாத்தாவின் சாய்வு நாற்காலி இன்னும் கம்பீரமாய் அமர்ந்திருந்தது. காவீடு கிராமம் குருவாயூரிலிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தொலைவுதான். ஆனாலும் சுற்றுலாப் பயணிகள் யாரும் தேடி வராத ஒரு இயல்பான, மெதுவான, அழகான வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த கிராமம் அது! கெல்ஃபின் பணம் ஊரிலிருந்த வீடுகளின் கட்டுமானத்தரத்தில் பிரதிபலித்தது. ஊர்வாசிகள் எல்லோரையும் எல்லோர்க்கும் தெரிந்திருந்தது.

Aug 19, 2013

கண் சிப்பி


செடார் மரத்தின்
உச்சிக் கிளையினின்று
தேவ தூது தாங்கி வரும்
ஒற்றை மழைத் துளி
இறங்கி
இறங்கி
இறங்கி நெருங்கி
நோக்கி நின்ற விழியில் விழுந்து
கண் இமைத்த ஒரு கணம்
எல்லாமே
தெரிந்து மறைந்தது .

- மதி

(புகைப்படம்: நண்பர் விஷ்ணு)

Aug 6, 2013

மங்குல் வெள்ளம் கடலினும் பெரிதேநெல் அறியும்.
மேகம் ஒளித்து வைத்திருக்கும்
துளி மழை
கடலினும் பெரிதென.
அவள் உள்ளம்
ஒளித்து வைத்திருக்கும்
ஒரு சொல் விடை
அது போலவே!

- மதி


மழை கொணர் மகளிர்மாலைப் பொழுதுகளில்
மாம்பலம் இரயிலடியில்
மங்கையர் இன்னும்
தாவணியுடுத்தித் தழைய வருகிறார்கள்.
சென்னையில் மழை பெய்யலாம்.
தப்பில்லை !

- மதி

( படம் தந்து உதவிய புண்ணியவான் - WoodleyWonderWorks )

Jun 30, 2013

பெண்களின் கண்கள்


ஒரு ஆர்வத்தில் இந்தக் கவிதையைக் கொஞ்சம் வித்தியாசமான வடிவத்தில் எழுதிவிட்டேன்.. Blogger-ல் அதைச் சரியாக align பண்ண முடியவில்லை. அதனால் கவிதையைப் பிய்த்துப் பிய்த்துப் படமாய் எடுத்துப் படைத்துள்ளேன். வாசிக்கக் கஷ்டமாய் இருந்தால் கொஞ்சம் adjust செய்து கொள்ளவும். நன்றி....

Jun 18, 2013

நகுக


மனிதர்கள் சிரிக்கும்போது
உலகம் அத்தனை அழகாகிறது.
தூங்கும் குழந்தை
அழகுப் பெண்
ஓட்டைப் பல்லன்
பொக்கைக் கிழவன்.

இடுக்கண்

அது பாட்டுக்கு வந்து கொண்டேதான் இருக்கும்.

அசிங்கம் மூச்சு முட்டுகிறது.

தயை கூர்ந்து
நகுங்கள். 

- மதி

படம் தந்துதவியமைக்கு நன்றி : Alexandra Bellink

Jun 2, 2013

நதி போலும் என் காதல்

அண்மையில் Paulo Coelho-வின் 'Aleph' புதினத்தை வாசித்து அதன் பாதிப்பில் படைத்த ஒரு கவிதையே இது. ஆண்-பெண் உறவில் நாம் எளிதில் பெயரிட்டு வகைப்படுத்தக்கூடிய உறவுகள் மிகக் கொஞ்சமே. ஒவ்வொருவருக்குள்ளும் பெயரிட முடியாத ஒரு காதல் இருக்கும். அத்தகைய ஒரு காதலுக்கு மிகப் பொருத்தமான ஒரு விளக்கத்தை இந்த நாவலில் படித்தேன். ஆண் பெண்ணைக் காதலிப்பது போலல்லாமல் கடல்வழிப்படூஉம் ஒரு நதி அதன் கரையைக் காதலிப்பது போல நாம் ஒவ்வொருவரும் ஒரு பெண்ணையாவது காதலித்துக் கொண்டிருப்போம். அவ்வாறான அடையாளமற்ற காதல்களுக்கு இக்கவிதையைச் சமர்ப்பிக்கிறேன். 


படத்தேர்வு : பாட்டுடைத் தலைவி
Image courtesy : Monica Philosophergurl (via Pinterest)

ஆண் பெண்ணைக் 
காதலிப்பது போலன்றி
ஆதிச் சுடர் அண்டத்தைக் 
காதலிப்பது போலவுமன்றி
நதி கரையைக் 
காதலித்தல் போலானது
நம் காதல். 

நதியாய் நான்
ஒரே நேரத்தில்
ஓடிக் கொண்டும்
நின்று கொண்டும் இருக்கிறேன். 
அதே சமயத்தில் நீ
நின்று கொண்டும்
ஓடிக் கொண்டும் இருக்கிறாய். 
தொட்டுக் கொண்டே இருப்பினும்
நம் தளங்கள் வெவ்வேறு.
நாம் சேர்வதில்லை.

May 20, 2013

படத்துக்கு இன்னும் பேர் வெக்கலே - 2call 3 - 2 minutes later

ர: ஹலோ.. யோசிச்சியா?
கா: ம்
: என்ன யோசிச்சே?
கா: இங்க பார் தம்பி.. நான் இந்தத் தொழிலுக்கு வரும்போதே இந்த மாதிரில்லாம் வரலாம்னு தெரிஞ்சுதான் வந்தேன்.. எதுக்கு சினிமா மாதிரி என்னை மிரட்டி டைம் வேஸ்ட் பண்ணிட்டு? எனக்கு என் உயிரும் என் பொண்டாட்டியும் முக்கியம்.. நீ நிஜமா அவளைக் கடத்திட்டியான்னு கூட எனக்குத் தெரியாது.. ஆனா வாய்ப்பிருக்கு.. நான் risk எடுக்கமாட்டேன்.. என்னைப் பத்தி ஏதோ ஒரு reliable sourceகிட்டே இருந்து information collect பண்ணியிருக்கே. homework பண்ணியிருக்கே.. பொய் சொல்லமாட்டேன்னு நம்புறேன்.. என்ன வேணும் சொல்லு?

Raghu claps his hands..

: கார்த்தி சார்.. சும்மா சொல்லக்கூடாது.. நீங்க சூப்பர் சார்.... நானும் சும்மா உங்களை மிரட்டணும்னு நெறைய யோசிச்சேன்.. ரொம்ப practical இருக்கீங்க சார் நீங்க! உங்க கேரக்டர்க்கு ஒரு லைக் சார்...
கா: தம்பி.. விஷயத்துக்கு வா..
: பயமா இருக்கா சார்?
கா: (அமைதி)
: என்ன சார் யோசிக்கிறீங்க?
கா: அதான் சொன்னேனே.. நீ சொல்றது உண்மையா இருக்கலாம்னு எனக்கு ஒரு சந்தேகம் வந்துருக்கு.. அவ்வளவுதான்...
: ப்ச் ப்ச் ப்ச்.. பத்தாது சார். எனக்கு நீங்க பயப்படணும்.. அப்போதான் அடுத்த கட்டம். மிரட்டினாலும் பிரயோஜனமில்லியேன்னு சொல்லிட்டீங்க... சரி.. இப்படி முயற்சி செய்வோம்.. இப்போ நீங்க என் situation இருக்கீங்கன்னு வச்சுக்குவோம்.. நீங்க ஒருத்தரைக் கடத்திக் கட்டிப் போட்டுட்டு ஃபோன் பண்ணி பேசுறீங்க.. அவரை நீங்க எங்கே வேணா வச்சிருக்கலாம்.. அவர் பொண்டாட்டியையும் நீங்க கடத்தி வச்சுருக்கீங்க.. அவங்களையும் நீங்க என்ன வேணா செய்யலாம்... வயசான ஆளுங்க.. so sex torture  எல்லாம் கெடையாது.. ஆனா  violence is not ruled out.  of course  நீங்க கடத்தி வெச்சுருக்கிறவரு உங்களுக்கு அதுக்கெல்லாம் chance குடுக்க மாட்டேன்.. practicalla முடிச்சுக்கலாம்.. டக்குன்னு மேட்டருக்கு வான்னு சொல்றார்.. ஆனா அவரை இன்னிக்கு freea விட்டுட்டாலும் உங்களை மோப்பம் பிடிச்சுப் பிடிச்சு வந்து பத்து வருஷம் ஆனாலும் revenge எடுக்கிற character  அவர்.. risk எடுக்க மாட்டாராம் !! இப்போ அவரைக் கடத்திட்டு நீங்க எவ்ளோ risk எடுக்கிறீங்கன்னு ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க..
கா: (அமைதி)
: கார்த்தி சார்?
கா: கேட்டுட்டுதான் இருக்கேன்
: அதெப்படி சார்.. எனக்குத் தெரியும்? கதை கேக்கிற மாதிரி அப்பப்போ உம் கொட்டுங்க.. இல்லேன்னா நான் உங்க பொண்டாட்டி தலையில் கொட்டிடுவேன் .. பாத்து...

படத்துக்கு இன்னும் பேர் வெக்கலே - 1


சில மாதங்களுக்கு முன் நண்பர் லக்ஷ்மணன் என்னிடம் 'ஒரு short film எடுக்கலாம்னு இருக்கேன் பாஸ்.. கதை ஒண்ணு இருக்கு.. உங்க blog வாசிச்சேன்.. நீங்க திரைக்கதை வசனம் எழுதித் தந்தா நல்லா இருக்கும்னு நெனைக்கிறேன்.. என்ன பண்ணலாமா' என்று என்னிடம் கேட்டார். இன்று வெளி வந்து நல்ல பேர் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் சூது கவ்வும் படத்துக்கும் நாங்கள் பண்ணிய கதைக்கும் கொஞ்சம்  சின்னச் சின்ன ஒற்றுமைகள் இருக்கும். எங்கள் கதை இந்தப் படம் வருவதற்கு முன்பே முடித்து வைத்தது. லக்ஷ்மணனின் கம்பெனி அமெரிக்காவே உங்களை நம்பித்தான் இருக்கு என்று சொல்லி இந்த இடைக்காலத்தில் அவரை onsite அனுப்பிவிட எங்கள் script காகிதத்திலேயே தூங்கி விட்டது. நண்பரின் அனுமதியுடனும் ஆசியுடனும் அந்த முழு script-ஐயும் உங்களுக்காக என் வலைப்பதிவில் இதோ பதிகிறேன்.. திரைக்கதை வசனம் - அடியேன். கதை - லக்ஷ்மணன். இந்த credits கொடுத்துவிட்டு இந்தத் திரைக்கதையைப் படமாக்க யாரும் விரும்பினாலும் நாங்கள் தயார்.

-------------------------------------------
characters - Kaarthi sir - Don; Ragu - Caller ; Satheesh - Driver of don; Saanaa (short form of saravanan); Jimmy - nick name for gym body guy; Seetha - wife of don

Credits opening..
Scene 1 - black screen - Just voice

டேய் ரகு .. செமையா இருக்குடா இந்த book
இப்போதான் முடிச்சியா? செம கதைடா அது.. 
Credits..
அதுக்கு?.. அவரைப் போட்டுத் தள்ளிரலாம்னு சொல்றியா.. மூஞ்சிகளப் பாரு!
Credits..
சதீஷு.. அதெல்லாம் நெனைச்சா பண்ணலாம்யா
Credits ending…

Scene 2 – In long shot..
Kaarthi sir getting into his car and starts the engine..
He gets the car out of parking and ready to go.. but the car doesn’t move..
(music plays)a gym body guy comes there and pull him out of the car..

Scene 3 - near a temple
Seethamma gets a call from a stranger..

ஹலோ சீதாங்களா?.. உங்க husband கார்த்திக் பரமசிவம் கொஞ்ச நேரத்துக்கு முன்னே கார் ஆக்சிடெண்ட் ஒண்ணுல மாட்டி இங்க வந்து அட்மிட் பண்ணிருக்காங்க. நீங்க உடனே வர முடியுமா..

Conversations muted.. (music plays)
She calls for her driver..  he comes and they both started in the car..

Scene 4 – Inside a room

Camera shows a stack of books - The white tiger, Sigmund Freud books, some self-development books on developing sales call efficiency, Mills& Boons novel, vikatan, kumudham etc. .
near to them.. on the table, a guy is sitting and watching a movie in his laptop..
he sees the time in his watch and he picks up a phone which is next to his laptop and dials a number..

Feb 23, 2013

நகர்ப்புறப் புனிதம்


மின்சார ரயிலில்
கஷ்டப்பட்டுப் பிடித்த இருக்கையை
கால் தளர்ந்த பாட்டி ஒருத்திக்குக்
கொடுத்து விடுவதை விட
கடினமானதும்
புனிதமானதுமான
முடிவு
கொஞ்சம் கூச்சத்தோடு ஆசைப்படும்
குழந்தைச் சிறுமிக்கு
ஜன்னல் சீட்டை
விட்டுத் தருதல்!

- மதி

படம் : நன்றி - ஜேம்ஸ்

Feb 14, 2013

மதி - ஒரு நேர்காணல்

Freshface publications சமீபத்தில் தங்கள் facebook பக்கத்தில் வெளியிட்ட எனது சிறு நேர்காணல். அவர்களின் பக்கத்தில் காண இந்தச் சுட்டியைக் கிளிக்குங்கள்...

நேர்காணல் : மதி - புகற்சி பதிப்பகம்

இவ்வலைப்பதிவில் வாசிக்க தொடர்ந்து கீழ் செல்லுங்கள் ..
1.முதல் போணி உருவான ரகசியம்?

ரகசியம் என்றெல்லாம் பெரிதாய் இல்லை. இது ஒரு தேடல் - தொடக்கமா முடிவா என்பதைக் காலம் தான் சொல்லும்! இலக்கியத்திலும் எழுத்திலும் கொஞ்சம் தீவிரம் கூட்டத் துவங்கியதுமுதலே புத்தகம் வெளியிடும் ஆசை வந்துவிட்டது. கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி வந்தாலும் அறிமுகத்திற்குச் சிறுகதைகள் தான் தோதாக இருக்கும் என்று எண்ணியிருந்தேன். அவ்வப்போது அறிமுக எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்கும் போதெல்லாம் என் முதல் புத்தகத்தைப் பற்றி நினைத்துக் கொள்வேன். சிலபல பதிப்பகங்களை நேரில் சென்று சந்தித்திருந்தேன். அங்கே இன்னும் என்னைக் கிடப்பில் வைத்திருக்கக் கூடும். என்றாவது முளைக்கும் என்ற நம்பிக்கையில் கதைகளை விதைத்துக் கொண்டேயிருந்தேன். எனக்குப் பிடித்த பாலோ சீலோவின் வரிகள் இவை : 'உன் மனம் விரும்புவதை நோக்கி முழுமுனைப்புடன் சென்று கொண்டேயிரு. உன் பயணத்துக்கு இந்த அண்ட சராசரமே ரகசியமாய்க் கூடி உதவும்' ! அது போல்தான் 'முதல் போணி' புத்தகமாய் வருவதற்கு இப்போதுதான் நேரம் அமைந்து வந்திருக்கிறது. இதற்குப் பெரிதும் உதவியது இணையமும் (குறிப்பாக என் பதிப்பாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த ஃபேஸ்புக்கும்) இனிய நண்பர்களும்தான். புத்தகம் வெளியானதில் மகிழ்ச்சி என்றாலும் மகிழ்ச்சி லேசாக யானைக்கு மதம் பிடிப்பதைப் போல் மீறுகையில் என் தோழி ஒருத்தி சொன்னதை நினைவு கொள்கிறேன். எல்லாரும் புத்தகம் வெளியானதற்கு வாழ்த்து உரைத்து இதை ஒரு வாழ்நாள் சாதனையாகப் பேசிக் கொண்டிருந்த வேளையில் அவள் 'இங்க பாரு .. முதல் புத்தகம் போட்டாச்சுன்னு ரொம்ப சந்தோஷப் பட்டுத் திருப்தி ஆகிடாதே.. இப்போதான் ஆரம்பிச்சிருக்கே.. எவ்வளவு தூரம் போக முடியுமுன்னு நீ காட்டறதிலேதான் இருக்கு'  என்றாள். உண்மைதான்!


Jan 17, 2013

பொம்மைக்கூடும் பிள்ளைத்தமிழும்
ஒரு குழந்தை
தன் பொம்மைக்கூட்டின் ஜீவராசிகட்கு
உம்மை அறிமுகம் செய்து வைத்தால்
தெரிந்து கொள்ளலாம்.
அதன் நட்புக்கும்
நம்பிக்கைக்கும்
அருகதை பெற்று விட்டீர் என்று.

அனுபவத்தில் சொல்கிறேன் !

என் வீட்டின் சின்ன ராணி
தன்னொடு ஊஞ்சலில் உடனாடும்
பஞ்சடைத்த பாப்பாக்களிடம்
எனக்கும் இடம் தரச் சொல்வாள்.
அங்கீகாரச் சான்றிதழ் இதுதான் !