முதல் போணி - என் முன்னுரை



என் முதல் சிறுகதைத் தொகுப்பு 'முதல் போணி'  என்ற பெயரில் சமீபத்தில் புகற்சி பதிப்பகத்தார் மூலம் புத்தகமாய் வெளிவந்துள்ளது.. புத்தகத்தை இங்கிங்கெலாம் வாங்கலாம். உடுமலை.காம் | நன்நூல்.காம் (கடல் கடந்து வாழ்வோர் கூட இங்கே வாங்கலாம்) | நன்நூல்.இன் | indiaplaza.com | flipkart

புத்தகத்தின் முன்னுரை இதோ:

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் தீராத கோபத்தில் துடிக்காத, பசியால் வாடாத, தோல்விகளால் துளைக்கப்படாத, ஒரு போர்முனையில் அனுதினமும் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டிருக்காத, காதலிலோ சமமான வேறு போதைகளிலோ முப்போழ்தும் மூழ்கிக் கிடக்காத - சுருங்கச் சொன்னால் கதைகள் எழுதுவதற்கான பெருவாரியான காரணங்கள் எதுவுமே இல்லாத அமைதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழக இளைஞனின் பேனா படைத்தவை. ஒரு பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு நகரத்தில் பிழைத்துக் கொண்டு, தீபாவளிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே ஊருக்கு ரயிலில் முன்பதிவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் பலரைப் போலவேதான் இந்தக் கதைகளைப் படைத்த எனது யதார்த்த வாழ்வும் இருக்கிறது. அந்த யதார்த்தத்தின் நடுவேயும் பலரும் கவனிக்க மறந்துவிடும் சுவாரசியமான நிகழ்வுகளையும், இந்த யதார்த்தம் லேசாகச் சலிக்கும் போது நான் நுழைந்து கொள்ளும் என் கற்பனை தேசத்தின் சில புனைவுகளையும் இத்தொகுப்பில் சிறுகதைகளாக எழுதியிருக்கிறேன்.


சமயங்களில் நாம் எங்காவது பயணம் போகையில் ஆட்டோக்களில் செல்வோம். ஆட்டோக்காரர்கள் வெகு சுவாரசியமான மனிதர்கள். உலகம் முழுக்க நடப்பவற்றையெல்லாம் ஒரு தரைப்பறவை போல வேடிக்கை பார்த்துக் கொண்டே இருப்பவர்கள். சவாரிக்கு வரும் மனிதர்களில் கிட்டத்தட்ட அத்தனை வகையானவர்களையும் கவனித்திருப்பார்கள். கோடானுகோடி கதைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பார்கள். மற்ற வாகனங்களைப் போல் அல்லாமல் அவர்களால் ஒவ்வொரு சவாரியிலும் ஒரு புது மனிதருடன் ஒற்றைக்கு ஒற்றையாகப் பேசிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சில ஆட்டோக்காரர்கள் சிறந்த கதைசொல்லிகளாகவும் இருக்கிறார்கள். அபூர்வமாய்ச் சில சமயம் ஆட்டோக்காரரும் சவாரி செய்பவரும் மிகப் பழகிய நண்பர்கள் போல் பேசிக்கொண்டே பயணித்திருப்பதைக் கண்டிருப்போம். கதைகளைக் கேட்க நல்ல பயணிகள் கிடைத்துவிட்டால் அவர்கள் தங்கள் கதைப் பெட்டகத்தைத் திறந்து வழி நெடுகிலும் கதையாடிக் கொண்டே செல்வதுண்டு. பயணத்தில் சாலையின் இருமருங்கிலும் காணும் காட்சிகள் கட்டடங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களிடம் ஒரு கதை இருக்கலாம். அதே போல் தம் பெட்டகங்களில் பல நாளாய்ச் சேமித்து வைத்த புனைவுக்கதைகளும் அவர்களிடம் எக்கச்சக்கமாய் இருக்கலாம்.   இப்படியாப்பட்ட ஒரு சவாரி நமக்கு அமைந்து விடும் அந்த ஒரு நாள் மறக்க முடியாததாகிவிடும். தினமும் பழகின பாதையாய் இருந்தாலும் அந்தக் கதைசொல்லியின் அருகாமையால் அந்தப் பயண அனுபவம் மனதில் பதிந்து விடும். வேடிக்கை பார்ப்பதும் கதை கேட்பதும் பிடிக்காதவர்கள் யாரும் உண்டா என்ன!

அதுபோல் ஒரு பயணம்தான்  இந்த 'முதல் போணி'. இந்தப் பயணத்தில் ஒரு கதைசொல்லியாய் நான் உங்களுடன் உடன் வருகிறேன். அதுவும் மீட்டருக்கு மேல் எதுவும் கேட்காமல். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, ஆனால் உப்பு உரைப்பில் குறைவில்லாத பல கதைகளை நீங்கள் இந்தப் பயணத்தில் கேட்கலாம். அரைமணி நேர நிகழ்வுகளின் கதை முதல் அறுபது வருட வாழ்க்கையின் கதை வரை எனக்குத் தெரிந்த சுவாரசியமான கதைகளைத் தொகுத்திருக்கிறேன். இங்கே காதல் உண்டு. கல்லூரிகள் உண்டு. களவு உண்டு. கடவுள் உண்டு. கனவாராய்ச்சியும் உண்டு. பாடாய்ப் படுத்தும் ஒரு நாயின் கதை உண்டு. பயந்து சாகும் ஒரு பேயின் கதை உண்டு. அன்ரிசர்வ்டு பயணமும் உண்டு. அமானுஷ்யப் பயணமும் உண்டு. அரசு அலுவலகப் பயணமும் உண்டு. வேடிக்கை பார்க்கவும் கதை கேட்கவும் உங்களுக்குப் பிடிக்கும்தானே?

'முதல் போணி' - இது என் முதல் புத்தகமாகவும் அமைகிறது. போணி பண்ணியமைக்கு நன்றி. இந்தப் பயணம் உங்களுக்கும் எனக்கும் ரசனைக்குரியதாய் அமையும் என்று நம்புகிறேன். 



- மதி






கருத்துகள்

  1. Great Gomathi Shankar. Could relate and connect to what you have blogged. Pls do send me a copy of the book if you can.

    Thank you.

    பதிலளிநீக்கு
  2. Thanks Nambi .. Glad to hear from you on my blog for the first time :-) The book will be releasing in December and available on flipkart and major book sellers as well.. Hope you take the ride!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..