Nov 2, 2012

முதல் போணி - என் முன்னுரைஎன் முதல் சிறுகதைத் தொகுப்பு 'முதல் போணி'  என்ற பெயரில் சமீபத்தில் புகற்சி பதிப்பகத்தார் மூலம் புத்தகமாய் வெளிவந்துள்ளது.. புத்தகத்தை இங்கிங்கெலாம் வாங்கலாம். உடுமலை.காம் | நன்நூல்.காம் (கடல் கடந்து வாழ்வோர் கூட இங்கே வாங்கலாம்) | நன்நூல்.இன் | indiaplaza.com | flipkart

புத்தகத்தின் முன்னுரை இதோ:

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் தீராத கோபத்தில் துடிக்காத, பசியால் வாடாத, தோல்விகளால் துளைக்கப்படாத, ஒரு போர்முனையில் அனுதினமும் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டிருக்காத, காதலிலோ சமமான வேறு போதைகளிலோ முப்போழ்தும் மூழ்கிக் கிடக்காத - சுருங்கச் சொன்னால் கதைகள் எழுதுவதற்கான பெருவாரியான காரணங்கள் எதுவுமே இல்லாத அமைதியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தமிழக இளைஞனின் பேனா படைத்தவை. ஒரு பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு நகரத்தில் பிழைத்துக் கொண்டு, தீபாவளிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே ஊருக்கு ரயிலில் முன்பதிவு செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் பலரைப் போலவேதான் இந்தக் கதைகளைப் படைத்த எனது யதார்த்த வாழ்வும் இருக்கிறது. அந்த யதார்த்தத்தின் நடுவேயும் பலரும் கவனிக்க மறந்துவிடும் சுவாரசியமான நிகழ்வுகளையும், இந்த யதார்த்தம் லேசாகச் சலிக்கும் போது நான் நுழைந்து கொள்ளும் என் கற்பனை தேசத்தின் சில புனைவுகளையும் இத்தொகுப்பில் சிறுகதைகளாக எழுதியிருக்கிறேன்.

Oct 29, 2012

பிரபஞ்ச மயக்கம்
பூமி
பால்வெளி
பேரண்டம்
அதனினும் பெரிதாய்
அதனினும் பெரிதாய்
பெரிதின் எல்லையாய்.

துரும்பு
அணு
துகள்
அதனினும் சிறிதாய்
அதனினும் சிறிதாய்
சிறிதின் எல்லையாய்.

என் தோற்றம்
இரண்டும் ஒன்றென்பதே.

எனில்
இந்த வட்டப்பாதையில்
கிழக்குத் தாம்பரத்தில் இருக்கும்
என் வீட்டு மொட்டை மாடி
பெரிதா?
சிறிதா?

நான் எங்கே இருக்கிறேன்?

- மதி

(படம் அளித்து உதவிய நாசா ரீமிக்ஸ் ஆசாமிக்கு நன்றி. Nasa Remix Man's photostream)

Oct 13, 2012

நூறு கோடி மக்கள்
பேருந்திற்காய்க் காத்திருக்கிறேன்
சட்டை போடாத
ஒரு சிறுவன்
கையைச் சுரண்டி
காசு கேட்கிறான்
வழமை போல் மறுக்கிறேன்
சில்லறை இல்லை என்று
பொய் சொல்கிறேன்
கூச்சம்
கழிவிரக்கம்
வறுமை
வருத்தம்
ஏமாற்றம்
எள்ளல்
கோபம்
யாசகம்
இவை ஏதும் அற்ற
ஒரு வெற்றுப் பார்வையை
என் தட்டில் இட்டு நகர்கிறான் அவன்.
பயம் வருகிறது.

- மதி

(படம் அளித்து உதவிய யஷ்னாவுக்கு நன்றி.. Yashna's photostream )

Aug 15, 2012

அழகில் மயங்கி அதனூடே வாழ்ந்தும்....வயது வந்த
அத்தனை ஆணும் பெண்ணும்
வாழ்வில் கட்டாயம்
ஒரு சின்னஞ்சிறு காலம்
நார்சிஸஸ்ஸாய் மாறுகிறோம்.
கரை கண்டு விட்டோரையும்
காணச் சகியாதோரையும்
தவிர்த்து
பிறர்
அவ்வாறே தொடர்கிறோம்.

-மதி

(படம் அளித்து உதவிய Cea.க்கு நன்றி .. Cea.'s photostream)
(இவர்தான் நார்சிஸஸ்)


Aug 6, 2012

செவ்வாய்க் கிழமை கவிதை எழுத முடியாது
யோசனைகள்
எக்குத்தப்பாய்ப் பெருகி விடும்
மனம்
அதை வாய் பார்த்தே
தூக்கத்தைத் தொலைத்து விடும்
நாளை வேலைக்கு
அரை நாள் விடுப்பாகி விடும்.

முழு நேர இலக்கியம்
மாணவர்களுக்கும்
மாவீரர்களுக்கும்
மடையர்களுக்கும் மட்டுமே
சாத்தியமாகிறது.

என்னால்
செவ்வாய்க்கிழமை
கவிதை எழுத முடியாது!

-மதி

(படம் அளித்து உதவிய மனு மனோகருக்கு நன்றி. Manu Manohar's photostream)

Jul 27, 2012

காதல்
ஒரு மனத்தில்
ஒரு கணத்தில்
உதயமான மின்னலைத்
தக்க வைத்துத் தடம் புரட்டி
மனம் மாற்றி
மின்னிணைத்து
மறு கண்ணில் ஒளிர வைக்கும்
மாயம்
காதல்.

- மதி

(பி.கு : இந்தப் பதிவில் ஒரு சின்ன டகால்டி வேலை இருக்கிறது.. கண்டுபிடிக்கிறீர்களா பார்ப்போம்)

படம் அளித்து உதவிய நட்டுவுக்கு நன்றி. Nattu's photostream

Jul 13, 2012

கழுதைக்குக் கலியாணம் குட்டிச்சுவரிலே


திரிஷா என்றது மனம்.
கண்ணாடியில் முகம் பார்த்தது.
சரி திவ்வியா என்றது.
சட்டென்று சங்கீதா என்றது.
லேசாய்ச் சில நேரம்
லாவண்யா பெயரையும் சொன்னது.
பிறகொரு பின்னிரவில்
கவிதா என்று கத்தியது.

Jul 2, 2012

கனவுகளை விற்கிறேன் .. முதலீடு செய்கிறீர்களா ? - ஓர் எழுத்தாளனின் கடிதம்
வணக்கம்.

என் வலைப்பதிவில் வழக்கமாக வரும் பிற பதிவுகளில் இருந்து இந்தப் பதிவு கொஞ்சம் வேறுபட்டது. இதனை ஒரு திறந்த கடிதமாக எழுதுகிறேன். யோசித்துப் பார்த்தால் சமீப காலங்களில் இந்த 'திறந்த கடிதம்' (ஓப்பன் லெட்டெர்) என்பது கவிதை, கட்டுரை போல் ஓர் இலக்கிய வடிவமாகவே மாறி வருகிறதோ என்று தோன்றுகிறது. அத்தனை பேர் எழுதுகிறார்கள் ! இந்தக் கடிதத்தில் நான் உங்களிடம் கொஞ்சம் நேரத்தையும் கொஞ்சம் பணத்தையும் கேட்கப் போகிறேன். 'சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும்,,, காசு குடு' என்று சப்பாணி கமல் முதல் 'சின்ன .. மாரியம்மன் கோவிலுக்குக் கூழ் ஊத்துறோம்' என்று கார்த்திக் வரை .... விக்கிபீடியாவின் ஜிம்மி வேல்ஸிலிருந்து உங்கள் பள்ளியில் சுதந்திர தினத்துக்குக் கொடிக்காசு வசூலிப்பது வரை நீங்கள் இது போல் பலவும் பார்த்திருக்கலாம். நான் ஏன் கேட்கிறேன் என்று வாசித்துப் பாருங்கள்.

முதல் புத்தகம் என்னும் கனவை ஒவ்வொரு எழுத்தாளனும் மிகப் பத்திரமாகத் தனக்குள் செதுக்கிச் செதுக்கி அதை நனவாக்க முயன்று கொண்டேயிருக்கிறான். அவன் காணும் அதே கனவை அவன் விழிகளின் வாயிலாகவே கண்டு அவனுக்கு ஒரு துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க ஒரு நல்ல பதிப்பகத்தின் துணை வேண்டும். சில சமயங்களில் பதிப்பகங்கள் அறிமுகங்களில் முதலீடு செய்கையில் கொஞ்சம் ஜாக்கிரதையாக எழுத்தாளனை முதலீட்டாளனாகவும் மாறச் சொல்வதுண்டு. கனவு நனவாகும் வாய்ப்பென்று கைக்காசைப் போட்டுப் புத்தகம் வெளியிட்ட கதை ஒன்று படைப்பாளிகளில் பலரிடமும் கட்டாயம் இருக்கும். அப்படி ஒரு கதையைத் தான் நான் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

Jun 12, 2012

சுத்தம் சோறு போடும்வீட்டைச் சுத்தம் பண்ணி நாளாச்சு
குப்பைக்குள் கொஞ்சூண்டு
வீடு மீதமிருந்தது !

ஒரு வெள்ளிக்கிழமை
ரெண்டாம் சாமத்தில்
சடாரெனச் சுதாரித்துக் கொண்டு
மூக்கின் மேல் துணியைக் கட்டினோம்.

வீடு அதிர
விளக்குமாறு அதிர
ஆவேசமாய் என்றாவது
வீட்டைச் சுத்தம் செய்து
பழக்கம் உண்டா உங்களுக்கு ?

Jun 7, 2012

ஒரு நாத்திகன் ஓர் ஆத்திகன் ஒரு நரன்
"ஆதாரம் காட்டச் சொன்னால்
அவதாரக் கதைகள் சொல்லி
அதன் மேலும் பொய்கள் சொல்லி
அழுத்தித் திணித்தல்லவா
நம்பச் சொல்கிறீர் ?
நீர் செய்வது
மூளைச் சலவை "

"அவதூறு பழியெல்லாம்
அழகாய்ச் சபையில் பேசிவிட்டு
அன்றிரவே ஒளிவுமறைவாய்
'மனசுல வச்சுக்காத சாமி' என
கன்னத்தில் போட்டுக்கொள்ளும்
கபட நாடக நாத்திகர் தானே
நாட்டில் பலர் இன்று ?
நீர் செய்வது
பச்சோந்திச் செயல் "

"கடவுளே !
எப்ப்பிடியாவது
எனக்கு ஒரு
.....................
........................."

May 20, 2012

அண்டரண்டப் பட்சி
விக்கிரமாதித்தன் கதைகளில் வரும்
அண்டரண்டப் பட்சி ஒன்று
உலக எதிர்காலம் பற்றிய
குறி ஒன்றைச் சுமந்தவாறே
ஓயாமல்
சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கிறது.
பாவம்
அதற்கு
உட்காரத்தான்
மரமே இல்லை.

- மதி

படம் அளித்து உதவிய ப்ரவைன் செஸ்டருக்கு நன்றி . Pravine Chester's photo stream

அண்டரண்டப் பட்சியைக் கதைகளில் வாசிக்காதோருக்காக ஒரு சின்ன விளக்கம். விக்கிரமாதித்த மகாராஜாவுக்கு பட்டி என்றொரு மதியூக மந்திரி இருந்தார். பட்டி பறவைகளின் மொழி அறிந்தவர். அண்டரண்டப் பட்சிகள் பொதுவாக மர உச்சிகளில் அமர்ந்து கொண்டு மர நிழலில் இளைப்பாற வருவோரின் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைத் தமக்குள் பேசிக் கொள்ளும். "அதோ கீழே அமைதியாத் தூங்கறான் பாத்தியா .... அவனுக்கு அடுத்த மாசம் வடக்குத் திசையில் இருந்து ஒரு பெரும் செல்வமும் கிழக்குத் திசையிலிருந்து ஒரு சின்ன ஆபத்தும் வரப் போகுது" என்பது போல் . மகாராஜாவும் பட்டியும் இப்படி மரத்தடிகளில் ஒதுங்கின பல தடவைகளில் இப்பறவைகள் பேசிக் கொண்டிருப்பதை மந்திரி பட்டி கேட்டு உணர்ந்து பல சாகசங்கள் புரிவார். 

May 13, 2012

நிமிஷங்கள்
இருள்.

காரிருள். அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் சிறு வயதில் ஒண்ணுக்குப் போகப் பயந்து கிடந்த ராத்திரிகளை நினைவூட்டும் கன்னங்கரிய இருள். ஆனால் இப்போது பயமுறுத்தவில்லை. காரணம் இருளைக் கிழித்து விழுந்து கொண்டிருந்த தூறல். இரவு வானின் பின்னணியில் பெய்யும் மழை போலத்தான் இருந்தது. ஆனால் இது அது இல்லை.

பச்சையாக ஒரு திரவம் அந்த இருளைத் துளைத்துத் துளைத்துத் தெறித்துக் கொண்டிருந்தது. அந்தப் பச்சைத் துளிகளுக்கு ஊடாக றெக்கை முளைக்காத பறவைகள் போல பலப்பல குடுவைகள் பறந்து கொண்டிருந்தன - அல்லது மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவில். ஆனால் அதே பச்சை நிறம். வெளியே தூறிக் கொண்டிருக்கும் திரவம் அக்குடுவைகளுக்குள்ளும் அடைபட்டுக் கிடந்தது. இருள், தூறல், குடுவைகள் - இவையன்றி ஒன்றும் இல்லை.

அமைதியாக மிதந்து வந்த குடுவை ஒன்று படாரென்று தெறித்து உடைந்தது. உள்ளிருந்த திரவம் ஒழுகி ஒரு வயதான மனிதனின் உருவத்தைப் பிரதிபலிக்கும் பிம்பமாக உருமாறியது. அந்த மனிதனின் கண்களின் ஆழம் அபாயகரமானதாயிருந்தது. அந்தக் கிழவர் நெஞ்சைத் தடவிக் கொண்டே கொஞ்சம் இருமினார். உருகிய மெழுகு ஒழுகி ஓடுவது போல அவரின் பிம்பத்தை உருவாக்கின துளிகள் பிரிந்து தனித்தனியே அந்த மாபெரும் தூறலோடு கலந்து விட்டன. அவர் இறந்து விட்டார்! ஒழுகி ஓடியது அவரின் உயிர். குடுவையிலிருந்து விடுதலை பெற்று ஊழிப்பெருமழையில் துளிகளாய் ஐக்கியமாகிவிட்டது.

Apr 6, 2012

கவிஞனின் குழந்தைகள்
என்றோ ஒரு நாள்
ஒரு பொறியில் கருவாகி
உடனே ஆளாகி
அச்சில் ஏறிவிடும்
கவிதைகளைக் கண்டு
என்றாவது எழுதுவோம் என்று
கிடப்பிலேயே வைத்திருக்கும்
மூத்த கருக்கள் எல்லாம்
சண்டைக்கு வருகின்றன.
அட
சமாதானம் செய்யப் போனால்
ஆங்கொரு கரு சட்டென்று உருவாகி
ஆளாகி அச்சேறி நிற்கிறது.

-மதி

Mar 26, 2012

வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும் சார்
வார இறுதியின் விடுப்பில்
ஊர் வந்து திரும்புகையில்
உணவகத்தில் பேருந்து நிற்கிறது.
காதில் விழும் வசனம்
கருத்தில் இறங்குகையில்
எனது இருத்தலின் நிலையொடு
கரைந்து திரிந்தொலிக்கிறது.
"வாழ்க்கை ஒரு ரெண்டு நாள் நிக்கும் சார்
ஊர்க்காத்து
வீட்டுச் சாப்பாடு
சின்னக் குழந்தை
சொந்தம் பந்தம்
எல்லாம்
ரசிக்கிறவங்க
ரசிக்கலாம்
..........."
அசைபோட்டுப் பார்க்கையில்
விஷயம் முழுதாய் உறைக்கிறது.
புன்னகைக்கிறேன்.

கொஞ்சம் ஊர்ப்புகை சுவாசித்து
ஒரு தேனீர் பருகி
பத்து நிமிஷம் கழியவும்
பயணம் தொடர்கிறது.
நாளை
திங்கள் கிழமை.

வண்டிச்சக்கரங்களுக்கிடையில்
எங்கோ தொலைகிறது
ஒரு நப்பாசை.

- மதி

(படம் கொடுத்து உதவிய ஜூஸ்ட் பக்கர்க்கு நன்றி)

Feb 5, 2012

சாமி வீடுஒரு ஊருல ஒரு தாத்தா இருந்தாராம். அவரு மூப்புன்னாலும் முறுக்கு கொலையாம தான் வேலையத் தானே பாத்துக்குவாராம். அத்தனை வயசாகியும் அவரு கல்யாணமே பண்ணிக்கல. பாவம் சின்னப் புள்ளையா இருந்தப்போ யாரோ ஒருத்தவுங்கள லவ்வடிச்சு ஏமாந்து போயிட்டாருன்னு பேசிக்கிறாங்க. ஆனா அவருக்கு சின்னப் புள்ளைங்கன்னா ரொம்ப உசுரு. கூட்டி வச்சுக் கதை கதையாச் சொல்லுவாரு. அவரு நெறைய கதையெல்லாம் எளுதி பெரிய பெரிய பரிசெல்லாம் வாங்கினவராம். அவரு எளுதின கதை பத்திரிகையிலெல்லாம் வரும்.

அந்தத் தாத்தாவுக்கு சாமின்னா ரொம்ப நம்பிக்கை. எப்பவும் சுத்தபத்தமா இருப்பாரு. பூஜை பண்ணுவாரு. கோவிலுக்குப் போவாரு. சாமி காரியம் எதுலயும் குறையே வக்கமாட்டாரு. அவருக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை ....... அவரு செத்துப்போன பொறவு எங்க போவாரு என்ன ஆகுமுன்னு தெரிஞ்சுக்கணுமுன்னு ரொம்ப ஆசைப்பட்டாரு. அதுக்காக ஏதேதோ படிப்பெல்லாம் படிச்சாரு. தெனமும் சாமி முன்னாடி நின்னு, "சாமி சாமி ! நான் செத்த பொறவு என்ன நடக்குதுன்னு சொல்லு சாமி. அத தெரிஞ்சுகிட்டு நான் அத கதையா எளுதணும் சாமி" அப்படின்னு வேண்டிப்பாராம்.

இதையெல்லாம் பாத்துகிட்டிருந்த சாமி ஒரு நாளு அவரு முன்னாடி வந்து , "இங்க பாரு சிதம்பரம் ! நீ கேட்ட மாரியே நான் ஒனக்கு ஒரு வரம் தாரேன். நீ செத்துப் போன பொறவு ஒரு மணி நேரம் ஒனக்கு நெனவிருக்கும். அதுக்குள்ள திரும்பி வந்து என்ன எளுதணுமோ எளுதிக்க. ஆனா ஒரு மண்ணேரம் முடிஞ்சவுடனே நீ மொத்தமா செத்துப் போயிருவ"னு சொன்னாராம்.

உடனே தாத்தாவுக்கு சந்தோசம் தாங்கல. சாமிகிட்ட, "அப்படின்னா நான் இப்பவே சாகுறேன். என் உசுர எடுத்துக்க"னு சொன்னாரு. அதுக்கு சாமி வந்து, "சரி உன் இஷ்டம். ஆனா சாகறது நீயாதான் சாகணும். உன் விருப்பம்போல செத்துக்கோ" அப்படின்ன்னு சொல்லிட்டாரு.

........................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...- மதி

(படம் அளித்து உதவிய மைக்குக்கு நன்றி)

Jan 3, 2012

பெருநகரப் பறவைக்காட்டில் கோலோச்சும் காக்கைகள்
புறாக்கூண்டுகளிலும்
மனிதர்கள் புகுந்தேறிக் கொண்டபின்
நளினத்தின் சுவடுகளைத் தூக்கிக் கொண்டு
புறாக்கள் போய்விட்டன.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகளும்
சொப்பனம் காணும் ஊர்க்குருவிகளும்
வண்டிவண்டியாய்த் தினம் வந்திறங்கியும்
வந்த வேகத்திலேயே தம்
அப்பாவித்தனங்களைத் தொலைத்துவிட்டு
அடையாளம் மாறிப் போகின்றன.

ராவெல்லாம் கண் விழித்து
ரசபோகங்களில் மூழ்கித் திளைக்கும்
ராக்கூவல் பண்பாட்டை
நாடெங்கும் பரப்பி வரும்
ஆந்தைகளின் கூட்டம்
இங்கின்னும் வரவில்லை.