Jan 25, 2011

ஒரு சுடுசொட்டுச் சீனிப்பாகின் வரலாறு


(ரொம்ப சுருக்கமான வரலாறு; கொஞ்சம் நீளமான கவிதை)

முதல் முறை உன்னைப் பார்த்தேன்
நண்பா
இவள் நம்மூர்க்காரி
நல்ல அழகி
குறித்துக்கொள்
என்றது இளமை.
என் மனதில் நீ
ஓரமாய் ஒளிந்து கொண்டாய் !

மறுமுறை வகுப்பில்
ஜன்னலோரம் பிரகாசித்தாய்
நான் திரும்பிய கணத்தில்
சூரியனை வாங்கிப் பிரதிபலித்தாய்
நிஜமாகவே இது
நிலாமுகம் தான்
என்றது விழி.
என் மனதில் நீ
ஓவியமாய் உன்முகம் வரைந்தாய் !

Jan 24, 2011

ழ்கீலைத மேலால்எஅங்கு தொட்டு
இங்கு தொட்டு
தொன்று தொட்ட
காலமுதல்
காதல் தொட்ட
கவிஞர்களையெல்லாம்
இஷ்டம்போல் இம்சித்து
இன்பத்தில் குழப்பிவிட்டு
பெண் என்றால்
மென்மை என்று
பொய்யாய்ப் பிதற்றவிட்டிருக்கிறது
காதல்.
ம்
காதலித்தால்தானே
உண்மை தெரிகிறது.

- மதி

(கவிதாட்சரம் நாளை கவிஞனின் காதலின் முழு வரலாற்றோடு முடிவடையும்)

Jan 23, 2011

கா.. கா.... காதல்நடு இரவில்
மொட்டை மாடியில்
வானம் பார்த்து
மல்லாந்து கிடந்தேன்.
காகங்கள் கூட்டம் ஒன்று
அவள் வீட்டு வழிதான் போகிறோம்
ஏதும் சேதி உண்டா
என்றது.
நான் சிரித்துக்கொண்டே
என் காதலி
கொஞ்சம் தத்தி
அவளுக்கு
காக்கை பாஷையும் தெரியாது
இப்போதைக்கு
என் காதல் பாஷையும் புரியாது
நீங்கள் போங்கள்
தேவைப்பட்டால் சொல்கிறேன்
என்று அனுப்பிவிட்டேன்.
காதலி !
நீ முதலில்
எந்த பாஷையைக்
கற்றுக்கொள்ளப் போகிறாய் ?

- மதி

(கவிதாட்சரம் ஜனவரி 25 வரை)

Jan 22, 2011

அவளில்லாத திரிசங்கு உயரம்காதல்
என்னைப் பல உயரங்களுக்கு
இட்டுச் செல்கிறது
அண்ணாந்து பார்த்தால்
வானம் தலையில் தட்டுகிறது
குனிந்து பார்த்தால்
பூமி உள்ளங்காலில் உருள்கிறது
என்னை அங்கே ஏற்றிவிட்டு
அடிவாரத்தில் நின்று
ஓரக்கண்ணில் சிரிப்பவளே
சிங்காரி !
எப்போதடி
ஏறி வரப் போகிறாய் ?

- மதி

(கவிதாட்சரம் 4 நாட்களில் முற்றும்)

Jan 21, 2011

காதலடைத்த குடுவை


காதல்
மதுவைப் போல
மூடி வைக்க மூடி வைக்கத்தான்
சுவை கூடும்.
என் காதலை
ஒரு குடுவையில் அடைத்து
இறுக மூடி
உன்னிடம் கொடுத்துவிட்டேன்.
நீ
எத்தனை நாள்
கழித்துத் திறக்கிறாயோ
அத்தனை ருசிக்குமடி !

-  மதி

(கவிதாட்சரம் 5 நாட்களில் முற்றும்)

Jan 20, 2011

காதல் வளர்பிறை தூக்கம் தேய்பிறை


உன்னைப் பார்த்த முதல் பார்வையும்
உன்னோடு பேசிய முதல் மொழியும்
நினைவிருக்கிறது.
ஆனால்
உன்னால் தூக்கம் தொலைத்த
முதல் இரவுதான்
எப்போதென்று தெரியவில்லை.
பாதகத்தி !
இப்போதெல்லாம்
இதை எண்ணித்தான்
பல இரவுகள் விழிக்கிறேன் !

- மதி

(கவிதாட்சரம் ஜனவரி 25-இல் முற்றும்)

Jan 19, 2011

என்ன பெண்ணடி நீ


காதலிக்கிறேனா
என்று யோசித்த இரவுகளிலும்
தூங்கவிடவில்லை.

இன்று
காதலிப்பாயா
என்று யோசிக்கும் இரவுகளும்
தூக்கம் இல்லை.

என்ன
பெண்ணடி நீ ?

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 18, 2011

காக்க காக்க காதல் காக்க


காக்க வைத்து
வருவதால்தான்
காதலி
நீ கூடுதல் அழகாய்த் தெரிகிறாய் !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 17, 2011

அகத்தினைத் தந்தவன் அகத்திணை முயல்கிறேன்


ஒரு மார்கழி முன்பனியில்
என் காதலி மனம்புகுந்தேன் !
தன் மாளிகை மாடத்திலேயோர்
சாம்பல் முயலொடு
மூக்குரசிக் களித்திருந்தாள் !

"ஏது?
இளவரசி தன் தட்டை மூக்கை
மேலும் மழுங்கடிக்க எண்ணமோ?"

எதிர்பாராது என் குரல் தொடவும்
சட்டெனத் திரும்பியவள்
சுந்தர முகத்தில்
கோபமும் நாணமும் போட்டியிட ,
ஈரடிகள் பின்வைத்து
"எப்படி நுழைந்தீர்"
என்று வினவினள்.

"மதில் உயரம் அதிகம்தான்
இருப்பினும் மனமிருந்தால்
ஏறிக் கடந்திடலாம்
வாயிற்பூட்டிற்குத்தான்
வழியறியாது நின்றிருந்தேன்
வரமாய் ஓர் சிறுகதவு
உள்ளிருந்து திறந்து கொண்டது.
இளவரசி என்னை
எதிர்நோக்கித்தான் இருந்தீரோ?"

"எண்ணித்தான் கொள்ளுங்கள் !
தனித்திருக்கும் மங்கை உள்ளத்துள்
அத்துமீறி நுழைவது உங்களூரில்
அதர்மம் ஆகாதோ ?"

"ஏதேது?
உந்தன் ஒரு பார்வைக்கும்
புன்சிரிப்புக்குமே
என் அகம் தாழ்திறந்து வரவேற்று
அறையெங்கும் விளக்கேற்றி
இன்னிசையும் தவழவிட்டதே
இங்கென்ன
என் தைரியசாலிக் காதலி
பூட்டிக்கொண்டு பதுங்குகிறாள் ?
அகழியும் முதலைகளும்தான் குறைச்சல்"

"அழகாய்த்தான் பேசுகிறீர் !
ஆடவர் மனங்களுக்குக்
கதவிருந்தே பயனில்லை
தாழ் வேறு தேவையோ ?
சீக்கிரம் வெளியே போய்விடுங்கள் "

"என்ன கோபம் ?
மதிலேறி வந்த மரியாதைக்கேனும்
சில நாழிகை பொறுக்கக்கூடாதா
சூரியகாந்திப் பெண்ணே "

காதல் மறைக்கத்
தவித்திடும் கண்களை அடக்கிவைத்து
பொய்யாய்க் கண்டித்தாள்.

"சரி !
ஒரு நாள் அவகாசம் தருகிறேன்
தாங்களாகவே
அதற்குள் வெளியேறாவிடில்......"

"ஆஹா !
பத்தடி தூரம் திரும்பிப் போவதற்கு
ஒரு நாள் கெடுவா ?
இது விரட்டும் தொனியிலேயே இல்லையே ,
கண்ணே !
இதுதான் உங்களூர் விருந்தோம்பல் பாணியா ?"

"வாதம் வேண்டாம் !
நீங்கள் சொன்ன அந்த
மதிலேறிய மரியாதைக்குத்தான்
இந்த ஒரு நாள் .
இதனால் உங்களை விரும்புகிறேன்
என்றெல்லாம் எண்ணிக்கொள்ள வேண்டாம் "

"சரிதான் !
கதவு திறந்ததே
காதலின் குறிதான் என்றிருந்தேன்
கற்பனையாயன்றோ போகின்றது ?
காதலிக்க இல்லையேல் வெறும்
காத்திருப்பிற்கோ ஒரு நாள் ,
நான் புறப்படுகிறேன் "

"நில்லுங்கள் !
அவகாசம் முடியுமுன்னே
அவசரம் காட்டுதல்
அவமரியாதை ஆகாதா :

"என் காதலுக்கே
இங்கே மரியாதை இல்லையே "

"ஓஹோ !
நீங்கள் மட்டும் மரியாதை அறிவீரோ ?
காதலியைச் சந்திக்க ஆசையாய் வருகையில்
இங்கீதம் அறியாமல்
நண்பரையுமா அழைத்து வருவீர் "

'நண்பனா ?
!
அந்தக் கிராதகன்
இங்கெப்படி வந்தான் !'

"மச்சான்
எட்டரையாயிருச்சுடா
கொஞ்ச நேரத்துல
தண்ணி நின்னுரும்
எந்திச்சுக் கெளம்பு போ"

ஓ !
ஆருயிர் நட்பன்றோ
அடியேன் பெற்றுள்ளேன் !

சொப்பனம் !
மெல்லக் குறுநகை உதிர்த்தேன் !

என் காதல்
சரித்திரத்தில் இடம் பெறுகின்றது !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 16, 2011

சகலம் கலந்த சலனம்


நிலவும்
இரவும்
இசையும்
மௌனமும்
மழலையும்
கவிதையும்
உன்
கலப்படமின்றி
இரசிக்க முடியவில்லையடி
இன்று.

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 15, 2011

அவள் நெருப்பின் அழகு


கிட்ட வந்தால்
குளிர்கிறாய்
எட்டிச் சென்றால்
எரிக்கிறாய்
எங்கிருந்தடி
உனைப் பிடித்து வந்தேன்
என் அழகிய தீயே !

- மதி

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

(வள்ளுவரின் காமத்துப்பாலில் நான் போட்ட தேனீர் கவிதை இது)

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 14, 2011

சந்தோஷம் அதிர்ச்சி


வெறும் மூன்று நொடிகள்
போலத்தான் தோன்றியது.
என்னையே பார்த்துக்கொண்டிருந்தாய்
உன் பார்வை
வேண்டும் என்றும் சொல்லாது
போதும் என்றும் சொல்லாது
ஆயுசுக்கும் தேடினாலும்
ஆழம் மட்டும் தெரியாது.

சடாரென்று ஒரு கணம்
முகமெல்லாம் ஒளிர்ந்து
சம்மதமாய் மலர்ந்தாய்.
பரவசமான அதிர்ச்சியில் நான்
புரைக்கேறி விழித்தேன்.

கனவு.

மீண்டும் கண்மூடிப் பார்த்தேன்
பழையபடி வெறித்தாய்
புரண்டு புரண்டு யோசித்தேன்
360 டிகிரியிலும் தனித்தனியாக
முயற்சித்துப் பார்த்துவிட்டேன்.
பயனில்லை.
அதே மௌனப் பார்வை !

பாவிப் பொண்ணே
எதுவாயிருந்தாலும்
சொல்லிட்டுச் செய்ய மாட்டியா ?
தூக்கத்தைத்தான் கெடுப்பே
இப்போ
கனவையுமா ?

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 13, 2011

மேகங்களை வளர்க்கும் தேவதை


வித்தைக்காரிதானடி
நீ.
மேகங்களை
உன்னோடே இட்டுச் செல்கிறாய்.
போகிற போக்கில்
சாரல்களை என்னோடு
விட்டுச் செல்கிறாய்.

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 12, 2011

மறந்தது என்னை மட்டுமே


உன்
பிறந்தநாள்
முகவரி
செல் நம்பர்
இரத்த வகை
கம்மல் வடிவம்
முந்தாநாள் உடுத்திய
சுடிதார் வண்ணம்
இன்னும் இதர இதர
காதலிப்பதால்
என் ஞாபகசக்தி கூடுதடி
வல்லாரைப் பெண்ணே !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 11, 2011

இது மெய்த்தேடல்


நீ என்னை என்ன செய்கிறாய்
என்று தேடத் துவங்கிதான்
நான் உன்னைக் காதல் செய்கிறேன்
இன்று
காதல்
மோதலில் தொடங்குவதல்ல
தேடலில் தொடங்குகிறது .

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 9, 2011

ஒளியிலே தெரிந்த என் தேவதை


ஒரு பக்கம் உன் நிறமாய்
மறு பக்கம் பொன் நிறமாய்
ஒளி வந்து
உன் முகத்தில் விளையாட
காதோரம்
குழலொதுக்கி நிமிர்ந்தாயடி!
இந்தக் காதலெல்லாம்
அந்தக் கணவினையின்
கால்சுவடுதானடி !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

ரிஷிமூலம் நதிமூலம் விழிமூலம்


எதேச்சையாய்த்தான்
முதலில் பார்த்தேன்
பிறகு
எட்டிப் பார்த்தேன்
திரும்பிப் பார்த்தேன்
தேடிப் பார்த்தேன்
கவனித்தேன்
இரசித்தேன்
தூங்காமல் யோசித்தேன்
தெரியாமலேயே நேசித்தேன்
படிப்படியாய்ப் புதிரவிழ்த்தேன்
காதலென்று கண்டுகொண்டேன்!

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 8, 2011

அடி ஒரு யுகமாய் பத்தடியில் அவள்


நான்
ஒரு பெரிய பயணம் போனேன்
எனக்கெனப் பிறந்த
பெண்முகம் தேடி.

நிமிஷங்களாய்
மாசங்களாய்
வருஷங்களாய்
நீண்டது என் பயணம்.
வழியெங்கிலும் நினைவுகளைச்
சேமித்தபடியும்
சிதறவிட்டும்
சென்றுகொண்டிருந்தேன்.

ஆங்காங்கே
சில அழகிய பெண்களின்
புருவ நிழலில்
இளைப்பாறிக் கொண்டேன்.
பயணம் மட்டும்
முடியவே இல்லை.

அப்புறம்
ஒரு மாலைப் பொழுதில்
பத்தடி தூரத்தில்
உன்னைக் கண்டேன்.
சூரியன்
உன் கன்னத்தில் பிரதிபலிக்க
இரவு
உன் கூந்தலில் ஒளிந்துகொள்ள
வெறும் காற்று
நீ சுவாசித்துத் தென்றலாக
ஓசைகள்
உன் நாவசைவில் கவிதைகளாக
காதல்
உன் கண்களால் எனையழைக்க
ஆஹா
என் பயணம் முடிந்ததென்று
எகிறிக் குதித்தேன்
வானம்
என் தலையில் தட்டித்
தகவல் சொன்னது
நான் இதுவரை
கடந்தது காட்டிலும்
இந்தப் பத்தடி தான்
அதிக தூரமாம்.

தேடிப் பிடித்த
என் காதலியே !
ஒரு கண்ஜாடை காட்டடி
காற்றிலேறி வருகிறேன்.


- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 7, 2011

ஏன் நான் உனக்குப் பிறகு பிறந்தேன்


நிலவினைக் கலந்து பேசி
முக வடிவம் முழுமை செய்து
கதிரொளியைப் பிரதிபலிக்கும்
வித்தைகள் அதற்குப் புகட்டினான் .

கண்ணழகை வடிவமைக்க
தூக்கம் கெட்டு யோசித்து
ஆழமும் ஈர்ப்பும் சரிவரப் பொருந்த
சிலபல மின்னல் கீற்றுகளைத்
திரட்டியோர் உருண்டை செய்து
அதற்குக் குறும்பும் பேச்சும்
கற்றுக்கொடுத்தான்.

குரலின் சிறப்பிற்காய்த்
தேடித்தேடித் தேர்ந்தெடுத்து
ஒவ்வொரு மலரிலும்
ஒரு துளி தேனெடுத்து
குழைத்துக் குழைத்துக்
குரல் வார்த்தான்.

அறிவும் திமிரும்
அளந்து கலந்து
மழலையும் ரசனையும்
சேர்த்துத் தெளித்து
அகத்தழகும் பூர்த்தி செய்தான்.

புன்னகையில் மட்டும்தான்
ஏதோ இடிக்குதென்று
இராப்பகலாய் அலைக்கழிந்து
என்னவென்று கண்டுகொண்டான்
மூக்கில் கொஞ்சம்
கூர்மை குறைத்தான்.

பிரம்மனே இப்படி
பிரம்மப்பிரயத்தனப்பட்டுப் படைத்த
பெண்ணடி நீ !

எல்லாம் ஆனதும்
வேலை முடிந்ததென்று
திருப்தியாய்த் தலைசாய்க்கையில்தான்
இப்பேற்பட்ட பெண்ணொருத்தி
பேரழகி
இவளுக்குத் துணை ஆக
ஈடான இணையாக
ஓர் ஆணும் உலகில் இல்லையென
உணர்ந்தான் பிரம்மன் .

ஆதலால்
மேலும் மூன்று மாதங்கள்
மெனக்கெட்டு உழைத்து
என்னைப் படைத்தான் !- மதி

(இந்தக் கவிதை ஏற்கெனவே நான் வலையில் வெளியிட்டதுதான் என்றாலும் இந்தக் கவிதாட்சரத்தில் இந்தக் கவிதையைச் சேர்க்காமல் விட மனம் வரவில்லை. ஆதலால் என் 50வது வலைப்பதிவு எனக்குப் பிடித்த ஒரு மறுபதிவாகிறது! கவிதாட்சரம் தொடரும்)

Jan 6, 2011

சீனச்சிறப்பழகி என் சீனிச்சிரிப்பழகி


ஐந்தடி உயரம்
அகன்ற விழிகள்
சப்பை மூக்கு
சிவக்காத உதடுகள்.
கண்டிப்பாய்த் தெரியும்
நாங்கள் Made for each other என்று
ஆனால்
கனவிலும் நினைக்கவில்லை
என் காதலி
Made in China என்று !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 5, 2011

கண்ணே உன் கண்ணிடம் ஒரு வேண்டுகோள்


உன் விழியும்
என் விழியும்
சந்தித்துக் கொள்ளும்
ஒரே ஒரு நொடியில்
எத்தனை அர்த்தங்களைக் காட்டுகிறாய்
எத்தனை ஆழங்களைக் கிளறுகிறாய்
அடி அறிவாளிக் காதலி !
ஒன்று
உன் விழிகளை
அதிக நேரம் பார்க்கச் சொல்.
இல்லை
குறைவாகக் குழப்பச் சொல் !

- மதி

(கவிதாட்சரம் தொடரும்)

Jan 4, 2011

காதலில் நான் ஆத்திகன்


உன் கண்களிலே
கிட்டத்தட்ட
கடவுளைக் காண்கிறேனடி !
காணாத வரை
கல்லென்றேன். 
கண்டுகொண்டேன்
கரைந்துருகிக்
கவி பாடித் திரிகிறேன் !

- மதி
(கவிதாட்சரம்.. தொடரும்)

Jan 3, 2011

கதிரவன் ஓவியன் ; காதலன் கவிஞன் !

நீ
தினமும் ஜன்னலோரம் உட்காருவதால்
இரண்டு விஷயங்கள்
நடந்திருக்கின்றன.
ஒன்று
உன் முகத்தில் தொழில் பழகி
கதிரவன் ஓவியனாகிவிட்டான். 
இரண்டு
நான் அவனுக்கு ரசிகனாகி
உனக்குக் காதலனாகிவிட்டேன்!

- மதி
(கவிதாட்சரம்.. தொடரும்)

Jan 2, 2011

அழகி


புரளும் கருங்குழலும்
மிரளும் விழிகளும்
சீர்மூக்கும்
சிவந்த இதழ்களும்
சங்குக் கழுத்தும்
அவள் பெறவில்லை
ஆதலால் சொல்கிறேன்
அழகிற்கு இலக்கணங்கள் இல்லை.

- மதி
(கவிதாட்சரம்.. தொடரும்)

Jan 1, 2011

லெமூரியாக் கண்டத்தில் வசிக்கும் என் காதலிக்கு

எனக்கொரு காதலி இருக்கின்றாள்.
அவள்
லெமூரியாக் கண்டத்தில் வசிக்கின்றாள்.

என் காதல் சங்கதி சொன்னதும்
கொஞ்சம் யோசித்துவிட்டு
இப்போதைக்கு இங்கே வருவதற்கு
லெமூரியாவிலிருந்து வண்டியேதுமில்லை
தன்னால் வர இயலாது என்றாள்
பாவம்
அந்த வண்டி
எப்போது வருமென்பதும்
அவள் அறியவில்லை.

சரி
நம் காதலி
நாமே கையோடு போய்
காதலோடு அழைத்து வந்திடலாம்
என்று முடிவு செய்தேன்.

வேலை வெட்டிகள்
விட்டுப்போகாமல்
என் உலகைச் சுருட்டி
ஒரு கூடைப்பந்தாக்கி
விளையாடியபடி
நடக்கத் தொடங்கினேன்.

தூரம் அதிகம்தான்
என் காதல்
காலதூரக் கோட்பாடுகள் களைந்து
கூடவே வந்தது.

சோம்பிய பொழுதுகளில்
எங்கேனும் ஒரு
நிலாநிழல் அமர்ந்து
அவளை செல்லில் அழைப்பேன்.
நான் லெமூரியாவை விசாரிக்க
அவள்
என் கூடைப்பந்தை விசாரித்துவிட்டு
இன்னும் வண்டி வரவில்லை என்பாள்.

கொஞ்ச நேரம் பேசிவிட்டு
குழலும் யாழும் குப்பை என்று
கவிதைகள் கிறுக்கிவிட்டு
என் சொப்பனக்கூடுகளை
அவள் சொற்களால் நிரப்பி
மீண்டும் நடை தொடர்வேன்.

அவளும்
தன் புன்சிரிப்புகளையும்
புருவ நெறிப்புகளையும்
என்பால் அனுப்பி
எங்கிருக்கிறேன் என்று
பார்த்துவரச் சொல்வாள்.
நான் அவற்றிடம்
பயணம் பூரணசுகம்
போய் உம் தலைவியிடம்
அடுத்த தடவை
ஒரு கடைக்கண் பார்வையை
அனுப்பச் சொல்லுங்கள்
என்று சொல்லி விடுவேன்.
சிலசமயம்
அவற்றைத் திருப்பி அனுப்ப
மனசே வராமல்
என் இமைகளுக்குள்ளேயே
களவாண்டு பூட்டிவிடுவேன்.

அவளைப் பார்த்ததும் தருவதற்காய்
போகும் வழியெல்லாம்
மழை ஈரங்கள்
மலர் வாசனைகள்
நிலாக் குளிர்கள்
சூரியக் கதிர்கள்
என்று சேகரித்துச் செல்கிறேன்
கூடவே
கனவுகளை அடைகாக்கும்
என் கவிதைகளும்.

அவளைச் சந்தித்து
பரஸ்பரம்
காதல் பரிமாறும்வரை
அவள் கொஞ்சம் காத்திருக்கட்டும்.

அதன்பின்
லெமூரியாவையும் சுருட்டி
மற்றொரு பந்தாக்கி
விளையாடிக்கொண்டே
எங்களுக்கான பிரபஞ்சத்தில்
கைகோத்துச் செல்வோம்.

இந்தக் காதல் இருக்கிறதே....- மதி
(கவிதாட்சரம்.. தொடரும்)