Aug 31, 2010

என் மேல் பாய்ந்த தேவ ஒளி

புத்தன்
தன் பயணத்தில்
போதியில் ஒளி கண்டான்.
பித்தன்
என் பயணத்தின்
பாதியில் இருள் கண்டேன்.
என் பாதை
இருளுற்றதேனென்று
ஒளி கண்டேன் !

பயணம் ?

சூல் கொண்ட நீரோடை
மலை வீழும் வேகத்தில்
என் மேல் பாய்ந்தது ஒரு தேவ ஒளி,
ஒரு நிலாமுகத்தில் பிரதிபலித்து !
தரைகண்ட நீரருவி
கடலேகித் தவழ்வது போல்
மனம் மெல்ல நகர்ந்தது காதல் வழி,
துளித்துளியாய் அனுபவித்து !

அவள் முகம் நிறைத்துக் கதிரொளி !
என் மனம் நிறைத்துக் காதல் ஒளி !
ஒளியுடன் ஒளி
ஒன்றெனக் குழைய
ரெண்டிலும் திளைத்து
மருகினதென் மனம் !

எனக்கு மட்டும்
மின்னல் தெறித்தது !
எனக்கு மட்டும்
சாரல் சிலிர்த்தது !
எனக்கு மட்டும் !
காதலின் மாயம் !

ஒளி காட்டித் தந்ததே
என் பயணம்
வழிகாட்டி வந்தது
அவள் மௌனம்.

மௌனம் ?

கண்கள் பேசும்
காதல் பாஷையெல்லாம்
கற்றுக்கொள்ளச் சுலபம்.
அது மொழிமௌனம் .
என்னவள் கண்மொழி கடினம்
இது விழிமௌனம்.

'ஆம்' என்று சொல்வதாய்ப் பார்த்தால்
'அப்படித்தான் அத்தான்' என்னும்.
'இல்லையோ' என்பதாய் நினைத்தால்
'இன்று போய் நாளை வா' என்னும்.
'வரவா' என்றால்
வாரி அணைக்கும்
'போகவோ' என்றால்
'போடா பொரம்போக்கு'
என முறைக்கும்.
என்னவள் கண்மொழி கடினம்
இது விழிமௌனம்.

என் வழிகள் அத்தனையும்
உன்னொரு வார்த்தையைத்தான் தேடுதென்று
கூவிச் சொல்லிக் காதலித்தேன்.

அவளின் மறுத்தலும் மொழிமௌனமும்
மென்மையாய் வழி மாறச் சொல்லும்.
ஆனால் விழிமௌனங்கள்
கூச்சல் போட்டுக் குழப்பி வைக்கும்.
கூச்சலில் ஒன்றும் புரியாவிடிலும்
ஓர் அர்த்த மாயை அமைந்திருப்பது போல்
கானல் நீர் காட்டிக்
காத்திருக்க வைக்கும்.

இருள் ?

கானல் நீரென்று
புரியாமல் கனாக்கண்டு
காதல் வளர்த்தும்
தாகம் வளர்த்தும்
தவித்துத் தவித்துத்
தொடர்ந்து வந்தேன்.

ஒரு புனிதக் கணத்தில்
மின்னலாய்த் தெறித்து
நான் மட்டும் பார்த்த
காதலின் தேவ ஒளியை
அவளறிய வாய்ப்பில்லை.

அந்த ஒருகணத்து மின்னலைத்
தக்கவைத்துத் தடம்புரட்டி
மனம் மாற்றி மின்னிணைத்து
அவள் கண்ணில் ஒளிரவைக்க ..
.........
.........
?

சேர்த்துவைத்த மின்னலொளி
சிறுகச்சிறுகக் குறைந்து போய்
என் பாதையில்
இருள் புலர்கிறது !

ஒளி ?

எனக்கு மட்டும்தான்
மின்னல் தெறித்திருக்கிறது.
எனக்கு மட்டும்தான்
சாரல் சிலிர்த்திருக்கிறது.
எனக்கு மட்டும்தான் !
காதலின் மாயை!

நான் பார்த்த அந்த மின்னல்
மேற்கில் விழுந்ததா
கிழக்கில் விழுந்ததா
உன் கண்ணைத் துளைத்ததா ?
என்று
அடம்பிடித்து நான் கேட்டால்
அவள் பாவம் என்ன சொல்வாள் ?

சொல்லாமல் போகிறாளே
காதலெல்லாம் குப்பையென்று
குழப்பத்தில் பழிப்பித்தால்
காதல் பாவம் என்ன செய்யும் ?

சில மேக உரசல்கள்
புனித மின்னல்களாய்த் தெறித்தாலும்
மழை தரிப்பதில்லை .

காதலில்
காதலிக்க நிறைய உள்ளது
ஒரு 'காதலி'
கூடாமல் போனாலும் !

மின்னல் மறுமுறை வரட்டும்.
உனக்கொன்றும்
எனக்கொன்றுமாய்.
அதுவே பொருத்தம்.
பாவம் நான் வேறென்ன சொல்வேன் ?

அவளுக்குத் தமிழ் கொஞ்சம்
தட்டிதட்டித் தான் மழலை பேசும்.
அதனால் ?

Blessed am I
Blessed is she
Here I choose to let go
For blessed be US
As ME and SHE.

Let there be light
in another divine moment !

-மதி

Aug 8, 2010

கடைசியாக பூமிக்கு வந்தேன்

முதல் முதலாக 
உன்னை பூமியில் பார்த்தேன் .

மெல்லிய கார்காலத் தென்றலாய்
என் தலை கோதிச் சென்றாய் .
அதன் பின்
உனை நினைத்த போழ்தெலாம்
மனதில் மழை பெய்தது .

என் அகமழையின் ஈரங்களும்
உன் அழகொளிர்வின் உஷ்ணங்களும்
மெல்ல மெல்ல
என் காலடியில்
ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்கி
ஒரு சில நொடிகள்
ஒரு சில அடிகள்
எனைத் தரை மேல் தவழச் செய்தன .

காதல் ஒரு பரந்த தேசம்
காட்டித்தருகிறேன் வாவென்று
என் கற்பனைகளில்
கை நீட்டி அழைத்தது உன் பிம்பம் .
கற்றுக்கொள்ளக் கிளம்பினேன் .

இசையின் மொழிகளிலும்
கவிதை வரிகளிலும்
உன் நினைவுகளைச் சேர்த்துக் கொண்டு
மேகக் கூட்டங்களின் மேல்
ஏறிச் செல்லும் கலை பயின்றேன் . 

ஆழம் தெரிந்து கொள்ளும்
ஆசையின் உந்துதலில்
உன் கண்களில் குதித்தேன் .
ஆழத்தின் அர்த்தங்களையும்
அர்த்தத்தின் ஆழங்களையும்
அணுஅணுவாய்க் கண்டுகொண்டேன். 

காலப் பெருவெளியில்
ஜனனங்களைத் தாண்டி
காத்திருப்பில் நீண்டு
சந்திப்பில் சுருங்கி
நினைவுகளில் உறைந்திடும்
கணங்களின் முகங்களில்
காதலின் விளையாட்டை
ரசித்து அனுபவித்தேன் .

என்னை உன்னில் தேடினேன்
உன்னை நிலவில் தேடினேன்
நம்மில் காதல் தேடினேன்
என் தேடல்களின் முடிவிலும்
உன் மூக்கு நுனி வடிவிலும்
கடவுளை உணர்ந்தேன்
நமைக் கவிதையில் படைக்கையில்
கடவுளாய் உணர்ந்தேன் .

என் இறுமாப்புகளைக் 
கொஞ்சம் இளகவிட்டு
ஏக்கங்கள் 
எல்லை தாண்டின .
உன் கவனத்தைத் 
திருடத் தூண்டின. 
சின்ன ஏமாற்றங்கள்
பெரிதாய் வலிக்கும்
மெய்யறிந்தேன் .

பயணத்தில் எங்கோ போனதும்
சட்டென்று உரைத்தது .
தனியாக நிற்கிறேன். 
அருகில் உன் பிம்பத்தைக் காணவில்லை . 

காதல் ஒரு பரந்த தேசம். 
கஷ்டப்பட்டு வழி தேடி
கடைசியாக பூமிக்கு வந்தேன் .

இங்கே என் காதலி
அதே வனப்புடன்
தனக்கான வட்டத்தில்
சிறகு விரித்துச்
சிரித்து மகிழ்கிறாள் . 

நான்
பூமியில் பூக்கள் பூக்குமென்றும்
குழந்தைகள் மழலை பேசுமென்றும்
மழை நாளில் தேனீர் ருசிக்குமென்றும்
மீண்டும் உணர்ந்து கொண்டிருக்கிறேன் .

சிரிக்கவும் கனவு காணவும்
இப்போது வேறு காரணங்கள்
கண்டு கொண்டிருக்கிறேன் .
வாழ்வின் கதகதப்பு
என் நாட்களை நகர்த்துகிறது .

புரியாத தேசத்தில் 
பாவமாய்த் தொலைந்து
திரும்பி வந்த என் காதல் பிம்பம்
சட்டெனச் சில சமயம் 
கண்ணாடியில் தெரிகிறது . 

இந்த பிம்ப முகத்தில் 
முன்னிருந்த மழலை இல்லை .

-மதி