Jun 21, 2010

#3 - கா(நான்காண்டுகள் கோவையில் கல்லூரியில் கழித்த பொன்னான நாட்களில் சந்தித்த சுவாரசியங்களைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பை உருவாக்கலாம் என்று ஒரு சின்ன எண்ணம். இதே போல கல்லூரிச் சாலை என்று குறியிட்டு இன்னும் பல கதைகள் ஒவ்வொன்றாய் வரும். இந்தப் பதிவு இத்தொடரின் மூன்றாவது கதை ஆகும். இந்தத் தொடரின் மற்ற கல்லூரிக் கதைகளை வாசிக்க கல்லூரிச் சாலை என்ற சுட்டியைத் தட்டிப் பாருங்கள். 


என் கதைகளுக்கு வித்திட்ட தோழர்கள் தோழிமார் அனைவர்க்கும் நன்றிகள். இதன் மூலம் யாரையும் காயப்படுத்தவோ கலாய்க்கவோ எனக்குத் துளியும் எண்ணமில்லை. அத்தனை கதைகளிலும் அத்தனை பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. உண்மைகள் கொஞ்சம் என் கற்பனைகள் அதிகம் சேர்த்த கதைகள். நிஜப்பெயர்களை அடையாளம் கண்டுகொண்டால் வாசகர்கள் உங்களுக்குள் புன்னகைத்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்ளவும், யாரும் தயவு செய்து public forum comment இல் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அரவணைப்புகள் அத்தனை நண்பர்களையும் சாரும். அழுகின முட்டைகளை நான் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்.

சந்தோஷமாய் என் கல்லூரிக்குள் வாருங்கள்.....)

......................................................................................................

"மச்சி.. இதப் பாருடா " , கணேஷ் ஒரு தாளை நீட்டினான். அதில் ஒரு அட்டவணை இருந்தது. பார்த்ததும் புரியாமல் விழித்து, கொஞ்சம் உற்று ஆராய்ந்தபின் ரசித்துப் புன்னகைத்தேன். 


"நேத்து Mock CAT பரீட்சையில Data Interpretation போட்டுட்டிருக்கும் போது டக்குன்னு இது தோணிச்சுடா. நான் இப்போ கட்டத்துல கீழே இருக்கேன். என் ஆளு மட்டும் ஒத்துக்கிட்டா மேலே போயிரலாம். எப்படி ?" என்று கட்ட வரலாறு உரைத்தான் கணேஷ். 
"போயிரலாம்டா , ஒரேயடியா மேல எங்கேயோ போயிடப் போறே பாரு நீ"

கணேஷ் குமார். எங்கள் அறைக்கு மூன்று அறை தள்ளி இருந்தான். அறிவாளி. GK என்றுதான் அவனை அழைப்போம். பெயர்ச் சுருக்கம் மட்டுமல்ல, பெயர்ப் பொருத்தமும் இருந்தது. அவன் பெரிய Quizzer. பல லட்சியங்களைத் துரத்துபவன். அதில் ஒன்று CAT தேர்வும் IIM அகமதாபாத்தும். அதைவிடக் கடினமான மற்றொன்று அவனின் பெரிய சுகமான சிக்கல் ... லலிதா. 

இரு உள்ளங்கள் சரிபாதி பாகங்களாகி, பரஸ்பர சந்தோஷத்தில் வடிவமைக்கும் மாயம்தான் 'காதல்'. அந்தக் காதல் மாயம் ஒரு சிறு பிள்ளை போல் "உன் பேச்சு டூ கா" என்று காய் விட்டுப்போக, ஒரே ஒரு பாகம் மட்டும் மறு பாதிக்கு ஏங்கி நிற்கும் நிலைதான் இந்த 'கா'. இந்நிலை மனிதரெலாம் அந்த மாயத்தின் உந்துதலில்தான் அந்த மறுபாதி 'தல்'லை ஒட்டவைத்து தம் காதலை முழுமையாக்க உருகி மருகி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

நம் நாயகன் GKவும் இந்தக் 'கா' நிலை மனிதன்தான். இந்த நிலையில் பல வகைகள் உண்டு - சொல்லாத சுமைதாங்கிகள், சொல்லிவிட்டுக் காத்திருக்கும் செயல் வீரர்கள் மற்றும் சொன்னது மறுக்கப்பட்டதால் சொப்பனம் தொலைத்தவர்கள் என்று. காதலைப் புனிதமாகக் கையாண்ட நம் இலக்கியங்கள் ஒருதலைக் காதலைக் கொஞ்சம் ஓரம்கட்டி வெளிச்சம் காட்டியதால் இவர்கள் சுலபமாகப் பிரபலமாகவில்லை.

இதுவும் போக வேறு சிலர் 'திரிஷா இல்லைன்னா திவ்வியா' என்ற ரீதியில் வாரம் ஒரு முகத்தை ஒருதலையாய்த் துரத்தப் போய், இந்த நிலை கொஞ்சம் கொச்சைப்பட்டும் போய்விட்டது. 

GK லலிதாவிடம் தொலைந்து போனது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால். சைக்கிளில் மணியடித்தபடியே ஒரு இளஞ்சிவப்புச் சுடிதாரில் அவள் அவனைக் கல்லூரிச் சாலையில் கடந்து போன ஒரு நொடியில் ஒரு தேவ ஒளி தன் மேல் பாய்ந்து, காலின் கீழ் தரை நழுவி, ஒரு சில நொடிகள் ஒரு சில அடிகள் ஆகாயத்தில் மிதந்ததாய் இன்னும் அவன் உறுதியாய் நம்புகிறான். அதன்பின் பல இரவுகள் தூக்கம் தொலைத்து, பூவா தலையா போட்டுப் பார்த்து, தன்னைத்தானே கிள்ளிப்பார்த்துக் காதல் என்று உறுதி செய்து அடுத்த வாரத்தில் அவள் கண்ணைப்பார்த்துச் சொல்லிவிட்டான். 

லலிதா ஒரு அழகான அறிவாளிப் பெண்தான். அவனைப் பிடிக்கவில்லையா காதலைப் பிடிக்கவில்லையா என்று தெளிவாகச் சொல்லாமல் கொஞ்சம் குழப்பிவிட்டு அரை மணி நேரம் இழுத்துப் பேசி அவன் காதலை மறுத்தாள். 

உண்மைக் காதல் உடனே தீர்ந்து போகாதல்லவா? அவனும் அவள்பால் பைத்தியமாய்க் காத்திருந்தான். அவளும் அவனுக்கு அதிகம் வலிக்காதபடி அக்கறையாக அவனை அக்கரையிலேயே வைத்திருந்தாள். 

தன் காதலின் சீரிய கண்ணியத்தால் GK எங்கள் கல்லூரி OSS தலைவராக மதிக்கப்பட்டான். OSS என்பது இதைப்போலவே ஒற்றைக் கனாக் காணும் One Siders Society ! காதலிப்பதில் உள்ள பெரிய சுகமே அதைப் பகிர்வதில்தான் என்பார்கள். ஒருதலைகள் சாதாரணமாக எல்லா நண்பர்களிடமும் தம் கனவுகளையும் திட்டங்களையும் பகிர்வதில்லை. அவர்கள் ஒளித்து வைத்திருக்கும் உணர்வுப் பொக்கிஷங்களைப் பகிர்ந்து கொள்ளவும், சோர்ந்து போகையில் நம்பிக்கை தரவும்தான் இந்த OSS உருவானது. வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. நானும் ஒன்றும் வெளியாள் இல்லை. (ஆம் ... என் கதை மற்றொரு பத்து பக்கம் வரும். பிறகு சொல்கிறேன்)

எங்கள் சங்கம் பல சுவாரசியமான மனிதர்களைச் சந்தித்துள்ளது. பொதுவாய் எண்ணப் படுவது போல நாங்கள் எப்போதும் ஏக்கத்திலும் சோகத்திலும் வாழ்பவரில்லை. காதலுக்குச் சமமாக ஒருதலைக் காதலும் சில பரவசங்களையும் சந்தோஷங்களையும் தரவல்லது. அண்ணாமலை என்று ஒருத்தன் இருந்தான். தன் காதல் கைகூடும் வரை கிளாஸிக் மெஸ்ஸில் ஆம்லேட் சாப்பிட்டால் கூட ஒன்-சைடு ஆம்லேட் தான் சாப்பிடுவேன் என்று ஒரு கொள்கையோடு வாழ்ந்து வருகிறான் இன்றும். இதே போலப் பலர் உண்டு. 

காதலிக்காய்க் கவிதை எழுதுவது சாதாரணம். ஆனால் தமிழ் வாசிக்க வராத தன் காதலிக்காக தனக்கு வராத ஆங்கிலத்தோடு சண்டை போட்டு கண்ணன் எழுதின கவிதை, உணர்வால் ஷெல்லியையும் பைரனையும் உரசிவிட்டு வந்தது. 

When your and my eyes are seeing
I am not lying, 
My wings are flying !

நாற்பத்தைந்து நாட்கள் விரதம் போல் இருந்து, கண்டதையும் படித்து, கண்டதையும் கிழித்து சுஜாதாவுக்காக இந்த மூன்று வரிகளைப் படைத்தான் அவன். அவளுக்கு அதையெல்லாம் ரசித்து உணரக் கொடுத்து வைக்கவில்லை. கண்ணன், சில உதவாத கோபியரின் கிண்டலுக்குப் பயந்து அதை அவளிடம் கொடுக்கவே இல்லை. அதுதான் காரணம். 

தன் காதலிக்குப் பிடித்த நிறம் என்று கிளிப் பச்சைக் கலரில் எல்லாம் சட்டையாய் வாங்கிக் குவித்தவன் விஜய். 

சாவித்ரி என்றொரு தோழி இருந்தாள். அவளவன் வைத்திருந்த அரியரையெல்லாம் துடைத்துப் பாஸாக வேண்டிப் பலநூறு ராமஜெயம் எழுதினவள். அவன் கேட்காமலேயே அவனுக்கு Lab notesம் Recordம் கேட்டு வாங்கி மாங்கு மாங்கி எழுதுவாள். அவன் பெயரில் கதாநாயகன் பெயர் வரும் அத்தனை சினிமாக்களையும் சிரமப்பட்டுச் சேர்த்து வைத்து, தினம் ஒன்றாகப் பார்த்துக் கதாநாயகியாய்க் கனவு கண்டு உறங்குவாள். 

அவனுக்காக ஒரு தரம் ஒரு நெகிழ்ச்சியான SMS forwardஐக் கண்டுபிடித்து, அதை விடுதியில் உள்ள அத்தனை செல்லிலிருந்தும் தேடி அழித்தபின், அவனுக்கு அனுப்பிக் காத்திருந்தாள். அவன் அதைப் படித்துச் சிரித்த அடுத்த அரை மணியில் தன் அறையிலேயே உள்ள மற்ற இருவருக்கும் அனுப்புவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அந்தக் கோபத்தில் அவள் அடுத்த மூன்று வாரங்களுக்கு அவன் 'நல்லா இருக்கு' என்று ஒருமுறை பாராட்டின மஞ்சள் சுடிதாரைப் போடவே இல்லை. 

எல்லாவற்றிற்கும் மேலாக இருந்தவன் ரகு. தமிழ் மன்றத்தில் கவிதை எழுதுபவன். அவன் விரும்பினவள் தமிழ் வாசிக்கும் அறிவும் கூடப் பெற்றிருந்தாள். ஆனாலும் ஒரு தயக்கத்தில் மயங்கி மயங்கி எழுதின தன் கவிதைகளையெல்லாம் கடிதமாக்கி , 'லெமூரியாக் கண்டத்தில் வசிக்கும் என் காதலிக்கு' என்று முகவரியிட்டுப் பெட்டியில் போட்டுப் பூடிவிடுவான்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மச்சி .... இதப் பாருடா"

காலையில் பல் தேய்க்க வாயில் பசையோடு வெளியே நிற்கையில் திடீரென்று GK அறையிலிருந்து ராமு கையில் ஒரு காகிதத்தோடு பரவசமாக ஓடி வந்தான். காலையில் சீக்கிரமே எழுந்து GK எங்கேயோ வெளியே போயிருப்பான் போல , காதலின் உணர்ச்சிவசத்தில் எதையோ எழுதி மேசையிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டான். எங்களிடம் அகப்பட்டுக்கொண்டது. அடுத்தவன் கடிதத்தை வாசிப்பது குற்றம் என்றாலும் விடுதியில் பழகிப்போன மொள்ளமாரித்தனம்தான் என்பதால் சகஜமாக வாசிக்க ஆரம்பித்தோம் நாங்கள்.

'லலிதா .. என் தேவதேயே .. என் செல்ல லதாவே. ஆம். Da Vinci Code சும்மாவா வாசித்தேன் நான். 

L A L I T H A  G A N E S H
H I S  A N G E L  L A T H A

பல நாள் போராடிச் சேர்த்த Anagram ! லதா என்று உன்னை மனதில் அழைக்கையில் இப்போதெல்லாம் மேகங்களின் மேலே முதுகில் இறக்கைகளோடுதான் நடந்து வருகிறாய் நீ. 

உன்னால் என் வாழ்வில் பல அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன். சிறு வயதில் இருந்து எல்லோர்க்கும் பிடித்த, எல்லாமும் கிடைத்தவனாகத்தான் நான் வளர்ந்தேன். என்னை மறுத்த முதல் ஆள் நீ. என்னைப் பற்றி என் மனம் கட்டியிருந்த பல பிம்பங்களை அசைத்தவள் நீ. எப்படியும் கொஞ்ச காலம் கண்ணாமூச்சி ஆடிவிட்டுக் காதல் தானாய்க் கனியும் என்று உறுதியாக நம்பினேன். கண்ணியமாகக் காத்திருந்தேன். 

FLAMES போட்டுப் பார்த்தேன். நம் பெயர்களுக்கு 'M' என்று திருமண ராசி வந்தது. LATHA GANESH . நீ பின்னால் காதலை ஒத்துக் கொண்டு என் தோளில் சிரித்துச் சாயும்போது லதா என்று நான் உனக்குப் பெயர் வைத்த காரணம் சொல்லலாம் என்று பல தடவை ஒத்திகை பார்த்திருக்கிறேன். 

காதல் அற்பமானது, கொச்சையானது என்று நீ நினைப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. சில கணங்களில் உன்னையும் மீறி உன் கண்கள் என் காதலை உணர்வதாய்ச் சொல்லும். நீ கவனித்திருக்க மாட்டாய். அந்தக் கணங்களைத் தேடித் தேடியே நான் மணிக்கணக்காய்க் காதிருப்பேன். உன்னை என்னில் பாதியாக்கி, நமக்கென ஓர் உலகம் படைத்து தேவதைக் கதைகளில் வருவது போலவே நிரந்தரமாக சந்தோஷிக்கலாம் என்று உருகி உருகி உயிர் விட்டேன். ஏன் நீ சம்மதிக்கவில்லை?

முகத்தில் அறைந்து மறுத்தால் நாகரிகம் குறைவு என்று எனக்கு வலிக்காமல் விலகி விலகிப் போய் விளக்கப் பார்க்கிறாய். அப்பொழுதும் , 'பாரடா, உனக்கு வலிக்கக் கூடாதென்று யோசிக்கிறாள்' என்று என் மனம் கற்பனை வளர்க்கிறது. 

சொல்லக் கூச்சமாய் இருக்கிறது. நீ என்னை அழ வைத்திருக்கிறாய். நான் அவ்வளவு ஒன்றும் கோழை இல்லை. ஆனாலும் சில காலைகளில் தெரியாமலேயே தலையணை நனைத்திருப்பதை உணர்கையில் என்னை நான் இழக்கிறேனோ என்று பயமாய் இருக்கிறது. சேர்த்துச் சேர்த்து வைக்க வைக்க, காத்திருப்பும் காதல் தவிப்பும் அதீத பாரமாய் அழுத்துகிறது. காரண்மே இல்லாமல் இரவுகளில் இங்கே கடலை போடுபவன் மேலெல்லாம் கோபம் வருகிறது. அவனைச் சபிக்கிறேன். என்னை வெறுக்கிறேன். 

நான் மாறிக்கொண்டிருக்கிறேன். ஒரு உன்னதமான காதல் உணர்வு என்னை அணு அணுவாகப் புனிதப்படுத்துகிறது. மறுகணமே ஒரு ஏக்க வெறுமை என்னை அக்கு அக்காய்ப் பிய்த்துத் தின்கிறது. தோல்வி என்று ஜீரணிக்க முடியவில்லை. வெற்று சமாதானங்கள் போதவில்லை. 

இதை எல்லாம் உள்ளே அழுத்தி, வெளியே சிரித்து, பரீட்சைக்குப் படித்து, சினிமா பார்த்து சகஜமாய் நடிக்கையில் ஒரு காழ்ப்பு உணர்ச்சியும் தாழ்வு மனப்பான்மையும் கூடிக் கூடிக் கொல்கிறது. என்னையே நான் கேட்கிறேன்..... 'நான் காதலிக்கத் தகுதியற்றவனா ?'


CAT எழுத வேண்டும். கவனமாய் ஒரு கணக்கை முடிக்க முடியவில்லை. உன் முகம்தான் மனதில் வருகிறது. ஒருவேளை , பரீட்சை அன்றும் குழம்பிப்போய்க் கோட்டை விட்டால் ..... என் கடந்த கால இறுமாப்புகளோடு என் எதிர்காலக் கனவுகளும் என் இயலாமையால் இடிந்து போய்விடுமோ ?

பல காலம் காத்திருந்து விட்டேன். இந்நேரம் இதை விடுதியில் ராமு வாசித்துக் கொண்டிருப்பான். 4 30 மணிக்கு அறையிலிருந்து கிளம்பினேன். நீண்டு யோசித்துத் தீர்க்கமாய் முடிவெடுத்திருக்கிறேன். தூக்கு, மாத்திரை, கத்தி எல்லாம் கோரமாக்கி என்னை அசிங்கமாக்கிவிடும். என் சிரித்த முகமே உங்களுக்கு நினைவிருக்கட்டும். 

செத்துப் போகலாம் என்று உணர்ச்சியின் வேகத்தில் நான் முடிவெடுக்கவில்லை. நான் அறிவாளி ( என்று இன்னும் நம்புகிறேன் ) . என்னை இழந்து வேறொரு நானாக - ஒரு கோழையாக , ஒரு இயலாதவனாக , ஒரு தோல்வியாக - நான் மாறினால் என்னை எனக்கே பிடிக்காது. அந்த என்னை லலிதாவும் காணக்கூடாது. புலம்பிச் சாகாமல் தைரியமாகக் குதித்துச் சாகப் போகிறேன். 

மருதமலை, ஆனைகட்டி, வால்பாறை, சிறுவாணி, ஊட்டி - எங்காவது ஒரு உயரம். பேருந்து நிலையத்தில் முடிவு செய்து கொள்கிறேன். @ ராமு , உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டா. எவ்வளவோ நம்பிக்கைகளை நீங்களும் எனக்கு ஊட்டியிருக்கிறீர்கள். பசங்களுக்குப் புரிய வை நண்பா. எனக்கு லலிதா மேல் எந்தக் கோபமும் இல்லை. யார் மேலும் இல்லை. கோபமே இல்லை. மரணம் என்னை வேறு எங்காவது அழைத்துச் சென்று மனதை மாற்றும் என்று பார்க்கிறேன். அவ்வளவுதான்.

என் உடலைத் தேடாதீர்கள். பேருந்தில் போகையில் எல்லாம் மனம் மாறிவிட மாட்டேன். கொஞ்சம் பக்குவமாக வீட்டில் சொல்லிவிடுங்கள். இந்தக் கடிதத்தை அவர்கள் காண வேண்டாம். அவர்களுக்கு நான் தற்கொலை செய்து கொண்டதையே மறைத்துவிடச் சொல்லிக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் செத்தவனுக்குக் கூட ஒரு மாதம் அழுது தேறி விடுவார்கள். தம்பி இருக்கிறான். தொலைந்ததாய்த் தேடினால் தேடிக் கொண்டே காத்திருந்து ஏங்க வேண்டியதுதான். அது அவர்களுக்கு வேண்டாம். 

எல்லாருக்கும் நன்றி .'

உறைந்து போய் நிற்கிறோம். எங்கு போய்த் தேடுவது ? இப்போதே மணி பதினொன்றுக்கு மேல் ஆகி விட்டது. யாரிடம் சொல்வது? எப்படி ?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"மச்சி ...... இதப் பாருடா" , அறையில் அருள் தன் கணிணித்திரையைக் கூப்பிட்டுக் காட்டினான். 

'கணேஷ் குமார் உடனான தொடர்பைப் புதுப்பிக்கவும். அவரின் சுவரில் ஏதாவது எழுதவும்' என்று கேட்டது Facebook. அவ்வளவு யோசித்துச் செத்தவன் சாகும் முன் இணையத்தில் தன்னை அழித்துவிட்டுப் போக மறந்து விட்டான். என் விரல்கள் துடித்தன. அவனோடு கூடியிருந்த அத்தனை நிமிஷங்களும் அலையாய் அடித்துக் கண்ணில் தெறித்தது. அருளும் கலக்கமாய்ப் பார்த்தான். நான் அவனின் சுவரில் எழுதத் தொடங்கினேன். 

'ஒருதலைக் காதலுக்கும் ஒரு கண்ணியம் இருக்கு டா. கடைசி வரை நிக்கணும். இல்லை நல்லபடியா விடணும். இது நாக்கைத் தொங்கவிட்டு அலையுற விஷயமும் இல்லை. தூக்கைத் தொங்க விட்டுச் சாகுற விஷயமும் இல்லை. போயிட்டியேடா .... பொட்டை !!!'

விஷயம் தெரிந்து சில வாரங்கள் அவன் மரணத்தை மறுத்து அவனைத் தேடிக்கொண்டிருந்த அவனின் அப்பா கொஞ்ச நாள் முன்னால் தான் உண்மையை ஒத்துக்கொண்டு உடைந்து போனார். இன்று வீட்டில் அவனின் படத்தை வைத்துக் காரியம் நடக்கிறது. நாங்களும் கோபமும் வருத்தமும் கலந்து அங்கு நிற்கிறோம்.  

அவன் அப்பா காக்கைக்குச் சோறு வைத்துக் கத்துகிறார். 

கா .. கா.... கா... கா ......

-மதி