May 23, 2010

#2 - தரிகிணதோம்(நான்காண்டுகள் கோவையில் கல்லூரியில் கழித்த பொன்னான நாட்களில் சந்தித்த சுவாரசியங்களைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பை உருவாக்கலாம் என்று ஒரு சின்ன எண்ணம். இதே போல கல்லூரிச் சாலை # என்று குறியிட்டு இன்னும் பல கதைகள் ஒவ்வொன்றாய் வரும். இந்தப் பதிவு இத்தொடரின் இரண்டாவது கதை ஆகும். இந்தத் தொடரின் மற்ற கல்லூரிக் கதைகளை வாசிக்க கல்லூரிச் சாலை என்ற சுட்டியைத் தட்டிப் பாருங்கள். 

என் கதைகளுக்கு வித்திட்ட தோழர்கள் தோழிமார் அனைவர்க்கும் நன்றிகள். இதன் மூலம் யாரையும் காயப்படுத்தவோ கலாய்க்கவோ எனக்குத் துளியும் எண்ணமில்லை. அத்தனை கதைகளிலும் அத்தனை பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. உண்மைகள் கொஞ்சம் என் கற்பனைகள் அதிகம் சேர்த்த கதைகள். நிஜப்பெயர்களை அடையாளம் கண்டுகொண்டால் வாசகர்கள் உங்களுக்குள் புன்னகைத்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்ளவும், யாரும் தயவு செய்து public forum comment இல் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அரவணைப்புகள் அத்தனை நண்பர்களையும் சாரும். அழுகின முட்டைகளை நான் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்.

சந்தோஷமாய் என் கல்லூரிக்குள் வாருங்கள்.....)

......................................................................................................

அதிகாலைக் குளிரோடு ரயில் வடகோவையைத் தொட்டபோது கண் விழித்தது .... இப்போது வரை சூடாக சுழன்று கொண்டிருக்கிறேன். குளித்து, நல்ல பிள்ளை உடை உடுத்தி, கொஞ்சம் விபூதிக் கீற்றிட்டு அபிஷேக் அறைக்கு விரைகிறேன். அபிஷேக்- எங்கள் placement representative (PR)- எங்கள் அனைவர்க்கும் வேலை வாங்கித் தந்து விட்டுதான் அடுத்த வேளை சாப்பிடுவேன் என்று உறுதியோடு இருப்பது போன்ற உடலமைந்தவன். இன்னும் ஒரு மணி நேரத்தில் என் நேர்முகத் தேர்வு !
"வா மச்சி........ உன்னால கண்டிப்பா முடியும். டென்ஷன் ஆகாம நெர்வஸ் ஆகாம இருந்தாலே தூக்கிரலாம். ஒரு தடவை இதெல்லாம் ரிவைஸ் பண்ணிக்கோடா.." , மேசை மேல் மூன்று புத்தகங்கள் சீராக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. எங்கள் துறைப் பாடத்திட்டப் புத்தகம், யஷ்வந்த் கனித்கரின் 'Let Us C' மற்றும் ஒரு நோட்டில் தினகரின் குண்டுகுண்டு கையெழுத்தில் பல குறிப்புகள். தினா எழுதி வைத்திருந்ததை மட்டும் படித்து அபிஷேக்கிடம் ஒரு தடவை ஒப்பித்துவிட்டுக் கடவுளை வேண்டிக் கொண்டு கிளம்பினேன். கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. கிளம்பும் நேரத்தில் வேறு அபிஷேக் டையைச் சரி செய்கிறேன் என்று கழுத்தை நெறித்து வாழ்த்தி அனுப்பினான். 
ஒரு முப்பது வயதிருக்கலாம் இவருக்கு. ஒரே ஒருவர். என் கோப்புகளை வாங்கி வைத்துவிட்டு மேசையில் முன்னால் சாய்ந்து, "ப்ளீஸ் டெல் அபவுட் யுவர்செல்ஃப் தினகர்...." என்கிறார். 
----------------------------------------------------------------------


அப்பா பெயர் துரைராஜ். அம்மா பெயர் காமாட்சி. பத்தில் 1006 பன்னிரெண்டில் 1106. விருப்பங்கள் ஓவியம், இசை ........


"டேய், சொன்னாக் கேளுடா ! நீ ஏன் கஷ்டப்படுறே. நீ சொல்லு நான் எழுதறேன்", தினகரிடம் அபிஷேக் கெஞ்சுகிறான். தப்பான நேரத்தில் சிறுநீரகத்தில் கட்டி கரைக்கிறேன் என்று இங்கு வந்து படுத்துக் கிடக்கிறான் தினா. ஒரு வாரத்தில் அந்த Aventus நேர்முகத்தேர்வு. ஏற்கெனவே வந்த பெரிய கம்பெனிகள் கழிந்து போய்விட்டன. இதுவும் போனால் மன்னார் அண்டு கம்பெனி தான் !


"இல்லடா பரவால்லே, எனக்காக நீங்க இவ்ளோ பண்றீங்க. நான் இதையாவது பண்றேண்டா. சிவா இண்டர்வியூ போறதுக்கு முன்னே நல்லா படிச்சுக்கச் சொல்லுடா. மாட்டினா பெரிய பிரச்சினையாயிடும்", வலியோடு தினா அவன் ஜாதகத்தை எழுதிக் கொடுக்கிறான். 


"பயப்படாதேடா, சிவாட்ட பேசிட்டேன். அவன் சமாளிச்சிருவான். உனக்கு எப்படியும் கெடைச்சிரும். அப்படியே நீ 'Tell about yourself'கு ரெடி பண்ணி வெச்சிருந்ததும் எழுதிக் கொடுத்திரு. நீ நல்லா ரெஸ்ட் எடு. நாங்க பாத்துக்கறோம்."


------------------------------------------------------------------------


TELL ME ABOUT YOURSELF.....


இருபத்தி இரண்டு வருஷ சாதனைகளை இரண்டு மூன்று நிமிஷங்களில் நல்ல ஆங்கிலத்தில் தங்குதடையில்லாமல் சொல்ல வேண்டும். பல தேர்வுகள் இந்த இரண்டு நிமிஷத்திலேயே முடிவாகி விடும். 


பலருக்கு ஏறத்தாழ மூன்றரையிலும் சிலருக்கு எக்குத்தப்பாக ஏழரையிலும் முடியும் விஷயம்- வேலை ! இதற்காகத்தான் அத்தனை தரிகிணதோம்களும் தலைகீழ் நின்று பழகுகிறோம். ஆங்கிலம் படிப்பதும், ஆர் எஸ் அகர்வால் படிப்பதும், அட வெறுமனே படிப்பதும் கூட இந்த வேலைக்காலத்தில் தான் கல்லூரியில் அசுரகதியில் நடக்கும். முதல் அசுரன்- ஆங்கிலம் !

........................................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...

- மதிMay 11, 2010

#1 - அருள்குமரனும் அறுபது முரடர்களும்

(நான்காண்டுகள் கோவையில் கல்லூரியில் கழித்த பொன்னான நாட்களில் சந்தித்த சுவாரசியங்களைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பை உருவாக்கலாம் என்று ஒரு சின்ன எண்ணம். இதே போல கல்லூரிச் சாலை # என்று குறியிட்டு இன்னும் பல கதைகள் ஒவ்வொன்றாய் வரும். இந்தப் பதிவு இத்தொடரின் முதல் கதை ஆகும். இந்தத் தொடரின் மற்ற கல்லூரிக் கதைகளை வாசிக்க கல்லூரிச் சாலை என்ற சுட்டியைத் தட்டிப் பாருங்கள். 


என் கதைகளுக்கு வித்திட்ட தோழர்கள் தோழிமார் அனைவர்க்கும் நன்றிகள். இதன் மூலம் யாரையும் காயப்படுத்தவோ கலாய்க்கவோ எனக்குத் துளியும் எண்ணமில்லை. அத்தனை கதைகளிலும் அத்தனை பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. உண்மைகள் கொஞ்சம் என் கற்பனைகள் அதிகம் சேர்த்த கதைகள். நிஜப்பெயர்களை அடையாளம் கண்டுகொண்டால் வாசகர்கள் உங்களுக்குள் புன்னகைத்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்ளவும் யாரும் தயவு செய்து public forum comment இல் பெயர்களை வெளிப்படையாக அப்பெயர்களைக் குறிப்பிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அரவணைப்புகள் அத்தனை நண்பர்களையும் சாரும். அழுகின முட்டைகளை நான் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன். 


சந்தோஷமாய் என் கல்லூரிக்குள் வாருங்கள்.....)


......................................................................................................ஈரோடு பக்கத்தில் சங்ககிரிக்கு அடுத்ததாக சின்னாக்கவுண்டனூரைத் தொட்டாற்போலவே மேற்காலே பார்த்த மாதிரி மூன்று வீடுகள் கொண்ட ஒரு ஊர் இருக்கிறது. அந்த மூன்று வீடுகளில் முதல் வீட்டிலிருந்து ஒத்தையடிப்பாதை, மண் ரோடு, சிமெண்ட் ரோடு, தார் ரோடு, தேசிய நெடுஞ்சாலை எல்லாம் தாண்டி வந்து என் நண்பனானவன் அருள்குமரன். இது மாதிரியான பாதையிலேயே GCTகு வந்தவர்கள் பலர் உண்டு. இன்னொரு நண்பன் வெங்கி கூட இதே மாதிரிதான் ஈரோடு பள்ளிபாளையம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப்புக்குப் பக்கத்தில் இன்னும் பெயர் வைக்காத ஒரு ஊரிலிருந்து வந்தான். அவன் வீட்டுத் தபால் கூட 'Near Anjaneyar Kovil Stop'  என்று முகவரி எழுதித்தான் வருமாம் ! நான்கில் மூன்று ஆண்டுகள் அருளோடு அறை பகிர்ந்து வாழ்ந்த அதிர்ஷ்டசாலி நான். வாட்டசாட்டம் வாலிபம் வனப்பு எல்லாம் இருந்தது அவனுக்கு. எருமைப்பாலில் காம்ப்ளான் போட்டுக் குடித்து வளர்ந்தவன். ஆனால் இதுவரை அவன் வாழ்வில் ஒரே ஒரு சுவை மட்டும் கூடி வரவே இல்லை. அது வந்த கதைதான் இது !


கல்லூரியில் சேர்ந்த புதிதில் நான் கோவைக்கும் கொங்குத் தமிழுக்கும் புதிது. எங்கள் திருநெல்வேலி மக்கள் போல் 'எலே மக்கா' என்று பேசினால் மரியாதை கெட்ட ரவுடிப்பயல் என்று முத்திரை குத்தியது கோவை. அருள் தான் எனக்குக் கொங்கு வாத்தியார். முதலாமாண்டு அறையில் சேந்த இரவில் அவன் "சூளான் சூளான்" என்று எழுப்பியதும் நாங்கள் பூரானுக்குப் பயந்து தரையெல்லாம் துழாவிக்கொண்டிருக்க, அவன் காற்றில் கைகளை வீசி இரண்டு கொசுக்களைக் கொன்றுவிட்டு "அடிச்சுட்டேண்டா, ..... தூங்கு பாத்துக்கலாம்" என்று போர்வைக்குள் போய்விடுவான். முதல் வருஷம் விடுதியில் எங்கள் மெய்க்காப்பாளர் மேஜர் சிங்காரம் தாத்தா வேறு "கிரவுண்டு பக்கம் போனா சீனியரெல்லாம் இடுப்பு மேல மிதிச்சுக் கொன்னு போடுவாங்க" என்று பயமுறுத்தி வைத்திருந்ததால் வகுப்பும் விடுதியும் மட்டுமேயென்று வாழ்ந்திருந்தோம். ஒரே விடுதியறை. வகுப்புகள் வெவ்வேறு எங்களுக்கு.அருள் மெக்கானிக்கல் எடுத்திருந்தான். Red Bull என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட செவ்வழகன் சார் துறைத்தலைவராக இருந்த காலம் அது. காலங்காலமாகவே மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டுக்காக அமைந்து வந்த இலக்கணங்கள் இம்மி பிசகாத காலம். புகைவாசனை மது வாசனை அதிகம். பெண்வாசனை கடினம். படிப்பு வாசனை ஓரளவு. Project என்றால் Full bottle. Practical என்றால் Pen Drive- இது தொழில்நுட்ப முன்னேற்றம் !


ஆனாலும் கௌதம் மேனன் படக் கதாநாயகர்கள் மாதிரி மாணவர்களெல்லாம் நல்ல நண்பர்கள். அருள் நல்ல் படிப்ஸ் பையன் அவன் வகுப்பில். அறுபது பேரில் ஆறேழு பேர் தேறலாம் அவன் வகையறாவில்...... ஆனால் 'மெக்கானிக்கல்' என்று வந்துவிட்டால் அத்தனை பேரும் ஒன்றாய்க் கிளர்ந்தெழுந்துவிடுவார்கள். கெத்தை விட்டுக்கொடுக்க முடியமா ?!பொதுவாகவே மெக்கானிக்கல் பையன்கள் கல்லூரிப் பெண்களை அவ்வளவாகக் கண்டுகொள்ளாமலே இருப்பார்கள் - விடுதி மாடிப்படிகளில் நடக்கும் ஒரு சிலரின் கடலைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருப்போம் இப்போதைக்கு. திரைப்படக் கதாநாயகிகளுக்கு அவர்களின் கணிணித் திரைகளில் இடமுண்டு. ஆனால் GCT பெண்களுக்கு அவர்களின் பொதுப்பார்வையில் இடம் குறைவு. இதில் ஒரு உறுதியான நியாயம் கூட இருப்பதாய்ப் பரவலான் கருத்து உண்டு (நான் உட்பட). இருந்தாலும் நட்பின் நிமித்தமாக ஒவ்வொரு மகளிர் தினத்தன்றும் ஒட்டுமொத்தமாக ஒற்றை ரோஜாக்களை வாங்கி ஒவ்வொரு பெண்ணுக்கும் - அழகி அட்டு வேறுபாடின்றி - விநியோகம் செய்வது மெக்கானிக்கல் மரபு. மூன்றாமாண்டில் இதுபோலொரு ரோஜாக்கூட்டத்தினால்தான் அருள்குமரனின் வாழ்வில் அந்த சுவை வந்தது. இனிப்புச் சுவை- இனியா !

இனியா? என்று நீங்கள் கேட்கலாம். இனிதான் ! மூன்றாமாண்டும் முதலாமாண்டும் கைகோத்த கதைகள் எங்கள் கல்லூரிக்குப் புதிதில்லை. ஆனால் இது காதலில் ஓடின அந்தக் கதை இல்லை. இது ஓட்டின கதை !

பாகிஸ்தானில் என்ன நடக்குதென்று கூட சுலபமாய்த் தெரிந்து கொள்ளலாம். உள்நாட்டுதுணை இல்லாமல் எங்கள் பெண்கள் விடுதிகளைப் பற்றி சேதியறிவது ரொம்ப சிரமம். அந்த மர்மக்கோட்டையிலே - எனக்கு அந்த உள்நாட்டு சம்பந்தங்கள் சம்பவிக்காமலே போனதால் இன்னும் எனக்கு மர்மமே - ஒற்றை மெக்கானிக்கல் பெண்ணாய் இனியா நுழைந்தாள். மெக்கானிக்கல் பெண் என்பது எங்கள் விடுதி நீர்க்குழாய் போல - எப்போதாவதுதான் கூடி வரும். Red Bullஇன் தங்கை மகள் சிவில் படித்துக்கொண்டிருந்ததுதான் கடந்த மூன்றாண்டுகளில் குறைந்தபட்ச சம்பந்தம். அந்த வருஷம் காலரைத் தூக்கிவிடவும் கைகளை ஓங்கவும் வல்ல ஒரு பெண் மெக்கானிக்கல்லில் நுழைந்ததற்காக அருள் ரொம்பவே சந்தோஷப்பட்டான் - அவன் மட்டுமல்ல - 60 x 4 பேர்களின் பெருமையாய் மாறியது அந்த நுழைவு. 
"மொத்த ஹாஸ்டல்லயும் ஒரே ஒரு மெக்கானிக்கல் பொண்ணு. அவ எவ்ளோ கெத்தா இருப்பா இல்ல்" என்று அருள் அடிக்கடி ஆச்சரியப்படுவான். நிஜம் என்னவென்று எங்களால் யூகிக்கத்தான் முடிந்தது. மர்மக்கோட்டை !

பெண்கள் விடுதிக்கு ரோஜா விநியோகிக்கும் ரோஜாஸ் செயலாளராக இனியா நியமிக்கப்பட்டாள். அவளோடு மலர் ஒருங்கிணைப்பும் மற்ற ஒருங்கிணைப்புகளும் செய்ய அருள்குமரன் அனுமதிக்கப்பட்டான். அவள் வேறு கொஞ்சம் எடுப்பாக இருந்தாளா ... அந்த 60 x 4 பேருக்கும் பழக ஆசை, ஆனால் சுற்றம் பயம். எப்படியும் அவர்களில் ஒருவன் அவள் புண்ணியத்தில் விடுதியில் குமுறுகாய்ச்சப்படப்போகிறான். அப்பாவி அருள்குமரன் அகப்பட்டான். அவனும் மறுப்பேதும் சொல்லாமல் ஒருங்கிணைக்க ஒத்துக்கொண்டது வேறு விஷயம் !


அதில் தொடங்கியது கதை. அப்புறம் வேலை நிமித்தம் அவள் செல் எண் இவன் வசம் வரவும், சிலபல உரையாடல்களும் குறுஞ்சேதிகளும் வரவும், பையன் வசமாக மாட்டினான். செய்வதற்கு ஒன்றுமேயில்லை என்றால் இவன் செல்லெடுத்து அவளுக்கு missed call  கொடுத்துக் கொளுத்திப்போட்டுப் போவது ஒரு பொழுதுபோக்காகவே ஆகிப்போனது. இன்னும் கொஞ்ச நாள் போகவும், அவள் செல் எண் கொஞ்சம் பரவியது. மற்றவர்க்கு வரும் SMSகளில் மறக்காமல் 'அண்ணா' சேர்ப்பவள் அருளை மட்டும் அண்ணாவாக்காமலே இருந்தாள். கிட்டத்தட்ட அத்தனை SMS களும் Hmmm என்றே ஆரம்பித்தன. அருளுக்கு மட்டும். அதுவும் மற்றவர்க்கு இல்லை.

குறுஞ்சேதிகளிலேயே மிகவும் குழப்பமான வார்த்தை இந்த 'Hmmm'. ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம், வேண்டியதை வைத்துக்கொள்வதற்கு. Hmmm என்று ஆரம்பித்தால் ஒரு அர்த்தம், Hmmm என்று முடிந்தால் ஒரு அர்த்தம், வெறும் Hmmm மட்டும் என்றால் வேறு அர்த்தம், அத்தோடு மூன்று புள்ளிகள் சேர்ந்து Hmmm ... என்றால் மற்றொரு அர்த்தம். அட பழகிப்போனபின் அந்த Hmmm இல்லாமல் சேதி வந்தால் அதற்கும் ஒரு அர்த்தம். இனியா ஒரு கேள்விக்குறியாகவே பலவகை Hmmmகளையும் தொடுத்து எய்தாள்.


அருளும் பாவம்... அறையில் ஐந்தாறு பேர் கூடினால் அவனை ஐந்து கியரிலும் ஓட்டிப்பார்த்துப் போனார்கள். கோபப்பட முடியாது. வெட்கப்பட்டால் தொலைந்தான். ஒத்துக்கொள்ளவும் வழியில்லை. பேச்சை மாற்றப் பார்த்தால் முத்திரை குத்திவிடுவார்கள். அவனின் வெள்ளைக்கொடி அதிகமாகக் கசங்கிக் கந்தலாகிக் கொண்டே இருந்தது. சில தனிமைகளில் "இவனுங்க உண்மைக்குமே அந்தப் பொண்ணோட சேத்து வெச்சுருவானுங்க போல" என்று அங்கலாய்ப்பான். "அந்தப் பொண்ணும் இன்னும் உன்னை அண்ணான்னு சொல்லலியேடா" என்று நானும் பந்தைப் போட்டுப் பார்ப்பேன். அவளின் SMSகளை அவன் செல்லில் folder போட்டு ஒளித்து வைப்பது எனக்கு மட்டும் தெரியும் !

இறுதியாண்டு ...... வினை ஆகஸ்டு 8ஆம் தேதி வந்தது. அவளின் பிறந்தநாள் ! சும்மா பேச்சுக்கு வாழ்த்திவிட்டு treat கேட்டவனை மாலை 5 மணிக்கு Fresh & Honestகு வரச் சொல்லிவிட்டாள் !! "மச்சான் ...... இது ஆவுறதில்லை , நீயே பாரு" என்று அந்த SMSஐ என்னிடம் காட்டினான். எனக்கே ஆச்சரியமாகிவிட்டது. அவனை மட்டும்தான் அழைத்திருக்கிறாள் என்று உறுதியான பின் அவன் உதறத்தொடங்கி விட்டான்.

மதியம் இருவரும் போய் ஒரு வாழ்த்து அட்டை வாங்கினோம். நானே ஒரு கத்துக்குட்டி. என் நண்பன் என்னை மதித்து ஆலோசனை கேட்கிறான். அவன் விதி !


4 30 மணிக்கு வெளியிலிருந்து என்னை செல்லில் அழைக்கிறான். "மச்சி பாத்துட்டானுங்கடா . டீ சாப்பிடப் போறேன்னேன். வா போலாம்னு சைக்கிள் கூடவே வரானுங்க. நீ வாடா ..." அது சரி ! Libraryகுப் போகிறோமென்று பொய் சொல்லி இருவருமாய்க் கிளம்பினோம். Fresh &and Honestகு முந்தின சந்தில் என்னை இறக்கிவிட்டு "திரும்பி நடந்து போயிடுறா" என்றுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டான்.

சரியாக 5 20 மணிக்கு மாட்டினான் அருள்குமரன். சந்தேகம் வந்து பத்து நிமிஷம் கழித்து மூன்று சைக்கிள்களில் அந்த வட்டாரம் முழுவதும் அலசிப் பார்த்திருக்கிறார்கள். 5 20கு Fresh & Honestகு எதிரே மூன்று சைக்கிள்களையும் நிறுத்தி வாழைப்பழம் வாங்கி சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். "நம்ம friendsஆ இருக்கிறதை ஏன் இவங்க எல்லாம் இப்படி ஓட்டுறாங்க" என்று அவள் சும்மா கேட்டுவிட்டு மேற்கொண்டு தேனீர் பருகிக்கொண்டே இருந்திருக்கிறாள். பதினைந்து நிமிஷம் கழித்து வெளியே வந்து - கிட்டத்தட்ட அவனால் வெளியே இழுத்து வரப்பட்டு - அவள் தன் கூடை வைத்த சைக்கிளில் ஒய்யாரமாய்ப் போய்விட்டாள். சில வாழைப்பழத் தோல்கள் சாலையின் எதிர்முனையில் வேகமாய்க் கீழே விழுந்தன !!

அன்று 9 30 மணிக்குத் தனியாக அறைக்கு வந்தான். முகமெல்லாம் சிவந்து - வெட்கமா உண்டகட்டியா என்று நான் கேட்கவில்லை - Red Bull மாதிரியே இருந்தான். எருமைப்பால் குடித்து வளர்ந்தவன் எதிர்ப்பால் மேட்டரில் மாட்டிக்கொண்டான் பாவம் ! வந்ததும் கொஞ்சம் தைலத்தைக் கழுத்தில் தேய்த்துவிட்டுப் படுத்து விட்டான். எத்தனை தடவை எத்தனை திசைகளில் தலையாட்டியிருப்பானோ ?!


சில மாதங்கள் இனியாவோடு பேசவேயில்லை. அந்த Fresh & Honest உரையாடலை என்னிடம் சொன்னதில் 'friends' என்ற வார்த்தை மட்டும் freshஆக மனதில் நிலைத்து விட்டது. எந்த அளவுக்கு honest என்று தெரியவில்லை ?!

மார்ச்சில் Technotryst நெருங்கியது. உல்டா விருதுகள் தேர்வாகிக் கொண்டிருந்த வேளை. 'Best pair of Mechanical Department' தரலாமா என்று அவனை ஆழம் பார்த்தார்கள். மூன்று புட்டிகள் வாங்கிக்கொடுத்து அந்த நாசகாரியத்தை நிறுத்தினான். குறைந்தபட்சம் ஒரே ஒரு slideஆவது போடுவோம் என்று அடம் பிடித்தார்கள். மூன்றாமாண்டு இரண்டாமாண்டு பயல்களெல்லாம் போகிற போக்கில் "உங்க ஆளைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்கண்ணா. உங்க ஆளுங்கிறதாலதான் சும்மா இருக்கோம்" என்று சொறிந்து வைத்துப் போனார்கள்.

Technotryst நாள் வந்தது. இன்று அறுபதில் ஒன்று ஒரு முடிவு நிச்சயம். அருள் கணிணிகளைக் கட்டியாளும் Syscom மேஜையில் சுழன்று கொண்டிருந்தான். சரியாக  6 47கு அருள் பெரிய திரையில் ஒரு slideஓட விட்டான். மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஒத்திகையில் இந்த slide வரவேயில்லை.

மெக்கானிக்கல் துறையில் சிறந்து விளங்கின நண்பர்களின் படங்கள், அவர்களின் நான்காண்டு வாழ்க்கையில் பொன்னான தருணங்களெல்லாம் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருந்தது. அதன் போக்கில் "நம் சகோதரர்களும் சகோதரியும் சரித்திரம் படைப்போம்" என்று வாசகம் வருகிறது. பல பேர் இருக்கும் புகைப்படத்தோடு, அவள் இருக்கிறாள், அவன் இல்லை. அடுத்தது அப்படியே "இனிமையான தோழமைகள் என்றும் தொடர்வோம்" என்று வாசகம். மூன்று படங்கள் தனித்தனியாகத் தோன்றிக் கூடுகின்றன. மூன்றிலும் அவன் இருக்கிறான். ஒன்றில் அவளுடன். அவளுடன் மட்டும் !

முந்தின நாள் ராத்திரி இதற்காக வாசகங்கள் எழுதி அவனோடு சேர்ந்து புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்ததை எண்ணி வியர்வை துடைத்து சிரித்துக்கொண்டேன். கைதட்டல்களும் விசில் சத்தங்களும் அடங்கின பின் அடுத்ததாக EEE பெண்கள் அலங்காரமாக மேடையேறினார்கள் நடனமாட !

- கா கோமதி சங்கர்