Dec 26, 2010

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்....

மஹாபாரதத்தில் தான் முதல் முதலில் அட்சய பாத்திரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சின்ன வயதில் ஒரு ஞாயிறு காலையில் தூர்தர்ஷனில் பார்த்துவிட்டு அப்பாவிடம் அந்தப் பாத்திரத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒற்றைப் பருக்கையையும் பற்றி விசாரித்த நினைவு இன்னும் இருக்கிறது. அப்போது ஞாயிற்றுக்கிழமைகள் எனக்கு மிக முக்கியமானவை. ஏனென்றால் மற்ற நாட்களில் நான் பள்ளிக்குப் போக வேண்டியிருக்கும். யோசித்துப் பார்த்தால், மற்ற நாட்களில் செய்வதற்கு ஏதும் இருப்பவனுக்குத் தானே ஞாயிற்றுக்கிழமை சுகம் என்பதே..... அழகாய்த் தலை வாரி, ஷூ மாட்டிவிட்டு, ரெண்டு தோசைகளை நெய் விட்டுச் சுட்டுக் கொடுத்துக் காலையின் அவசரத்தில் பின்னாலேயே ஓடி வந்து ஊட்டி விட எனக்கு ஆள் இருந்தது. எனக்கு அட்சய பாத்திரம் ஞாயிற்றுக்கிழமை தூர்தர்ஷனில் மட்டுமே அறிமுகத்தில் இருக்கலாம்...... இந்த அட்சய பாத்திரம் பல குழந்தைகளுக்குத் தினமும் உணவையும், உலகத்தையும், ஒரு உன்னத உணர்வையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது!

தூர்தர்ஷன் எனக்குக் கர்ணனையும் அறிமுகப்படுத்தியது. எவர் எது கேட்டாலும் தயங்காது தானம் செய்யும் கர்ணன்! அப்பா அவனைப் பற்றியும் அற்புதமாகச் சொன்னார். ஆனால் புராணங்களின் மிகைப்படுத்துதல்களில் திளைத்துத் திளைத்தே தலைமுறைகளைக் கடந்து வந்ததாலேயோ என்னவோ ஏதோ ஒரு இடைப்பட்ட காலத்தில் கர்ணன் போல தானம் செய்பவன் முட்டாளாகவோ முழுக் கடவுளாகவோ தான் இருக்கமுடியும் என்றாகிவிட்டது. சராசரி மனிதன் இரண்டு நிலைகளிலும் இருக்க விரும்பாததால், மேலும் மேலும் மிகையிலேயே வாழ்ந்து பழகிவிட்டான். கர்ணன் எங்கோ இருக்கிறான் என்ற நம்பிக்கை கதகதப்பாக இருந்திருக்க வேண்டும். நிஜத்தில் கர்ணத்தனம் செய்தவனும் கூட கர்ணனிடமிருந்து இடக்கை தருவது வலக்கைக்குத் தெரியாது வைத்திருக்கும் பாடம் படித்திருக்க வேண்டும். அதிகம் கர்ணன்மார் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஊரில் கள்ளத்தனம் செய்பவனெல்லாம் இன்று கவலை இல்லாமல் சுற்றலாம். அவனை நாள் பூராவும் நம் வரவேற்பரையில் பார்த்துக்கொண்டிருக்க முடியும். கர்ணத்தனம் செய்பவன் இன்றும் கொஞ்சம் கூச்சப்பட்டுத்தான் வெளியே சொல்கிறான். இல்லை ஞாயிறு காலையில் மட்டும் தூர்தர்ஷனில்!

இந்தக் கர்ணத்தனத்தை நான் கத்திக் கத்தி வெளியே சொல்ல வாய்ப்பெடுத்துக்கொள்கிறேன்! சின்ன வயது வகுப்புகளில் வாத்தியார் கேள்விக்குப் பதில் தெரிந்தும் அமைதியாக இருக்கும் அறிவாளி நண்பனின் கையிப் பிடித்துத் தூக்கி விடுவது போல!

பசித்த வயிற்றில் பாடம் ஏறாது என்பார்கள். ஒரு வகையில் எழுதப் படிக்கக் கற்றுத்தருவதைத் தாண்டி நம் கல்வித்திட்டம் மேலாக ஒன்றும் பெரிதாகக் கிழிக்கவில்லை என்ற அங்கலாய்ப்பு எனக்கு இருந்தாலும் எழுதப்படிக்கக் கூட ஏலாத பலரிருக்க, அந்தக் கூச்சலை நான் இன்று கூவவில்லை. எங்கெங்கோ ஊர்களில் ஏதேதோ பெயர்களில் ஒரே காரணத்துக்காகப் பள்ளி தீண்டாத பல குழந்தைகளை ஒரு நற்கரம் தீண்டினால், அந்தக் குழந்தைகளுக்குப் பசியாற்றியபின் பாடம் சொல்லிக்கொடுக்க ஒரு நற்கரம் விழைந்தால், அந்தக் கூட்டத்திலிருந்து வரும் விரல்கள் பேனா கொடுத்தால் காகிதம் கேட்கும்படிச் செய்ய ஒரு நற்கரம் முயன்றால்...... அந்தக் கரத்தைத் தூக்கிப் பிடித்து உலகிற்குக் காட்ட இந்த வாய்ப்பை நான் சந்தோஷமாகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

அட்சய பாத்திரம் என்ற இந்த அமைப்பு - நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இவர்கள் அவ்வளவாகக் கூச்சப்பட்டுக் கர்ணத்தனம் செய்யவில்லை - நாடு முழுக்க லட்சக்கணக்கான வயிறுகளுக்குப் பசியாற்றி , வாழ்க்கைகளை அழகாக்க முயன்று வருகிறது. இந்தத் தொடர் வலைப்பதிவு முயற்சியும் தான் செய்யும் கர்ணத்தனத்தை உலகறியச் செய்யும் ஒரு முயற்சிதான். நாம் கைகொடுப்போம். கை தூக்கிப் பிடிப்போம்.

இவர்களின் பணியறிய அவர்களின் வலைதளத்தைப் பார்க்கலாம். இவர்களின் கனவறிய இந்தக் காட்சிச்சித்திரத்தைப் பார்க்கலாம். நீங்களும் ஒரு வலைப் பதிவு வைத்திருந்தால் நீங்களும் முயன்று பார்க்கலாம். நாம் எழுதும் ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் இன்னும் ஒரு 50 குழந்தைகளைக் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்கிறார்கள். களத்தில் இறங்கிக் கரண்டி பிடிக்க முடியாவிட்டாலும் கூட நாமும் கொஞ்சம் பசியாற்றலாம். இவர்களுக்கு நன்கொடைகள் வழங்க இங்கே சொடுக்குங்கள்.

பாண்டவரின் மாயப்பாத்திரமோ .... அந்தக் கர்ணனின் கதாபாத்திரமோ .... இந்த அட்சய பாத்திரம் பசியாற்றி, படிப்பூட்டி, தலை வாரி, ஷூ மாட்டி விடுவேன் என்று விடாமல் அடம் பிடித்துக் கர்ணத்தனம் செய்து வருகிறது. உட்கார்ந்த இடத்திலிருந்து ஒரு தரம் இவர்களுக்காகக் கை தட்டுங்கள் !!!

- மதி

Dec 12, 2010

களவாணிப்பய மவன்


அமாவாசை இரவு நிலவைத் தொலைத்துவிட்டு இருட்டில் தேடிக்கொண்டிருந்தது. ஊர் தூங்கிக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டிருந்தது. கதவோரம் நின்று விடை கொடுக்கும் வீட்டுக்காரியைப் பார்த்து ஒரு பரவசத்தோடு தெருவிறங்கினான் அவன்.

"இந்த மனுசனுக்கு இன்னைக்கு என்ன வந்துச்சு? இப்ப இது தேவையா... நல்ல புள்ளையப் பெத்து வச்சிருக்காரு போ. எப்படியோ... போறவரு காலையில பத்திரமா வீடு வந்து சேரணும் சாமி"  அவள் தனக்குத்தானே அங்கலாய்த்துக்கொண்டு திருநீறு பூசிக்கொண்டு படுத்துக்கொண்டாள். பத்திரமாக வந்துவிடுவான். போகிற காரியம் லேசுதான்!

களவைக் குலத்தொழிலாகக் கற்று, பின் சமீபத்தில் அதை மறந்திருப்பவன் அவன். அந்தக் காலத்தில் ஊர்க் களவாணியான அவன் அப்பாவின் கை பிடித்துக்கொண்டு முதல் நாள் தொழிலுக்குப் போன ஞாபகங்களெல்லாம் அவன் கண்முன்னே வந்துபோயின. நிஜமாகவே ரொம்ப நாளாகிவிட்டிருந்தது. கடைசியாக வீட்டுக்காரி பிரசவத்துக்காக மேலத்தெருவுக்குப் போய் தொழில் காட்டியது. புள்ளை பொறந்தபிறகு முதல் முறையாக இன்றுதான்! அதுவும் அவனுக்காகவே! இரவில் பயல் ஆச்சரியமும் அங்கலாய்ப்பும் கலந்து பேசின வார்த்தைகள் எல்லாம் அவன் கூடவே வந்து கொண்டிருந்தன.

"ஏந்தம்பி ! இன்னைக்குப் பள்ளூடத்துல டீச்சரம்மா உன்னை ஏசுனாவளாம்? அம்மே சொல்லுதா...."

"ஆமாப்பா.. எல்லாம் அந்த குண்டுப்பய சதீஷாலதான்"

"ஏன் தம்பி.. அவன் உன்னையென்ன செஞ்சான்.. என்ன ஆச்சுன்னு அப்பாட்ட சொல்லு"

"அந்த சதீஷ் இருக்காம்லப்பா.... அவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு ஒரு பேனா எடுத்துட்டு வந்தான். புதுசு. அவங்க அப்பா அவனுக்கு சிங்கப்பூர்லருந்து வாங்கிட்டு வந்தாராம். அதை வச்சு எங்கள்ட்ட எல்லாம் பெருமை பீத்திட்டே இருந்தான்.."

.......................................................

"மித்த பயலுவளெல்லாம் அதை வச்சு எழுதிப் பாத்துட்டுத் தாரோம்னு கேட்டோம். அதுக்கு அவன் வந்து..... எங்களுக்கெல்லாம் பென்சில்லதான் எழுதத் தெரியுமாம். பேனா வச்சு எழுதத் தெரியாதுன்னு கிண்டலடிச்சான். அவன் பேனா இருக்குல்லப்பா...... அது வந்து ஃபாரின் பேனால்லா... அதுனால இங்கிலீஷுல மட்டுந்தான் எழுதுமாம். எங்களுக்கெல்லா ஒழுங்கா இங்கிலீஷ் தெரியாது. தப்பா எழுதுனா பேனா வம்பாயிடுமாம். தரவே மாட்டேன்னு சொல்லிட்டான்....."

அவன் நினைத்துக்கொண்டான். 'அவனுக்கென்ன .. முதலாளி மகன். சிங்கப்பூர் பேனா கிடைக்கும். தங்கத்துலயே கூட பேனா செஞ்சு தருவான் அவங்கப்பன். ஊரான் காசெல்லாம் அவன் வீட்டுலதான குமிஞ்சு கெடக்கு.'

மகன் தொடர்ந்தான், "எங்கள்ட்ட ஷோ காட்டுதேன்னு சொல்லிச் சொல்லி அவன் அந்தப் பேனாவை வச்சு இங்கிலீஷுல எழுதுனாம்ப்பா... அப்பம் அவன் எழுதுனதுல நான் ஒரு ஃபெல்லிங்க் மிஸ்ட்டேக் பாத்துச் சொல்லிட்டேன். அவனுக்கு இங்கிலீஷ் தெரியலைன்னு எல்லாரும் சிரிச்சுட்டாங்க. அவன் ஒடனே பேனாவை எடுத்து மூடி வச்சுட்டு எங்கள்ட்ட சண்டை போட்டுட்டுப் போயிட்டான். "

........................................................இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...- மதி

Dec 9, 2010

ராப்போழ்து

இரவுப் பொழுதே
இருளின் ஒளியே
உந்தன் மடியில்தான்
எனக்குத் தாலாட்டு.
வாத்தியங்கள் வேண்டாம்
வார்த்தைகள் வேண்டாம்
அமைதியாக வருடும் உன் பாட்டு.

யாமத்தை ரசிப்பவன் நான்
தூக்கத்தையும் துறந்தவனில்லை.
கொஞ்சம் இப்படி
கொஞ்சம் அப்படி.

துயிலில் இரவழகா?
தூங்காத நிலவழகா?
இரண்டும்தான்.
உணர்ந்தோர் உணர்வார்.கண்ட இடமோ
கால் பதியாத இடமோ
கற்பனை இடமோ
கனவினில் நுழைய
கட்டணம் தேவையில்லை
கட்டுப்பாடுகள் அங்கில்லை. 

குளிர்ந்த பனியோ
கண்சிமிட்டும் விண்மீனோ
ஆங்கமர் நிலவோ
அதையும் தாண்டின ஒன்றோ
யாமத்தின் வானம்
ஓர் அட்சய பாத்திரம்
தட்டுப்பாடுகள் அதற்கில்லை. மணிக்கணக்கில்
விழித்துக் களைத்து
விழிகளே
மணியடித்து அழைத்து
கண் செருகி
மனம் இளகி
மரணத்தை நெருங்கி
தொடாமலே திரும்பிடும்
தூக்கம்.

மஞ்சத்தில் புரண்டாலும்
மனம் உறங்க மறுத்து
எண்ணப் பறவையின்
கூண்டைத் திறந்துவிடும்
கவிஞர்கள் எண்ணிக்கையில்
தெரியும் அதன்
தாக்கம்.


தூக்கத்தில் உளறி
தூக்கத்தில் சிரித்து
செய்வதனைத்தும் கொஞ்சம் 
தூக்கலாகவே செய்யும் அது
விழிப்பும் உறக்கத்துக்கும்
இடைப்பட்ட ஒரு 
கிறக்கம். 

கூர்க்காவின் கம்பும்
தவளைகளின் வம்பும்
காற்றும் மரமும்
கர்ஜனைக் குறட்டையும்
சந்தடி சாக்கில்
சங்கீதம் பாடும் அது
மெல்லிசைக்கும் மௌனத்துக்கும்
இடைப்பட்ட ஒரு
நல்லிசை. ஒவ்வொரு ராப்போழ்தும்
இரவின் மடியில்
சாய்ந்து கொள்கிறேன்
அது எப்பொழுதும்
சாமரங்களுடனே
என்னை வரவேற்கிறது!- மதி

நன்றி : அறிமுகத்தவம்

Dec 5, 2010

கால்களே ! உமக்கு நன்றி


இருவேறு பாதைகள்
இதோ என் கண் முன்னால்.
எந்தப் பாதையில் பயணம்?
என் மனதில் சலனம்.
இரண்டையும் கண்களால் அலசினேன்
முதல் பாதையில் வளர்ந்துள்ள புற்கள்
பாதங்களில் மிதிபட்டு
பாவமாய் இருந்தன.
இரண்டாவது பாதை
பசுமையாய் இருந்தது.
சுவடுகள் எதுவும்
சுலபமாய்த் தென்படவில்லை.
இளமை
என்னை இரண்டாவது பாதையில்
பயணிக்கத் தூண்டியது.
கால்கள் நடக்கத் துவங்கின....

யாருமற்ற பாதையில்
தனிமையில் நான்
தனிமை வினவியது,
"பாதை மாறி விட்டதோ?"

எண்ணம் ஏங்கினது
அந்த முதல் பாதைக்கு.
கால்கள் சொல்லின,
"வேறொரு நாள்
அதையும் பார்ப்போம்"
திருவிழாவில்
பொம்மை கேட்ட குழந்தையிடம்
கூறப்படுவது போல.

எண்ணம் எதுவும் பேசாமல்
பின்தொடர்ந்தது
குழந்தை போல.
இன்று ....
உலகம்
என்னைக் கொஞ்சம் தனித்தன்மையோடு காண்கிறது.

கால்களே !
உமக்கு என் உளமார்ந்த நன்றி ....

- மதி

சரியாக 31.12.2002 அன்று பத்தாம் வகுப்பில் THE ROAD NOT TAKEN (Robert Frost ) ஆங்கிலக் கவிதையால் கவரப்பட்டு முயற்சித்த முதல் மொழிபெயர்ப்பு. இன்று லேசாகத் திருத்திப் பதிகிறேன். இந்தக் கவிதை என்னை அன்று காரணமில்லாமல் ஈர்க்கவில்லை என்று தோன்றுகிறது. என் கால்களை இப்போது நன்றியோடு பார்க்கிறேன். 


The Road Not TakenTwo roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,
And having perhaps the better claim
Because it was grassy and wanted wear,
Though as for that the passing there
Had worn them really about the same,

And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I marked the first for another day!
Yet knowing how way leads on to way
I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I,
I took the one less traveled by,
And that has made all the difference.

Robert Frost

Dec 2, 2010

சூட்சுமம்என் பெயர் விஜயராகவன். நான் இறந்து பதினேழு நாட்கள் ஆகின்றன. செத்துப்போனோம் என்ற வருத்தமெல்லாம் மூன்றாம் நாள் பாலோடு போய்விட்டது. அதைவிட முக்கியமான குழப்பங்களில் இருக்கிறேன். "நான் யார்?" உயிரோடு இருந்தபோது இது வேறு விஷயம். இப்போது இது முற்றிலும் வேறான ஒரு கேள்வி. பேய் கதைகளுக்கெல்லாம் அழகு சேர்க்கக்கூடிய சூட்சுமமே ஒரு கட்டத்துக்கு மேல் யோசிக்காமல் இருப்பதுதான். ஆனால் அத்தனை கட்டங்களையும் தாண்டி இந்தப் புது இடத்தில் என்னால் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை. புது இடம் - ரொம்பப் பெரிய வெளியாகப் பரந்து இருக்கிறது. உயிரோடு இருப்பவர்களுக்கே ஒரு பூமி போதாத போது இத்தனை தலைமுறையாய் இறந்தவர்கள் இருக்கும் இடம் - பெரியதாய்த்தான் இருக்கும்! இங்கே எவரையும் தெரியவில்லை. வழி காட்டவும் நாதியில்லை. இறப்பிற்குத் தாய் தந்தை வேறு தேவை இல்லையே. 


நான் பார்த்திபன். மூன்றாமாண்டு கல்லூரி மாணவன். அப்பா அம்மா இல்லை. செத்துப்போய் விட்டார்கள். உறவுகளும் உதவித்தொகைகளும் என்னைப் படிக்க வைக்கின்றன. எந்த ஒரு மனிதனும் நாயைக் கண்டோ பேயைக் கண்டோ பயப்படுவான். நான் முதல் வகை. சிறு வயது முதலே அப்பாவும் அம்மாவும் அடிக்கடி கனவில் வருவதால் ஆவி பயமெல்லாம் பிடிக்கவில்லை. விடுதிகளின் தனிமையும் அப்பா அம்மாவின் கனவுகளும் இளமையிலேயே என்னிடம் மரணம் குறித்தும் கடவுள் குறித்துமான இன்ன பிற ஈர்ப்புகளைக் கொடுத்து விட்டன. நிஜத்தில் இன்று பேயென்று ஒன்று இருந்தால் அதனோடு என் அறையைப் பகிர்ந்து கொள்ள நான் தயார்.


உண்மைதான். நான் இப்போது பார்த்தியின் அறையில்தான் இருக்கிறேன். நல்ல அறிவாளிப் பையன்! இந்த சில நாட்களில் நான் இங்கே சந்தித்த ஒரு சிலரிடம் என் குழப்பங்களைப் பற்றிக் கேட்டபோது 'பேய் பூதமெல்லாம் வெறும் புரளி. பித்தலாட்டம். நம்பாதே' என்று சொல்லிப் போய்விட்டார்கள். பேயும் இல்லை என்றால் நான் யார்தான் என்று கொள்ள? ஒரு வேளை நான் பார்த்தது பகுத்தறிவுப் பேய்களோ என்னமோ? இரண்டு மூன்று மனிதர்கள் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் காரணமா அவர்கள் காரணமா தெரியவில்லை. பாவம் பயந்து போனார்கள். நிஜத்தில் பேய்களுக்கு விஷேஷ சக்திகள் உண்டா என்று தெரியவில்லை. அப்படி என்னிடம் ஏதும் இருந்தால் இனிதான் கண்டுபிடித்துப் பழக வேண்டும். 


சரி பேயாக இருக்கிறோமே, யாரையாவது பயமுறுத்திப் பார்க்கலாம்.... கொஞ்சம் வித்தை பழகலாம் என்று ஒரு நாள் முயற்சித்த போதுதான் பார்த்திபனைக் கண்டேன். விடுதியில் நண்பர்களோடு ஒரு ஆங்கிலப் பேய் படம் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் ஏனடா அங்கு போனோம் என்று நான்தான் வெறுத்துப் போனேன் கடைசியில். 


அன்று பார்த்த பேய் படம் நிஜமாகவே கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. சாதாரணமாக எனக்குப் பேய் படங்களைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். அன்று, கூட இருந்தவர்களும் படம் பிடித்துப் போகக் காரணமானார்கள். நீங்களும் பேய்க்குப் பயப்படும் ஆசாமிகளோடு இரவில் பேய்ப் படம் பார்த்தால் - பயப்படாமலிருந்தால் - இந்த மகிழ்ச்சியை அறிந்திருப்பீர்கள்.


....................................................................இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...- மதி

Nov 26, 2010

மாயக்கண்ணாடி

வாழ்வின் பருவங்களைப் பகுத்துப் படைத்துப் பரிசோதித்த ஒரு கவிதை முயற்சி.... ஒவ்வொரு பருவமும் ஐந்து வரிகளில் கவிதையாகவும் அதைத் தொடர்ந்து விளக்கமாகவும்...


பிறப்பு


அரவங்கள்* அற்றுப் போன
ஓர் அழகிய துறையின் கரையில்
புனலாட்டங்கள்* புரியாது சாய்ந்திருக்க
புணையொன்று* துணை வரும்
பற்றுக. 

(அரவம் - ஒலி ; புனல் - நீர்; புணை - படகு)


உலகியல் வாழ்வின் சத்தங்கள் சச்சரவுகள் அண்ட இயலாத ஓர் பிரதேசத்தில் - தாயின் கருவறையில் - அந்த நதிக்கரையினில் வாழ்வென்னும் நீச்சல் தெரியாது ஓர் உயிர் வீற்றிருக்க , உடல் என்னும் படகு உன்னை நதியைக் கடக்கக் கை கொடுக்கும் . பற்றிக்கொண்டால் பிறந்திடுவாய். 
சிறுபிள்ளைத்தனம்சுற்றித் தேயும் சக்கரம்
பற்றிப் போயும் பற்றியே போயும்
பயணம் மட்டும் அடி ஒன்றே அடைந்திருக்கும்
கடந்தது கடலென்பாய்
கடுகு. சிறுவனாய் வாழ்க்கையில் காலத்தின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து ஓடலாம். சுற்றிக் கொண்டே இருக்கும் காலச் சக்கரத்தைப் பற்றி ஓடி மூச்சு வாங்க ஒதுங்கி நின்றால் ஒரு கடலைக் கடந்தது போல இருக்கும். அப்போது தெரியாது , இன்னும் கடலில் காலைக் கூட நனைக்கவில்லை என்று!
கோபம்
வேள்வித்தீ முன் வீற்றிருப்போன்
ஆநெய்* ஊற்றி அனலினை ஏற்றீ
செங்குருதி சூடாகி
செங்குருதி சூடாக்கி
எரித்து எரிவான். 

(ஆநெய் - பசுநெய்)


வாலிபத்தில் மீசை முளைக்கும் பிராயம். கொண்ட குணம் கோபம் ஒன்றே. சுற்றி நிகழும் சம்பவங்கள் எல்லாம் உன் முன்னால் எரியும் வேள்வித்தீக்கு நெய் ஊற்றும். கோபம் கொள்வாய். கொள்ள வைப்பாய். கோபம் ஒரு தொற்று நோய் போல. பிறழ்ச்சி


சுண்ணத்தில்* நகை செய்து
பொன்வண்ணம்* பெரிதென்பான்
பரத்தை போதையேறி
பெண்வண்ணம் பிரம்மமென்பான்
பொருளெல்லாம் பரம்பொருளாகா. 

(சுண்ணம் - சுண்ணாம்பு ; பொன்வண்ணம் - பொன்னைப் போல)

தான் பார்ப்பதே நிஜம். தான் செய்வதே சரி. சுண்ணாம்பில் செய்த நகை தங்கமாய்த் தெரியும். காணும் கன்னியரெல்லாம் கைப்பற்றத் தோன்றும். எது நிஜம்? எது நகல்? தெளிவான குழப்பம்!காதல்


நங்கையவள் நகையினிலே
நான்கும் பிறழ்ந்து போவான்
வெப்பத்தில் பொசுங்கியபின்
கதிரவனே கடவுளென்பான்
பற்றினான்


உலகமே ஒரு பெண்ணில் தெரியும். ஒரு பெண்ணே உலகமாய்த் தெரியும். அவள் சிரித்தால் இவன் தொலைந்திடுவான். காதலின் ஆழங்களை மூச்சடக்கிக் கண்டபின்னர் காதலே கடவுளென்பான். அனுபவித்தவன் அறிவான். 


முடிச்சுகள்


குட்டிகள் கண்ட ஏறு*
பிழைக்கவே ஓடும்
ஓடும் பிணையுமாங்கே*
பிழைப்பையே தேடும்
பிழையன்று

(ஏறு - ஆண் சிங்கம் ; பிணை - பெண் மான்)

வேட்டையாடும் சிங்கம் குட்டிகளுக்கும் சேர்த்துக் கொல்லும். ஓடும் மானுக்கோ இரவு வரை உயிரோடிருந்தால் மட்டுமே குட்டிகளின் பார்வை. குட்டிகளின் பசிக்கும் சேர்த்து ஓட வேண்டும். அதுபோல் சொந்தங்கள் பொறுப்புகள் சேரச் சேர , காதலன் கணவனாய் தகப்பனாய் அரிதாரம் பூசுவான். இது பிழையல்ல. வாழ்வின் நியதி. தேடல்மெய்* மேலோர் மோகம் துளிர்த்து
மெய்* மேலோர் யாகம் வளர்த்து
மெய்யான மெய்யறிய
மெய்வருத்தி
மாய்வான்
( மெய் - இறை ; மெய் - உடல்)மெய்த்தேடல் துவங்கும். இருக்கும் கடவுளின் இருப்பிடம் தேடி ஓடத் துவங்குவான். காதோரம் நரைக்கும். கண்டுபிடிப்பதில் உறுதியோடே இருப்பான். வயதானாலும் , கால்கள் ஓடத் தயாராகவே இருக்கும்.முதுமைநீந்திக் களைத்த மீன்
முட்டையைத் தேடும்
முட்டை தரையிலுமில்லை
தண்ணீரிலுமில்லை
தெரிந்தும் தேடும்
வாழ்ந்து களைத்த காலத்தில் பேரப்பிள்ளை கைபிடித்து நடக்கையில் பேரனாய் மாற ஓர் ஆசை எழும். மீண்டும் பின்னோக்கி வாழ , தாயின் கருவறை அமைதியைக் கேட்க , எண்ணம் ஏங்கும். நடக்காதென்று தெரிந்தும் எண்ணிப் பார்த்தே சாபல்யமடைவான். 


மரணம்


தெப்பத்தில்* துளை விழும்
பாழும் விழி அழும்
பாரா விழி எழும்
புலன்கள்
புணை நீங்கச் சொல்லும்

(தெப்பம் - படகு ; புணை - படகு)


உடல் வலுவிழக்கும். மெல்ல மெல்ல மரணம் பக்கமாகும். ஒரு மாற்றத்துக்காக அதை மனமும் விரும்பும். சுற்றங்கள் கலங்கினாலும் சுயம் திடமாய் தெளிவாய் இருக்கும். சம்பவிப்பது சாவெனத் தெரிந்தும் சந்தோஷமே மிகும். 
புதிர்

புள்ளினங்கள்* புள்ளி வைக்கும்
குத்திக் குத்திக் கோடிழுக்கும்
ஓடி ஓடி ஒட்ட வைக்கும்
பறந்தால்தான் படம் தெரியும்
பறக்கையிலே படம் புரியும்

(புள்ளினங்கள் - பறவையினங்கள்)


மரணம் நிகழ்ந்து விட்டது. சரி , அதற்குப் பின்? மரித்துப் பார்த்தால்தானே தெரியும். முடிந்தால் ஒருமுறை மரணித்துவிட்டுச் சொல்கிறேன். இப்போதைக்கு என்னால் விளக்க இயலாது. 

- மதி

Nov 20, 2010

நான் ஒரு வயலின் வாசிக்கும் குருடன்


ஆகப் பெரிய சந்தை இது.
வலை
பின்னும் சந்தை.
வலை
என்றே பெயர்.

இங்கே
சித்தம் மூலம்
நேரம் பணம்
கற்பனை அநேகம்
விற்பனை அமோகம்.

கடலை மாவு முதல் கன்னித்தன்மை வரை
காண்பதெலாம் விற்பனைக்கு.
நானும் ஒரு கடை விரித்தேன்
கவிதைகள் விற்பதற்கு.

உற்றவர்க்கெல்லாம் உரக்கச் சொல்லிவிட்டு
ஓரமாய் உட்கார்ந்திருந்தேன்.
ஒன்றுமே விற்கவில்லை.

என் கடை
சந்தையில் தெரியவில்லையா ?
இல்லை
சரக்கில் சரக்கில்லையா ?

சுற்றிப்பார்த்தேன்.

அத்தனை ஊர்க்காரனும்
மாய்ந்து மாய்ந்து
மணிக்கணக்கில் மேய்கிறான்.
அத்தனை கடைக்காரனும்
தன் கணக்கில் வரவு வைக்கத்
தட்டழிந்து தேய்கிறான்.

இங்கே இலக்கணங்கள் ஏதுமில்லை
வியாபாரத்தில் தளை தட்டாது
கூவக் கூச்சப்பட்டால்
கல்லா களை கட்டாது.

என் தப்பு புரிந்தது.

"எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை"
என்று இருந்ததே வினை.

கூகுளென டுவிட்டரென
ஃபேஸ்புக்கென
கிளைகிளையாய்த் திறந்து வைத்தேன்.

விட்ஜெட்டென லே-அவுட்டென
'ஷேர் திஸ்' என
என் கடையை அலங்கரித்தேன்.

மற்றவர் கடைகளில்
பதிவாய்ப் போணி பண்ணி
"மறக்காமல் என் கடைக்கும் வாங்க" என
பண்டமாற்றுக்கும் பதியம் போட்டேன்.

ஒவ்வொரு முறையும்
புதுசாய்ப் பொருள் இறக்குகையில்
அடிவயிற்றிலிருந்து
கூவிக் கூவிக் கூவினேன்.

இத்தனையும் செய்துவைத்துவிட்டு
வயலின் வாசிக்கும் ஒரு குருடன் போல
வழக்கத்தைத் தொடர்கிறேன்.

தனிமையில் பிரம்மம் தீண்டும்போழ்து
சிந்தித்துச் சிலிர்த்துச் சிலாகித்து,
பரவசத்தில் ஒரு புதுராகம் படைத்துப்
பார்வைக்கு வைக்கிறேன்.

வந்து போகிறவர்கள்
நின்று ரசிக்கின்ற
நிமிடத்துளிகளில்
என் கல்லா நிறைகிறது.

அப்படியே அவர்கள்
கீழுள்ள நாலைந்து
சுட்டிகளையும் கிளிக்கிச்சென்றால்
நாணயங்களின் இசை
கேட்கிறது.

வயலின் வாசிக்கும் ஒரு குருடன் போல
வழக்கத்தைத் தொடர்கிறேன்
.............

-மதி

(அத்தனை இணைய எழுத்தாளர்களுக்கும் சமர்ப்பணம்)

Nov 2, 2010

#5 - பேய்கள் ஜாக்கிரதை


(நான்காண்டுகள் கோவையில் கல்லூரியில் கழித்த பொன்னான நாட்களில் சந்தித்த சுவாரசியங்களைத் தொகுத்து ஒரு சிறுகதைத் தொகுப்பை உருவாக்கலாம் என்று ஒரு சின்ன எண்ணம். இதே போல கல்லூரிச் சாலை # என்று குறியிட்டு இன்னும் பல கதைகள் ஒவ்வொன்றாய் வரும். இந்தப் பதிவு இத்தொடரின் ஐந்தாவது கதை ஆகும். இந்தத் தொடரின் மற்ற கல்லூரிக் கதைகளை வாசிக்க கல்லூரிச் சாலை என்ற சுட்டியைத் தட்டிப் பாருங்கள். 


என் கதைகளுக்கு வித்திட்ட தோழர்கள் தோழிமார் அனைவர்க்கும் நன்றிகள். இதன் மூலம் யாரையும் காயப்படுத்தவோ கலாய்க்கவோ எனக்குத் துளியும் எண்ணமில்லை. அத்தனை கதைகளிலும் அத்தனை பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன. உண்மைகள் கொஞ்சம் என் கற்பனைகள் அதிகம் சேர்த்த கதைகள். நிஜப்பெயர்களை அடையாளம் கண்டுகொண்டால் வாசகர்கள் உங்களுக்குள் புன்னகைத்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்ளவும், யாரும் தயவு செய்து public forum comment இல் பெயர்களை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டாம் என்றும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த முயற்சிக்குக் கிடைக்கும் அரவணைப்புகள் அத்தனை நண்பர்களையும் சாரும். அழுகின முட்டைகளை நான் மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்.

சந்தோஷமாய் என் கல்லூரிக்குள் வாருங்கள்.....)

......................................................................................................


அமாவாசை. வெள்ளிக்கிழமை. இரவு. மண்டை ஓடு.

இந்த நான்கு வார்த்தைகளைக் கொண்டு இது ஒரு பயங்கரமான பேய் கதை என்று நீங்கள் ஊகித்திருந்தால்........ நான் உங்களுக்குத் தமிழ் வாசிக்கத்தெரியும் என்று மட்டும் ஒத்துக்கொள்கிறேன். பத்தில் எட்டு பேய்க்கதைகள் இப்படித்தானே துவங்குகின்றன. நாமும் பழகின வழியிலேயே போவோம். அப்போதுதான் அதிக பயம் இருக்காது. 

உங்களுக்குப் பேய் கதைகள் மேல் நம்பிக்கை இருக்கிறதா ? சும்மாதான் கேட்டேன். தொடர்ந்து படியுங்கள். 

குப்பையோடு குப்பையாக இருளில் அந்த மண்டை ஓடு விகாரமாக வாய் பிளந்து கிடந்தது. கட்டடம் கட்ட அஸ்திவாரம் தோண்டின போது தட்டுப்பட்டதாம். அதன் உடலில் இருந்து பிரித்துக் குப்பையில் வீசிவிட்டிருக்கிறார்கள். சுடுகாட்டின் மேல் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். எங்கள் துறைக்காக அரசுப் பணத்தில் புதுசாய் விரசாய் எழும்பிக் கொண்டிருக்கிறது. 

நேராக அந்த மண்டை ஓட்டின் பார்வை படும் திசையிலேயே கட்டடச் சுவரில் கரியில் எழுதியிருக்கிறது அந்த வாக்கியம். 
பத்தடி தூரத்தில் வாட்ச்மேன் கைலாசம் தாத்தா கடிகாரத்தில் மணி ஒன்றடிக்கவும் கொட்டாவி துரத்திவிட்டுத் தன் நாற்காலியில் அமர்கிறார். இரண்டு கம்பளிகள் கொண்டு இருக்கை சூடாக்கிய உலோக நாற்காலி. தன் 74 வருஷங்களையும் கோவையிலேயே கழித்தவர் கைலாசம். இதே நிலம் சுடுகாடாய் இருந்தபோது இரண்டு மூன்று இழவுகளுக்காக வந்திருக்கிறார், கொலை வழக்குகள் உட்பட. வாலிபத்தில் கத்தி பிடித்த கை, இப்போது ஒரு கம்பைத் தரையில் தட்டிக் கொண்டு கடனே என்று காவலுக்கு உலாத்திக்கொண்டிருக்கிறது. 

சுற்றுப்பட்டுப் பேய்க்கதைகள் அத்தனையும் , சிலபல பேய்களும் கூட அவருக்கு அத்துப்படி. அவரின் பேரன் ஒருவன் எப்போதாவது வரும்போது எங்களிடம் மட்டையும் பந்தும் கடன் வாங்கி தப்புத்தப்பாக விளையாடுவார். அப்படித்தான் பழக்கம். விடுதிக்குப் பக்கத்தில் எழும்பிக் கொண்டிருக்கும் புதுக் கட்டடத்தின் பேய் வரலாற்றை எங்களுக்கு அவர்தான் சொன்னார். இதுவரை ஏழெட்டு மண்டை ஓடுகள் தட்டுப்பட்டிருக்கிறதாம். இதில் ஏதோ தப்பு நடக்குதென்று கிட்டத்தட்ட தினமும் எங்களிடம் சொல்கிறார். 

"கடலைக் காட்டையும், களத்துமேட்டையும் கட்டடமாக்கலாம். புல்லு பூண்டால பெரச்சினை வராது. இப்பிடி சுடுகாட்டில தூர் வாரினா புதைச்சு வெச்சதுக்கெல்லாம் ரோஷம் வந்துருமே. என் கெரகம்..... நானே பாக்கப் பொதைச்சதுக்கெல்லாம் நானே காவல் காக்க வேண்டியிருக்கு. ராவைப் போல அடிக்கடி வெளியே வராதீங்க தம்பீ இந்தப் பக்கம்..."

அவரின் கம்புச் சத்தம் காற்றில் மேலேறி வரும்போது அவரின் புலம்பல் சத்தம்தான் கேட்கிறது. நிலவற்ற நிர்மல இருளின் கீழ் மொட்டை மாடியில் வரிசையாகப் பாய் போட்டுப் படுத்திருக்கிறோம் நாங்கள். நான், ராகேஷ், அர்ஜுன், சித்தார்த், அருள். இன்னும் கொஞ்ச தூரங்களில் ஆங்காங்கே இன்னும் சில பல போர்வைகள். 

நான் மல்லாந்து பார்த்து இருளை வெறித்தவாறே கேட்டேன், " ஏன் மச்சி, இந்தப் பேய் கதை எல்லாம் பாதி சுடுகாட்டிலயும் மீதி சூசைடிலயும் தான் வருதில்லே ? "

இருளே இறங்கி வந்து அசரீரியாய்ப் பேசுவது போல ராகேஷின் குரல் வந்தது, "ஆமாண்டா..நீதான் மச்சி புதுசா ஏதாவது எழுதணும். இங்கேயே பாரு.. முதல் வருஷம் அந்தத் தற்கொலைக் கேசு.. ரெண்டாம் வருஷம் அந்த பாத்ரூம் பேய். அதுவும் சூசைடு. இப்போ கடைசியா சுடுகாட்டுக் கதையும் கேட்டாச்சு இங்கே." 

"இது போருடா ராகேஷ். அந்த ரெண்டு கதைலயாவது பேய்க்கு ஒரு முகம் இருந்துச்சு. சுடுகாடுன்னு சும்மா சொன்னா ஒரு பயமே வரல. கிழடுகட்டைங்களதான் மூடியிருப்பாங்க. பாப்போம். நீ எழுதி வெச்சதுக்கு ஏதாவது யூத்தா ஒரு பேய் பதில் சொல்லுதான்னு", சித்தார்த்தும் கலந்து கொண்டான். 

எழுத்துப் பிழையோடு அந்தக் கட்டடத்திலிருந்த கரி வாக்கியம் ராகேஷ் எழுதினதுதான். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் அவனும் நரேனும் நாலைந்து பேரிடம் பந்தயம் கட்டி, சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு, கைலாசம் தாத்தா வைகை ஹாஸ்டல் பக்கம் போன நேரத்தில் மறைந்து சென்று அந்த மண்டை ஓட்டுப்பேய்களுக்கு எழுதி வைத்து வந்த தகவல். பேயெல்லாம் புளுகு என்றும் தனக்குப் பயம் இல்லை என்றும் நிரூபிக்க நடந்த பந்தயம். 

தொடர்ந்து பேச்சும் அரட்டையும் பேய்களையே புரட்டி வந்தது. பேச்சு கொஞ்சம் சூடு பிடிக்கும் நேரத்தில் சடாரென்று அருள் கூவினான, "டேய்.. அங்க பாரு.. எரியுது"

தூரத்தில் மருதமலை உச்சியில் கொழுந்து விட்டு எரியும் ஜுவாலை தெரிந்தது. முருகன் படிக்கட்டுகள் பாதி மலையிலேயே முடிந்துவிடும். அதற்கும் மேலே யாரும் அறியாத மலை உச்சிக்காடுகளில் பல இரவுகள் இபடிப் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறோம் எங்கள் மொட்டை மாடியிலிருந்து. சிலர் காட்டுத்தீ என்கிறார்கள். அங்கே ஆதிவாசிகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கைலாசம் மாதிரி ஆட்கள் மூலம் சில பேய் விளக்கங்களும் உண்டு. இந்தப் பேச்சின் தொடர்ச்சியோடு, பற்றி எரியும் நெருப்பைப் பார்க்கையில், அந்த மண்டை ஓட்டுப் பேய்களுக்கு ரோஷம் வந்துதான் விட்டதோ என்றொரு சிறு பிரமை ஏற்பட்டது. 

நான் ராகேஷிடம் கேட்டேன், "மச்சி இது ஒரு வேளை நீ எழுதினதுக்குப் பேய் சொல்ற பதிலோ? அந்த நெருப்பிலே ஒரு மண்டை ஓடு ஷேப் தெரியல உனக்கு?"

அப்போதுதான் சட்டென்று அவனும் கவனித்தான். எரியும் ஜுவாலையில் ஒரு மண்டை ஓட்டு உருவ இருள் அப்பட்டமாகத் தெரிந்தது. "டேய் சிவா.. நெஜமா மச்சி. அங்க பாரேன் தெரியுது. ஆனா ஏண்டா இங்க எழுதினா அங்க எரியுது ?"

அவன் பதிலைக் கிழித்தபடிக்கு ஒரு மின்னல் சடாரென்று அருகில் பாய்ந்தது. அருள் மறுபடியும் கூவினான், "டேய் ராகேஷ்.. இதோ வந்திருச்சு பாரு பக்கத்துலயே பதில்"

"ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உன்னை கவனிச்சிட்டிருக்கு மச்சி.. உன்னைப் பேய் பொறாண்டப் போகுது பாரு" நான் இன்னும் கொஞ்சம் ஆழம் கூட்டி அமைதியாகச் சொன்னேன். ஒரு சின்ன நெருக்கடியான அமைதி தொடர்ந்தது. 

அர்ஜுன் தான் கலைத்தான். "டேய் சும்மா உளறாதீங்கடா. தூங்குங்கடா மூதேவிங்களா" என்று எரிச்சலாகப் பேசி விட்டுப் போர்வைக்குள் போய்விட்டான். ஆனால் அவன் இப்போதைக்குத் தூங்கமாட்டான். இப்படி நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கையில் நான் மட்டும் தூங்கப் போகிறேன் என்று நடுவில் போர்வைக்குள் போனவன் எவனும் என்றும் தூங்கிப் போனதாகச் சரித்திரமே இல்லையே. 

மீண்டும் இரண்டு மின்னல்கள் நெருங்கித் தெறித்தன. குளிரும் இருளும் போட்டியிட்டுக் கூடின. எந்த நட்சத்திரமும் கண்ணில் படவில்லை. அவ்வப்போது காற்று வந்து வேகமாக அறைந்து போனது. 

"சித்தார்த்து.... இது ஜென்மம் X, மர்ம தேசத்துல வர்ற மாதிரியே இருக்குல்லடா?"

அவன் பேசவில்லை. எவனுமே பதில் பேசவில்லை. நிசப்தம் இருளில் பெருகித்தெரிந்தது. 

"மச்சி மச்சி எனக்கொண்ணு தோணுதுடா" - மூன்றாம் முறையாக அருள் கூவினான். இம்முறை அவன் அமைதியைக் கலைத்த விதம் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. திகிலோடே தொடர்ந்தான், "எங்க ஊருல இதே மாதிரி மொட்டை மாடியில தூங்கும்போது விடியுற நேரத்துல வெள்ளை உருவமா ஆவி கண்ணுக்குத் தெரியும்னு சொல்லுவாங்கடா. அப்போ படக்குன்னு கையைக் காலை அசைக்க முடியாம இறுகிக்குமாம். ரொம்பக் குளிருமாம். எங்க பாட்டி கூட சொல்லுவாங்க..."

"வெள்ளை ஆவி.... விடியற நேரம்.... நான் கூடக் கேள்விப்பட்டிருக்கேன்டா. எங்க ஊருல இசக்கிப்பேய்னு ஒண்ணு தினமும் காலைல வெள்ளந்திப் பசங்களையெல்லாம் மொட்டை மாடில வந்து எழுப்புமாம்"

நான் மிக அமைதியாகக் கேட்டேன். "ஏன் அர்ஜுனு , நீ எதும் பேயைப் பாத்திருக்கியாடா மொட்டை மாடில?"

அவன் ஈனஸ்வரத்தில் முனகினவாறே போர்வையை விலக்கிச் சொன்னான், "டேய் தூங்க விடுங்கடா...வேற பேச்சே கெடக்கலையா உங்களுக்கு, பயமா இருக்குடா".... நான் சொல்லலை, போர்வைக்குள் போகிறவனெல்லாம் தூங்கிப் போவதாகச் சரித்திரமே கிடையாது!

இவனுக்கு மட்டும் ஒரு சரித்திரம் உண்டு. அர்ஜுன்.. இவன் ஆரோக்கியா பால் அர்ஜுன் இல்லை. ஒரு அப்பாவி பயந்தாங்கொள்ளி அர்ஜுன். இரண்டு பேய்களைப் பார்த்ததாக உறுதியாக நம்புகிறவன். அதில் ஒன்று நாங்கள் நடத்தின நாடகம் என்று இன்னும் தெரியாது அவனுக்கு. இன்னொன்று யார் நடத்தின நாடகம் என்று எங்களுக்கும் கூட தெரியாது. நிஜத்தில் பேய் கண்டால் இவனெல்லாம் பயந்து செத்தே பேயாவது உறுதி. அவ்வளவு தைரியம்! என்னதான் கும்மிருட்டில் கதவடைத்து, விளக்கணைத்து, சரவுண்ட் சவுண்டில் பேய் படங்கள் பார்த்தாலும், சில படங்கள் கிச்சுகிச்சு மட்டும்தான் மூட்டும், அப்பேற்பட்ட சம்பவங்களைக் கூட சுவாரசியமாக்குவதற்கு ஒரு பயந்தாங்கொள்ளி நண்பன் கூட்டத்தில் தேவை. அப்படித்தான் எங்களுக்கு அர்ஜுன். சுருக்கமாகச் சொன்னால், சந்திரமுகி பார்த்ததற்கே இரண்டு இரவுகள் தனியாக ஒண்ணுக்கு போகப் பயந்த வீரன் ! ராகேஷின் அறைத்தோழன்.

அர்ஜுனின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு நாங்களும் பேயுரையாடல்களை முடித்துக் கொண்டு போர்வைக்குள் போனோம். மணி இரண்டரை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மூச்சு விடுவது கேட்குமளவு நிசப்தம் மூழ்கியது, இடையில் சில நாய் ஊளைகள். பேய் நடமாட்டம் நாய் கண்ணுக்குத் தெரியுமாமே !

நீண்ட நிசப்தத்துக்குப் பிறகு, தூரத்தில் ஒரு கட்டைக் குரல் கேட்டது. படக்கென்று அர்ஜுன் விழித்தெழுந்தான். புதுக்கட்டடத்தின் திசையிலிருந்து அவனுக்குக் குரல் கேட்கிறது. "நரேன், நரேன் ..... ராகேஷ்.. ராகேஷ்.... இது உங்களுடைய இடம் இல்லை. எங்களுடைய இடம்.. நரேன்..  ராகேஷ்.." தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. மிகத் துல்லியமாக வந்தது குரல். இதே விஷயத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சொன்னது. அர்ஜுன் வியர்த்துப் போனான். சுற்றிப் பார்க்கிறான். மற்ற அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுன் சித்தார்த்தை உலுக்கி உலுக்கி எழுப்புகிறான், "மச்சி, உனக்குக் கேக்குதா?"

உறக்கம் கலைந்த உளைச்சலில் சித்தார்த்துக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ஜுன் மீண்டும் படபடத்தான், "டேய் நல்லாக் கேளுடா, உனக்கு எதுவுமே கேக்கலையா?"

சித்தார்த் முயற்சி செய்து கூர்ந்து கவனித்தான்.

"... ராகேஷ்... இது உங்களுடைய இடம் இல்லை... எங்களுடைய இடம்.... நரேன்.."

"எதுவும் கேக்கலையேடா , என்னடா உளர்றே , லுச்சா லூசு, போய்த் தூங்குடா"

"கேக்கலையா .. " அர்ஜுன் லேசாக நடுங்கத் தொடங்கினான். அவன் காதில் இன்னும் ஒலிக்கிறது அந்தக் குரல். "உன்னைப் போய் கேட்டேன் பாரு.. செவிட்டு மூதேவி. தூங்குடா.. நான் பாத்துக்கிறேன்"

சித்தார்த் போர்வைக்குள் மறைந்து கொண்டான். அர்ஜுன் முழுத்தூக்கமும் கலைந்து பயந்து உறைந்தான். ராகேஷை எழுப்பலாமா? ஒரு வேளை அவனைப் பார்த்ததும் பேய் ஏதாவது பண்ணிவிட்டால்? நரேன்..... நரேன் கீழே அவன் அறையில் உறங்குகிறான். அவனுக்கு எதுவும் ஆகிவிட்டதா?

அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு எழுந்து அந்தக் குரல் வரும் திசையில் நடக்கத் தொடங்கினான். எதையோ முணுமுணுத்துக் கொண்டே போனான். நடக்க நடக்க குரல் இன்னும் தெளிவாகக் கேட்டது. அத்தனையும் ஒரு நிமிட நேரத்துக்குள் நடந்து கொண்டிருக்கிறது, வழியில் ஏதோ ஒரு போர்வையில் அவன் கால் படவும், போர்வைக்குள் இருந்தவன் வன்மையாகப் புரண்டு உருண்டு படுத்தான். அந்தக் குரல் சட்டென நின்றுவிட்டது.

அர்ஜுன் உறைந்து நின்றுவிட்டான். உருண்டு போனவனோ மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறான். முகம் தெரியவில்லை. குரல் கேட்கவில்லை. குனிந்து பார்க்க பயம். திரும்பி நடக்க பயம். நேராக நடக்கவும் பயம். இருளில் ஒரு பேயை எதிர்த்து நிர்க்கதியாய் நிற்கிறான். அப்படியே ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

"நரேன், நரேன்... ராகேஷ்... ராகேஷ்... இது உங்களுடைய இடம் இல்லை...."

மீண்டும் அதே குரல். அப்போது உருண்டவன் இன்னும் அப்படியே உயிரற்றுக் கிடக்கிறான். ஒரு நொடியில் அத்தனை அட்ரினலினும் பீய்ச்சிப் பாய, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கீழே ஓடுகிறான் அர்ஜுன். நேராக அவன் அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டு, விளக்கையெல்லாம் போட்டு, சிரமப்பட்டு மூச்சு விடுகிறான். அலமாரியைத் திறந்து வியாயகர் அருகிலிருந்து விபூதியை வாரிப் பூசுகிறான். ஏதோ தப்பு நடந்திருக்கிறது. கைலாசத்தின் குரல் இப்போது காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அமானுஷ்யக் குரலை நினைத்தாலே பயத்தில் மூத்திரம் வருகிறது. ஆனால் தனியாகப் போகவும் முடியாத பயம். மர்ம அவஸ்தை !

அந்த அமானுஷ்யம் நரேனையும் ராகேஷையும் தேடிக் கொண்டிருக்கிறதா ? என்ன ஆனான் அந்தப் போர்வைக்குள் இருந்தவன்? ஒன்றுமே தெரியாமல் மேலே ராகேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறானே?

இரண்டு மூன்று பூச்சுகள் விபூதி அப்பிக் கொண்டு ஒரே ஓட்டமாக மீண்டும் மொட்டை மாடிக்கு வந்தான் அர்ஜுன். இடது பக்கம். அந்தப் போர்வைக்குள்ளிருந்தவன் அப்படியே கிடக்கிறான், அசைவே இல்லை. வலது பக்கம் திரும்பினால், பெரிய அதிர்ச்சி... வெறும் போர்வைகள்தான் இருக்கின்றன. எங்கள் நால்வரையும் காணவில்லை. நாய் ஒன்று ஏப்பம் விடுவது போல தூரத்தில் ஊளை இடுகிறது.

கையெல்லாம் நடுங்க நடுங்க, தன் செல்லை எடுத்து என்னை அழுத்துகிறான் அர்ஜுன். முதல் முறை மணியிலேயே பட்டென்று நான், "டேய் எங்கடா போனே? உடனே நரேன் ரூமுக்கு வா" என்று பதட்டமாகப் பேசி அணைத்துவிட்டேன். அர்ஜுன் தன் பயம் ஊர்ஜிதமான அதிர்ச்சியில் அரக்க பரக்க ஓடி வந்தான்.

நரேன் அறை வாசலில் அவன் கண்ட காட்சி........

நானும் அருளும் நரேனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வருகிறோம். கூடவே பதட்டமாகவும் குழப்பமாகவும் மற்றவர்கள். நரேனுடன் அறையிலிருக்கும் ரத்னகுருவுக்கே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். உள்ளே கொண்டு சென்று கட்டிலில் கிடத்தினால், நரேன் ஏதோ எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி எதையோ வெறித்து விழித்துக்கொண்டிருக்கிறான்.

அர்ஜுன் பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்டான், "டேய் என்னடா ஆச்சு.... இவனுக்கு என்ன ஆச்சு? எங்க இருந்தான்?"

ரத்னகுரு சொன்னான், "அர்ஜுன், ஒரு பத்து நிமிஷம் முன்னாடி நான் எந்திரிச்சு பாத்ரூம் போகப் போனேன். எழுந்தப்பவே இவனை ரூமில காணோம். போய்ப் பாத்தா பாத்ரூமுக்குள்ள இவன் படுத்திட்டிருக்கான்டா தே மாதிரியே எதையோ வெறிச்சு மொறைச்சுகிட்டே, தலைக்குக் கையை அண்டக் குடுத்து ஸ்ரீரங்கநாதர் மாதிரி போஸ் குடுத்திட்டிருக்கான். புடிச்சு எழுப்பி விசாரிச்சா, எதுவுமே ஞாபகம் இல்லைங்கிறான். நாலு வருஷத்தில இவன் இந்த மாதிரியெல்லாம் தூக்கத்தில நடந்ததேயில்லைடா"

"நடந்தது இவன் இல்லை குரு.. இங்கே என்னென்னமோ நடக்குது. எனக்கு இப்போ கொஞ்ச கொஞ்சமாப் புரியுது. ராகேஷ்.. ராகேஷ் எங்கே? அவனை உடனே காப்பாத்தணும்? நீங்க எப்போடா கீழே வந்தீங்க?"

சித்தார்த் சொன்னான், "குருதான் மச்சி செல்லில கூப்பிட்டான். உடனே ஓடி வந்தோம். என்னடா புரியுது உனக்கு?"

"நான் உன்னை எழுப்புனேனே ஞாபகமிருக்கா? எனக்குக் கேட்டுச்சுடா.... அந்தக் குரல் கேட்டுச்சு எனக்கு. இவனையும் ராகேஷையும் தேடிட்டிருக்கு அது இப்போ" . எல்லாரும் உறைந்து போய் ராகேஷைப் பார்க்கிறார்கள். அவன் பயந்து போய் நரேனைப் பார்க்கிறான்.

ண்ணீர் தெளித்து, சகஜமாக்கி, மூச்சு விட நிறைய காற்று விட்டு நரேனிடம் துருவித்துருவி விசாரித்தோம். அவனுக்கு ஒன்றுமே ஞாபகமில்லை. நொடிக்கு  நொடி திகில் கூடிக் கொண்டே போனது. விளக்கை எல்லாம் எரியவிட்டு ராகேஷையும் நரேனையும் சுற்றி எல்லாரும் அமர்ந்து கொண்டோம்.

அர்ஜுனுக்கு மட்டும் குரல் கேட்டிருக்கிறது. அதுவும் துல்லியமாக கணீரென்று கேட்டிருக்கிறது. அதுதான் அவனை இன்னும் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறது. மற்றவர்களை விட அவன் ரொம்பப் பயந்து போயிருந்தான். பேயை எவனும் பார்க்கவில்லை. அது பிறாண்டிவிட்டுச் சென்றவனுக்கும் ஞாபகமில்லை. அர்ஜுன் மட்டும்தான் கேட்டிருக்கிறான். அவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்தான். ஏன் தனக்கு மட்டும் கேட்க வேண்டும் என்று பயந்து குழம்பினான். நேரம் மெல்ல மெல்ல இருளை விழுங்கி வீங்கிக் கொண்டே போனது.

4 : 30 . எல்லாரும் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று அவன் மௌனம் குலைத்துப் பயந்தவாறே முனகினான் , "டேய் , ஒரே வழிதான் இருக்கு. எல்லாம் வாங்க, கைலாசம் வாசல்லதான் இருப்பாரு. அவரைப் பாப்போம். அந்தக் குரலும் இப்ப அமைதியாயிடுச்சு." சொல்லிவிட்டுக் கதவைத் திறந்து முன்னே நடக்கவும் தொடங்கிவிட்டான்.

அறைக்குள்ளே அரை நிமிஷம் எல்லாரும் மாறி மாறி பார்த்துக்கொண்டோம். பின்பு ஒரு வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்டது. வெளியே நடந்த அர்ஜுன் குழம்பி ஓடி வருகிறான். ராகேஷ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து பைத்தியம் பிடித்தது போல சிரிக்கிறான், "டேய்... சொல்லிருங்கடா.. யப்பா முடியலைடா .. நாலு மணி நேரம் ஆச்சு"

அர்ஜுனுக்குக் குழப்பத்தில் கண்ணீர் வந்துவிட்டது. நானும் சிரித்துக் கலங்கின கண்களுடன் அவனுக்கு முன்கதை விளக்கம் சொன்னேன். ஒரு குரலை நாங்களே செல்லில் பதிவு செய்து வைத்து, அலாரம் டோனாக வைத்து, செல்லை தூரமாக வைத்துவிட்டு, வேண்டுமென்றே மொட்டை மாடியில் ஒன்றரை மணி நேரம் பேய்க் கதையாகப் பேசிப் பேசி, கீழே நரேனின் அறையையும் ஒருங்கிணைத்து ஒரு உச்சகட்ட திகில் நாடகத்தை ஒரே ஒருவனுக்காக அரங்கேற்றியிருக்கிறோம். மருதமலைத் தீயும் அந்தப் போர்வைக்குள் பிணமாய்த் தூங்கினவனும் முருகனாய்ப் பார்த்துக் கூட்டிச் சேர்த்த திருவிளையாடல்கள்.

சிரிப்பினூடே சிரமப்பட்டு அர்ஜுனுக்குப் புரியவைத்தேன். ஏமாற்றமும் பயமும் கோபமும் கொப்பளிக்க அவன் எங்களைக் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு ஓடிவிட்டான். பரவாயில்லை. அவமானத்தில் அழுதமாதிரி கூட இருந்தது. பின்னால் உதவும். நரேன் நடித்து முடித்த பரவசத்தில் ஆச்சரியமாகக் கேட்டான், "செம கெத்து மச்சி... இந்த நாளை அவன் மறக்கவே மாட்டான்....." அந்த அலாரம் வைத்த செல்லை எடுத்துத் தடவியவாறே "செம சத்தம்டா இது.. அவனுக்கு மொட்டை மாடியில கேட்ட அலாரம் டோன் எனக்கு கிரவுண்ட் ஃப்ளோர் பாத்ரூம் வரைக்கும் கேட்டிருக்கே"

"என்னது மொட்டை மாடில வெச்ச அலாரம் உனக்கு மூணு மாடி தாண்டி கீழே கேட்டுதா... காமெடி பண்ணாதேடா டேய்" நாங்கள் அனைவரும் சிரித்த திருப்தியில் அப்படி அப்படியே பிய்த்துக்கொண்டோம்.

நரேன் மட்டும் குழப்பமாக குருவிடம் சொல்வது கேட்டது, "டேய் குரு. உனக்குக் கேட்டிச்சா டா? நான் நெஜமாவே கேட்டேனே.. குழப்பமா இருக்கே.. ஒருவேளை................."

-------------------------------------------------------------------------

திங்கட்கிழமை மதியம். நரேன் எங்களெல்லாரையும் அழைத்து வைத்து அமைதியாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரு படபடப்பு குவிந்திருக்கிறது. கொஞ்சம் நடுக்கத்துடன் தன் செல்லில் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான்.காட்டிவிட்டு எங்களனைவரையும் மேலும் கீழும் பார்த்தான். பின்பு வேகமாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு அந்தக் கட்டடச் சுவர் பக்கம் ஓடினான், "என்ன எழுதியிருக்கு , வாசி...."


"என்னடா நரேன் . அதேதானே இது?"

"டேய் சிவா.. நல்லாப் பாருடா. நாங்க எழுதுன தமிழில எழுத்துப்பிழை இருக்கு. இப்போ அதை யாரோ திருத்தியிருக்காங்க. நீங்க யாராவது செஞ்சீங்களா இதை?"

ஒருவரை ஒருவர் பார்த்து மறுத்து மண்டையாட்டினோம். நரேன் தொடர்ந்தான், "அந்த 'டை'யை யாரோ திருத்தியிருக்காங்க. நம்ம தலைமுறைல 'டை' எழுதணும்னா துணைக்கால்தான் போடுவோம். இப்படிக் கொம்பு போடுற பழக்கம் ரொம்பப் பழசு.......... கிட்டத்தட்ட இங்கே புதைச்சு வெச்ச பொணமெல்லாம் உயிரொட இருந்த காலம்"

"டேய் என்னடா உளர்றே... என்ன சொல்ல வர்றே?"

"இல்லடா..... யோசிச்சுப் பாரு. நம்ம அலாரம்ல வெச்ச குரல் எனக்கும் கேட்டிச்சு. எனக்கென்னமோ............."

அவன் பேச்சை முடிப்பதற்குள் அர்ஜுன் அங்கிருந்து பிய்த்துக்கொண்டு ஓடினான். நாங்கள் அதிசயித்து உறைந்து நின்றோம். ஐந்து நிமிடம் கழித்து நரேன் செல்லில் அழைத்தான். "டேய் கன்ஃபார்ம்டா..கைலாசம் ரெண்டு நாளா வேலைக்கு வரலே, வெள்ளிக்கிழமை ராத்திரிதான் மத்த எல்லா வாட்ச்மேனும் அவரைக் கடைசியா பாத்திருக்காங்க. சனிக்கிழமை காலைல கூட அவரை யாரும் பாக்கலை. அன்னிக்கு ராத்திரி இங்கே ஏதோ தப்பு நடந்திருக்கு"

-------------------------------------------------------------------------

திங்கட்கிழமை. அதே நேரம்.

கைலாசம் தாத்தா வீட்டு வாசலில் கவலை தோய்ந்த முகங்கள். ஓரமாய் உட்கார்ந்தொருவன் பாடை கட்டிக் கொண்டிருக்கிறான். இழவு விழுந்த வீடு துக்கத்தைக் காற்றில் தெளித்துக் கொண்டிருக்கிறது. கைலாசம் தாத்தாவின் பேரன் ஒரு தபால் காகிதக் கட்டிலிருந்து ஒன்றை உருவி, தலைப்பு எழுதுகிறான்.


பட்டென்று அவன் தலையில் தட்டி, கைலாசம் தாத்தா அவனிடமிருந்து வாங்கித் தானே அதைத் திருத்திவிட்டுத் தொடர்ந்து எழுதுகிறார்.

'நேற்று அதிகாலை எனது அண்ணன் புஷ்பவனம் மாரடைப்பால்......'

"என்னத்த இங்கிலீஷு மீடியத்துலே படிக்கிறீங்களோ. இந்தக் காலத்து இளசுகளுக்கு ஒரு வாக்கியம் எழுதத் தெரியலையே நல்ல தமிழில..."

-------------------------------------------------------------------------

உங்களுக்குப் பேய் கதைகளில் நம்பிக்கை உண்டா?

சும்மாதான் கேட்கிறேன்.

நரேனுக்கும் கேட்டிருக்கிறதே !

- மதி


Oct 18, 2010

சுழியம் - என் பாராட்டுகளும் கருத்து விமரிசனமும்

என் கல்லூரி GCTயில் இவ்வாண்டு என் இளைய நண்பர்கள் இதழாக்கி வெளியிட்டிருக்கும் பருவ இதழ் - சுழியம். மூன்று ஆண்டுகளுக்கு முன் விளையாட்டாய் கல்லூரித் தமிழ் மன்றத்தில் தூவப்பட்ட யோசனை இது. இப்போது நடந்தேறியிருப்பதில் பெருமை அடைகிறேன். தபாலில் ஒன்றுக்கு ரெண்டாக வந்து சேர்ந்த இந்த இதழ் குறித்த என் கண்ணோட்டம் இங்கே.

சுழியம் என்ற பெயர்க்காரணம் : கணிதத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு சுழியம் , அல்லது பூஜியம், அல்லது கொஞ்சம் கலீஜாக முட்டை! கணிதப் பேரணியிலேயே அதிக அர்த்தங்கள் பேசக்கூடிய அற்புதமான எண் இந்த சுழியம். ஒரு நீண்ட பயணத்தின் தொடக்கமாய் வரும் இந்த இதழ் பக்கங்களைத் தாண்டிப் பலவும் பேச விழைந்த ஆவலில் சுழியம் என்று பெயர் தாங்கி வருகிறது. நல்ல பெயர். வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு: பின் வரும் இதழ்களும் சுழியம் என்ற பெயரிலேதான் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்புறம் இதை படித்து விட்டு யாரும் அடுத்த இதழுக்கு ஏன் 'ஒண்ணு' என்று பெயர் வைக்கவில்லை என்று கேள்வி கேட்க வேண்டாம் !

முதல்வர், ஆலோசகர், முன்னாள் செயலாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் எழுதியதெல்லாம் இருக்கிறது. என்னை ஈர்த்தவை மானவர் படைப்புகள் தான். அவை பற்றியே இங்கே அதிகம் பேசுகிறேன். பாராடுகளோடும் விமரிசனங்களோடும்.

கவிதைகள் :-
சூப்பரப்பு: 'தேய்ந்து போன ரேகை' என்ற தலைப்பில் கீர்த்தனா, சுபாஷினி, ரேவதி என்ற மூவரின் கவிதைகள். நல்ல தலைப்பு. கீர்த்தனா உழவனின் வியர்வை அருவியை அழகாக உவமையாக்கியிருக்கிறாள். வெடித்த நிலத்தில் விழும் அந்த முதல் மழைத் துளியின் கவித்துவம் உழுபவனின் வலியோடு சேர்ந்து வெளிவந்திருக்கிறது. உயர்ந்த வர்க்கம் உயரும் வர்க்கத்தின் துயரம் துடைத்தே ரேகைகள் தேய்க்க வேண்டும் என்ற சுபாஷினியின் ஆசை அதிகம் உவமிக்காமல், உண்மைகளைக் கொண்டு இரு உலகங்களைக் காட்டுகிறது. கருத்த இவெளிப்படுத்தியதில் நல்ல தெளிவு. ரேவதியின் தமிழ் நடை வித்தியாசம். உழைப்பவன் காணும் பிள்ளைக் கனா பற்றின கவிதை. வாழ்த்துகள்.

'குருடனுக்குள் பௌர்ணமி'- வீரமணியின் கவிதை. பார்வை வரும்போது காணத் துடிக்கும் உலகைக் காகிதத்தில் வடித்து, இப்படியொரு உலகத்தில் பார்வை உண்டென்றால் தா, இல்லாவிடில் நீயே வைத்துக்கொள் உன் பார்வையை என்று இறைவனிடம் முறையிடும் விழிப்புணர்வுக் குருடன். நல்ல கருத்து. நல்ல வார்த்தைப் பிரயோகம். நல்லா வருவீங்க தம்பி. தொடர்ந்து வேற வேற சுவைகளில் எழுதிப் பாருங்க.

'கந்தையில்தான் ஓட்டை சிந்தையில் இல்லை' - தலைப்பிற்கு ஒரு தனிப் பாராட்டு. சட்டென்று கவனம் ஈர்த்தது. வார்த்தைப் பிரயோகமும் சந்தமும் நன்று.

'(ஏ)மாற்றம்' - இரகுபதியின் கவிதை படிப்பதற்கு முன்னமேயே எதிர்பார்ப்புகளைக் கிளப்பியது. ஏமாற்றவில்லை. கொஞ்சூண்டு மழை கேட்டவனை, வறண்டோ வாரிக்கொட்டியோ வாட்டியெடுக்கும் வாழ்வின் முரண்பாடுகளை மிகத் தத்ரூபமாக விவரித்திருக்கிறார். சொல்லாட்சியும், கருத்துத் தெளிவும் நன்று.

கொஞ்சம் இதையும் பாத்துக்கோங்க: ரேவதியின் முயற்சி புரிந்தாலும் , தனி வழி அமைத்து நடக்க முயலும் நடை, தெளிவில்லாமல் சில சமயம் தடுக்குகிறது. ஒரு தொடர்ச்சியும், உச்சரிப்பின் சத்த சேர்க்கைகளும் கொஞ்சம் தட்டி நெளித்து நிமிர்த்தினால், இந்தப் பெண் இன்னும் நல்ல கவிதைகளைப் படைக்க முடியும். இராம்குமார் கொஞ்சம் நிறைய வெவ்வேறு தலைப்புகளையும் எழுத்தாளர்களையும் வாசித்தால், நல்ல வித்தியாசமான கருத்துகள் ஊற்றெடுக்கும். இருக்கும் சொல் திறனை கருத்தில் புதுசாய் வைத்துப் படைத்தால் இன்னும் ருசிக்கும்.
பொதுவாக எல்லாருக்கும்  சொல்ல ஒரு விஷயம் இருக்கிறது. அது கடைசியில்.


குட்டிக்கதை:- பலியாடு:
சூப்பரப்பு: ரூபிணி, கீதா, ராஜபிருந்தா - மூவரின் படைப்புகள். சிசுக்கொலை, முதியோர் இல்லம், குழந்தைத் தொழிலாளி - மூன்று பொருத்தமான களங்கள். ராஜபிருந்தாவின் கதை ஒரு ஹைக்கூ போல 'நச்'. ரூபிணீயின் கருவறை உருவகம் நன்று. கீதாவின் கதை கொஞ்சம் பழகின சுவை என்றாலும் தெளிவான நடை. நல்ல முயற்சிகள்.

பாரதியின் ஒருவரிக் கதை - இந்த இதழில் என்னை மிகவும் கவர்ந்த படைப்புகளில் ஒன்று. நல்ல முயற்சி. நல்ல வித்தியாசமான யோசனை. விஷயம் பழகினதென்றாலும் படைப்பில் புதுசாக்கி ஈர்த்த கதை. இவ்வளவு நீளமான வரி எழுதும் கஷ்டம் எனக்கு நன்றாகப் புரியும். இந்த முயற்சி, எனக்குத் தெரிந்த சில மொழிகளில் தமிழில் மட்டும் தான் சாத்தியம். அந்த வகையில் இந்தக் கதை ஒரு தமிழ்த் தனித்தன்மை வெளிப்பாடாகவும் அமைந்து விட்டது.

இதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க: கதைகளில் உயிரோட்டத்தை முடிவு செய்வது நடை தான். யார் சொல்வதாகக் கதை வரும், எப்படி ஆரம்பிப்பது, முடிப்பது, ஒரு திருப்பம், கொஞ்சம் நகைச்சுவை, புது கோணங்கள், உரையாடல்கள் - இவையெல்லாம் ரொம்ப முக்கியம். வாக்கியங்களைத் தாண்டி வாசர்களோடு பேசும் கதைகள் இவற்றில் சிலவாவது பெற்றிருக்கும். கதை எழுதுவதைத் தொடரும் உத்தேசம் இருக்குமானால், நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு புதுக் கண்ணோட்டத்தில் முயலுங்கள். உங்களுக்கான் தனித்தன்மை உங்களுக்கே தெரிய வரும். முயல் குட்டிகளாய் வாசித்துக் கருத்து சொல்ல ஒரு கூட்டத்தையும் தயார் செய்ய வேண்டியிருக்கும். ஆரம்பத்திலேயே அற்புதமாய்க் கதை எழுத எந்தக் கொம்பனாலும் முடியாது. முயற்சிப்பவனுக்குக் கொம்பு முளைக்கும் !

கட்டுரைகள்:-
சூப்பரப்பு:
ரகுநாத் - காகிதக் கனவுகள் - சமீபத்தில் நான் வாசித்தவைகளிலேயே மிகச் சிறந்த ஆரம்பம் இந்தக் கட்டுரைக்கிருந்தது. "என்றோ எங்கோ நீ உனக்குள் தொலைத்த பெண்மைதான் உன் மனைவி. என்றோ எங்கோ நீ உனக்குள் தொலைத்த ஆண்மைதான் உன் கணவன்" - யோசித்து ரசிக்க வைத்த வரிகள். இதழ் முழுமைக்கும் எடுத்துக்கொண்ட விஷயத்தில் வித்தியாசப்பட்டு நின்றது இந்தக் கட்டுரைதான்.

சுபாஷினி - நிழல் காண் மண்டிலம் - நான் ரொம்பவும் ரசித்த கட்டுரை. நல்ல தேர்ந்தெடுத்த வரிகள். நல்ல சிந்தனை. அதிலும் கண்ணாடியைப் பற்றி ஒரு பெண்ணின் பார்வை ரொம்பப் பொருத்தமாக இருந்தது. சங்கப் பாடல்களைத் தெளிந்த பொருளோடு கொடுத்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும்.

இதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க: ரகு எடுத்துக் கொண்ட விஷயத்திலிருந்த கூர்மை எழுத்தில் லேசாக மழுங்கிவிட்டிருக்கிறது. உரைநடையில் ஒரு தொடர்ச்சி ரொம்ப முக்கியம். செல்வராகவன் 'ஆயிரத்தில் ஒருவன்' எடுத்த மாதிரி ஆகிவிட்டது கட்டுரை. ஆனால், புதுசாக யோசிக்கும் எவனும் எழுதும் வித்தை எளிதாய்க் கற்றுக்கொள்ளலாம். அதுவே உன் பலம்!

மற்றவை:-
சூப்பரப்பு:-
எண் விளையாட்டி புதுசு. பெயர் பொருத்தமாக இருந்தது. குறுக்கெழுத்து இன்னும் முயற்சிக்கவில்லை. சீக்கிரம் சொல்கிறேன். முகம்மது சாகிப் , உனக்கு ஒரு பெரிய நன்றி தம்பி. இந்தப் பட்டியலை நான் பல நாளாய்த் தேடிக் கொண்டிருந்தேன். அப்படியே இதில் புரியாத பல கலைகளுக்கும் விளக்கம் குடுத்தால் உனக்கு ஒரு தனி விருந்து கண்டிப்பாகத் தருவேன். கடைசிப் பக்கத்து ஓவியங்கள் எல்லாம் அருமை. தமிழ் பருவ இதழில் கேப்டன் ஜேக் குருவியை வரைந்து விட்டு நம் சொந்தக் கேப்டன் விஜயகாந்த்தை வரையாதமைக்குச் சில அரசியல் கண்டனங்கள் வரலாம். அது கிடக்கட்டும். அட்டகாசமாய் வரைந்திருக்கிறீர்கள் அனிதா, சரண்யா, கற்பகவள்ளி. கொஞ்சம் கறுனை செய்து நான் சங்கமத்திற்கு வரும்போது என்ன வரைந்து கொடுத்தால் display picture போட்டு சந்தோஷப்பட்டுக்கொள்வேன். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம், வரைந்த அனைவரும் பெண்கள். என்று தணியுமோ இந்த கோழிக்கிறுக்கல் சாபம் ஆண் வர்க்கத்திற்கு ?!!! GCT மொக்கை போடுவதில் உலகளாவிய பெருமை பெற்றது என்பதை இடைச்செருகல்கள் உணர்த்தின. அந்த இட்லி மொக்கை ரொம்ப ருசி. பிரசன்ன வெங்கடேஷின் நாட்காட்டி யோசனை புதுசு.

இதையும் கொஞ்சம் பாத்துக்கோங்க:
ஆனால் அந்த நாட்காட்டியை என்னால் தெளிவாகப் பயன்படுத்த முடியவில்லை. விளக்கங்களில் குழப்பங்கள் இருந்தது. என் போன்ற தத்திகளுக்கும் புரியும்படி இனி முயற்சிக்கவும்.


பொதுவாக சொல்ல வேண்டிய சில கருத்துகள் :

குறைந்தபட்சம் 50 எழுத்துப்பிழை , சந்திப்பிழை , ஒற்றுப்பிழை கண்டேன். proof readingஇல் அதிகக் கவனம் தேவை.

சாதாரணமாக ஒரு வளரும் எழுத்தாளனை ஒரு அறைக்குள் பூட்டி வைத்து "ஒரு ஐந்து நிமிடம் கோபப்படு" என்று சொன்னால் அவன் உடனே எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் - சிசுக்கொலை, குழந்தைத்தொழிலாளி, ஈழம், உழவன் இதர இதர. அதே மாதிரி "ஒரு ஐந்து நிமிடம் சந்தோஷப்படு" என்றால் உடனே அப்துல் கலாம், அதிகாலைக் குளிர், மழை, நிலா, காதல், வானவில் இதர இதர. இவற்றின் சிறப்பில் எந்தக் குறையும் இல்லை என்றாலும் அரைத்த மாவு சுவை தான் இப்போது. ஒரு எழுத்தாளன் தனக்குரிய சிறப்பைப் பெற எழுத்தில் செலுத்தும் கவனத்தைவிட எடுக்கும் விஷயத்தில் அதிக கவனம் தேவை. யோசிக்கவும்!

கடைசியாக :


இந்த மன்றக் குழுவின் தமிழறிவும் ஆர்வமும் என்னை ஆச்சரியப்படுத்துகின்றது. இலக்கணம் விவாதிக்கிறீர்கள். யாப்பு பழகுகிறீர்கள். எங்களையெல்லம் விட முன்னேறி எங்கோ போய் விட்டீர்கள். சத்தியமாக உங்களுக்குத் தெரிந்த இலக்கணம் எனக்கெல்லம் தெரிந்த்தில்லை. அதற்கு ஒரு சலாம். வாழ்த்துகள். இனி நீங்கள் வாசிக்கும் விஷயங்கள் தான் ரொம்ப முக்கியம். வெவ்வேறு எழுத்தாளர்களை வாசியுங்கள் (தேய்ந்த ரிக்கார்டு மாதிரி இதைத் திரும்பத் திரும்ப எல்லா மன்றக் குழுவிடமும் சொல்வது என்னிடம் உள்ள ஒரு சிறு கெட்ட பழக்கம். மன்னிக்கவும் :-) ) . மரபுத் தமிழில் மரண கெத்தாக இருக்கும் நீங்கள் உங்கள் கற்பனைக் களங்களை எவ்வளவு முடியுமோ விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

மொழியின் ஆளுமையும் நீட்சியும் தொடர்ந்து புதுசாய்ப் பிறப்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு புதுப் பிறப்பும் பழமையின் சிறப்போடு கூடக் கொஞ்சம் அழகாக வேண்டும். பழைய சிறப்பிற்காக இளைய சமுதாயம் 1982இன் உலக அழகியை இப்போது காதலிக்க முடியாது. தமிழை இன்றைய தலைமுறையைக் காதலிக்க வைக்க வேண்டும். அதுவே நம் கொள்கையாக இருக்க வேண்டும்.

வாழ்த்துக்களுடன்
கோமதி சங்கர்

Sep 24, 2010

குறையொன்றும் இல்லை ?


குழப்பத்தில் பிறந்தால் கூட பரவாயில்லை போல ,
ரயிலில் ஏறினால் காசாய்க் கொட்டுகிறது .....
குறையொடு பிறந்தவன் பாவம்
நடைபாதையில் முடைபிணமாய்ச் சாகிறான் !
நடக்க ஏலாதவன்
நடைபிணமாகக் கூட ஆக முடியவில்லை ...


- சமீபத்தில் ஒரு ரயில் பிரயாணத்தில் பெங்களூரிலிருந்து மும்பை வரை என்னைத் தைத்த கேள்வி. இன்னும் தைத்துக் கொண்டிருக்கிறது. பெங்களூர் பேருந்து நிலைய நடைபாதையில் இரு கையும் இரு காலும் இன்றி நடு வழியில் கிடத்தப் பட்டிருந்த முடவன் விழிகளால் தர்மம் கேட்கிறான். தாண்டிப் போகிறவர்கள் நெஞ்சைப் பிழியும் அவலம். சில பேர் காசை வீசுகிறார்கள். ஒருவன் மட்டுமல்ல ..... அதே நடை பாதையில் சீரான தூர இடைவெளியில் இன்னும் நாலைந்து முடவர்கள். கிடத்திச் சென்றவன் எங்கோ பதுங்கியிருக்கிறான். அத்தனை பேரின் விழியிலும் அப்படி ஒரு வெறுமை !

பின்பு ரயிலில் போனால், அத்தனை பேரும் சில்லறைக் காசுகளைத் தயாராய் வைத்திருந்து அரவாணிகள் அதட்டும் போது அமைதியாகக் கொடுக்கிறார்கள்....

நானும் ஒன்றும் பெரிசாய்ப் புடுங்கவில்லை. அந்த நடைபாதையில் வேடிக்கை பார்த்தவர்களிலும் அரவாணிகளுக்குச் சில்லறை போட்டவர்களிலும் நானும் ஒருவன்.

ஆனால் இந்தச் சம்பவங்களில் சில்லறை செலவழித்துச் சில கேள்விகள் வாங்கி வந்திருக்கிறேன் !

ஏன் ?

Aug 31, 2010

என் மேல் பாய்ந்த தேவ ஒளி

புத்தன்
தன் பயணத்தில்
போதியில் ஒளி கண்டான்.
பித்தன்
என் பயணத்தின்
பாதியில் இருள் கண்டேன்.
என் பாதை
இருளுற்றதேனென்று
ஒளி கண்டேன் !

பயணம் ?

சூல் கொண்ட நீரோடை
மலை வீழும் வேகத்தில்
என் மேல் பாய்ந்தது ஒரு தேவ ஒளி,
ஒரு நிலாமுகத்தில் பிரதிபலித்து !
தரைகண்ட நீரருவி
கடலேகித் தவழ்வது போல்
மனம் மெல்ல நகர்ந்தது காதல் வழி,
துளித்துளியாய் அனுபவித்து !

அவள் முகம் நிறைத்துக் கதிரொளி !
என் மனம் நிறைத்துக் காதல் ஒளி !
ஒளியுடன் ஒளி
ஒன்றெனக் குழைய
ரெண்டிலும் திளைத்து
மருகினதென் மனம் !

எனக்கு மட்டும்
மின்னல் தெறித்தது !
எனக்கு மட்டும்
சாரல் சிலிர்த்தது !
எனக்கு மட்டும் !
காதலின் மாயம் !

ஒளி காட்டித் தந்ததே
என் பயணம்
வழிகாட்டி வந்தது
அவள் மௌனம்.

மௌனம் ?

கண்கள் பேசும்
காதல் பாஷையெல்லாம்
கற்றுக்கொள்ளச் சுலபம்.
அது மொழிமௌனம் .
என்னவள் கண்மொழி கடினம்
இது விழிமௌனம்.

'ஆம்' என்று சொல்வதாய்ப் பார்த்தால்
'அப்படித்தான் அத்தான்' என்னும்.
'இல்லையோ' என்பதாய் நினைத்தால்
'இன்று போய் நாளை வா' என்னும்.
'வரவா' என்றால்
வாரி அணைக்கும்
'போகவோ' என்றால்
'போடா பொரம்போக்கு'
என முறைக்கும்.
என்னவள் கண்மொழி கடினம்
இது விழிமௌனம்.

என் வழிகள் அத்தனையும்
உன்னொரு வார்த்தையைத்தான் தேடுதென்று
கூவிச் சொல்லிக் காதலித்தேன்.

அவளின் மறுத்தலும் மொழிமௌனமும்
மென்மையாய் வழி மாறச் சொல்லும்.
ஆனால் விழிமௌனங்கள்
கூச்சல் போட்டுக் குழப்பி வைக்கும்.
கூச்சலில் ஒன்றும் புரியாவிடிலும்
ஓர் அர்த்த மாயை அமைந்திருப்பது போல்
கானல் நீர் காட்டிக்
காத்திருக்க வைக்கும்.

இருள் ?

கானல் நீரென்று
புரியாமல் கனாக்கண்டு
காதல் வளர்த்தும்
தாகம் வளர்த்தும்
தவித்துத் தவித்துத்
தொடர்ந்து வந்தேன்.

ஒரு புனிதக் கணத்தில்
மின்னலாய்த் தெறித்து
நான் மட்டும் பார்த்த
காதலின் தேவ ஒளியை
அவளறிய வாய்ப்பில்லை.

அந்த ஒருகணத்து மின்னலைத்
தக்கவைத்துத் தடம்புரட்டி
மனம் மாற்றி மின்னிணைத்து
அவள் கண்ணில் ஒளிரவைக்க ..
.........
.........
?

சேர்த்துவைத்த மின்னலொளி
சிறுகச்சிறுகக் குறைந்து போய்
என் பாதையில்
இருள் புலர்கிறது !

ஒளி ?

எனக்கு மட்டும்தான்
மின்னல் தெறித்திருக்கிறது.
எனக்கு மட்டும்தான்
சாரல் சிலிர்த்திருக்கிறது.
எனக்கு மட்டும்தான் !
காதலின் மாயை!

நான் பார்த்த அந்த மின்னல்
மேற்கில் விழுந்ததா
கிழக்கில் விழுந்ததா
உன் கண்ணைத் துளைத்ததா ?
என்று
அடம்பிடித்து நான் கேட்டால்
அவள் பாவம் என்ன சொல்வாள் ?

சொல்லாமல் போகிறாளே
காதலெல்லாம் குப்பையென்று
குழப்பத்தில் பழிப்பித்தால்
காதல் பாவம் என்ன செய்யும் ?

சில மேக உரசல்கள்
புனித மின்னல்களாய்த் தெறித்தாலும்
மழை தரிப்பதில்லை .

காதலில்
காதலிக்க நிறைய உள்ளது
ஒரு 'காதலி'
கூடாமல் போனாலும் !

மின்னல் மறுமுறை வரட்டும்.
உனக்கொன்றும்
எனக்கொன்றுமாய்.
அதுவே பொருத்தம்.
பாவம் நான் வேறென்ன சொல்வேன் ?

அவளுக்குத் தமிழ் கொஞ்சம்
தட்டிதட்டித் தான் மழலை பேசும்.
அதனால் ?

Blessed am I
Blessed is she
Here I choose to let go
For blessed be US
As ME and SHE.

Let there be light
in another divine moment !

-மதி

Aug 8, 2010

கடைசியாக பூமிக்கு வந்தேன்

முதல் முதலாக 
உன்னை பூமியில் பார்த்தேன் .

மெல்லிய கார்காலத் தென்றலாய்
என் தலை கோதிச் சென்றாய் .
அதன் பின்
உனை நினைத்த போழ்தெலாம்
மனதில் மழை பெய்தது .

என் அகமழையின் ஈரங்களும்
உன் அழகொளிர்வின் உஷ்ணங்களும்
மெல்ல மெல்ல
என் காலடியில்
ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்கி
ஒரு சில நொடிகள்
ஒரு சில அடிகள்
எனைத் தரை மேல் தவழச் செய்தன .

காதல் ஒரு பரந்த தேசம்
காட்டித்தருகிறேன் வாவென்று
என் கற்பனைகளில்
கை நீட்டி அழைத்தது உன் பிம்பம் .
கற்றுக்கொள்ளக் கிளம்பினேன் .

இசையின் மொழிகளிலும்
கவிதை வரிகளிலும்
உன் நினைவுகளைச் சேர்த்துக் கொண்டு
மேகக் கூட்டங்களின் மேல்
ஏறிச் செல்லும் கலை பயின்றேன் . 

ஆழம் தெரிந்து கொள்ளும்
ஆசையின் உந்துதலில்
உன் கண்களில் குதித்தேன் .
ஆழத்தின் அர்த்தங்களையும்
அர்த்தத்தின் ஆழங்களையும்
அணுஅணுவாய்க் கண்டுகொண்டேன். 

காலப் பெருவெளியில்
ஜனனங்களைத் தாண்டி
காத்திருப்பில் நீண்டு
சந்திப்பில் சுருங்கி
நினைவுகளில் உறைந்திடும்
கணங்களின் முகங்களில்
காதலின் விளையாட்டை
ரசித்து அனுபவித்தேன் .

என்னை உன்னில் தேடினேன்
உன்னை நிலவில் தேடினேன்
நம்மில் காதல் தேடினேன்
என் தேடல்களின் முடிவிலும்
உன் மூக்கு நுனி வடிவிலும்
கடவுளை உணர்ந்தேன்
நமைக் கவிதையில் படைக்கையில்
கடவுளாய் உணர்ந்தேன் .

என் இறுமாப்புகளைக் 
கொஞ்சம் இளகவிட்டு
ஏக்கங்கள் 
எல்லை தாண்டின .
உன் கவனத்தைத் 
திருடத் தூண்டின. 
சின்ன ஏமாற்றங்கள்
பெரிதாய் வலிக்கும்
மெய்யறிந்தேன் .

பயணத்தில் எங்கோ போனதும்
சட்டென்று உரைத்தது .
தனியாக நிற்கிறேன். 
அருகில் உன் பிம்பத்தைக் காணவில்லை . 

காதல் ஒரு பரந்த தேசம். 
கஷ்டப்பட்டு வழி தேடி
கடைசியாக பூமிக்கு வந்தேன் .

இங்கே என் காதலி
அதே வனப்புடன்
தனக்கான வட்டத்தில்
சிறகு விரித்துச்
சிரித்து மகிழ்கிறாள் . 

நான்
பூமியில் பூக்கள் பூக்குமென்றும்
குழந்தைகள் மழலை பேசுமென்றும்
மழை நாளில் தேனீர் ருசிக்குமென்றும்
மீண்டும் உணர்ந்து கொண்டிருக்கிறேன் .

சிரிக்கவும் கனவு காணவும்
இப்போது வேறு காரணங்கள்
கண்டு கொண்டிருக்கிறேன் .
வாழ்வின் கதகதப்பு
என் நாட்களை நகர்த்துகிறது .

புரியாத தேசத்தில் 
பாவமாய்த் தொலைந்து
திரும்பி வந்த என் காதல் பிம்பம்
சட்டெனச் சில சமயம் 
கண்ணாடியில் தெரிகிறது . 

இந்த பிம்ப முகத்தில் 
முன்னிருந்த மழலை இல்லை .

-மதி