May 31, 2009

வயிற்றுக்கு உணவில்லாத போழ்து ......

வயிற்றுக்கு வக்கற்ற 
ஒரு மாலைப் பொழுதில்
கவிஞர்கள் இருவர்
 கடை வீதியில் உலாவினர் . 
ஒரு சின்ன விவாதம் .

பிரபஞ்சத்தின் மென்மைகளில்
மேன்மை எது ?
தாயின் ஸ்பரிசமா ?
இயற்கையின் தொடுதலா ?

ஒருவன் சொன்னான்
காணும் இயற்கை 
ஆக்கும் அழிக்கும்
அன்னையவள் அறிந்ததெலாம்
அன்பன்றி வேறில்லை 
என்று .

அடுத்தவன்
பிரபஞ்சப் பெருவெளியில்
படைக்கப்பட்ட அனைத்திற்கும்
அம்மா ஒருத்திதானே
இயற்கையும் 
தாய்தானே 
என்றான் . 

இவனோ
பெற்ற பிள்ளை
பிஞ்சுப் பாதம் தடவி
மூச்சோடு நுகர்ந்து
முகம் காட்டிச் சிரிக்கும்
தாயின் அன்பே
தனியான மென்மை
என்றான் . 

அதற்கு அவன்
பெய்து சென்ற பெருமழை
விட்டுச் செல்லும் ஒருதுளி
இலையோடு கூடி
இடையிடை ஓடி
காதோடு சொல்லும்
கடவுளின் உண்மை
என்றான் . 

முடிவான மென்மை மட்டும்
மட்டுப்படவேயில்லை .
கவிஞன் பேச்சுக்குக்
கடிவாளமேது ?

ரோட்டோரம் 
இட்லி விற்கும் கிழவி
அவர்களிருவரையும் 
கூப்பிட்டு விசாரித்து
இரண்டு இட்லிகளும்
தேங்காய் சட்னியும்
இலையில் வைத்துக் கொடுத்தாள் . 

தெளிவு பெற்ற இருவரும்
மென்மைகளில் மேலானது
இரண்டு மாவு உருண்டைகளே
என்று கை நனைத்தனர் .May 25, 2009

காதல் காகிதம் - A gift to remember (original)


காதலி
நான் உனக்கு 
ஒரு வெள்ளைக் காகிதத்தைப்
பரிசளிப்பேன் .
எதுவும் எழுதாத
வெள்ளைக் காகிதம் .
இது என்னவென்று
நீ கேட்பாய் . 

என் காதலையெல்லாம்
வார்த்தொரு கவிதை செய்து
உனக்குத் தரலாம் என்றுதான்
காகிதத்தோடு உட்கார்ந்தேன் . 

உன் சீனிச்சிரிப்பும்
சப்பை மூக்கும்
சிங்கார விழிகளும்
ஓவியமாய்
என் கண் முன்னே விரிந்தன .

நூறு நூறு வார்த்தைகள்
ஒரு கவிதைக்கான தேடலில்
நிலைகொள்ளாமல் அலைந்து
மின்னி மின்னி மறைந்தன .

எக்கச்சக்கமாய் 
வித்தைகள் புரிந்ததடி
இந்தக் காகிதம் .
உன் கண்களைப் போலவே . 

நான் 
கண்டு ரசித்தே
இயற்கையை வியந்தேன் , 
உன் கண்களைக் காண்பது போலவே !

கடைசியில்
ஒன்றையும் எழுதாமலேயே
இந்தக் காகிதத்தைக் 
காதலால் நிரப்பிவிட்டேன்
இதற்கு மேல் இதில்
ஒரு புள்ளி வைக்கக் கூட
இடமில்லை
என்று நான் சொல்வேன் . 

நீ சிரிப்பாய்
கொள்ளை அழகாய்ச் சிரிப்பாய்
ம்
வேறென்ன செய்திருக்கிறாய்
இதுவரை !

May 20, 2009

A gift to rememberO my love dear !
I would gift you
A plain white parchment .
As plain as infant smile !
Not a speck of an ink-spoil !

You will look into my eyes . 
Inquiring . 
Curious.
I would say thus ,

This paper was meant for a poem
On the essence of my love
quite a concentrated one . 
I plunged into thought 
What do I write ?

Your sugar smiles 
And sunshine eyes
And the short flat nose
Unveiled as art in my mind .

Words ... words 
and more of them
in search of a poem
flashed ; went ;
And went and flashed !

This paper played many a trick
Leaving me awe-struck !
Is it the love ?
Or is it you , my love ?
I could only wonder . 

The parchment seemed to possess
the absolute essence. 
Not a spot left for a dot. 
What more do I write ?
Its filled . 

You will listen
You will smile
Your dream sugarsmile
As sweet as infant smile . 

O come on dear
what else have you done 
so far ?:-)p.s. this was originally penned in tamil and translated. 

May 12, 2009

நரபிரம்மம்இடம் : சிசுப் பட்டறை , பிரம்மலோகம்
நேரம் : 23-08-1994   காலை 09:28


காணுமிடமெங்கும் தகதகவென்று கனன்று கொண்டிருக்கும் ஜோதி . மையமாக ஒரு சிறு பலகையின் மேல் ஆழ்ந்த யோசனையில் பிரம்மன் வீற்றிருக்கிறான் . எண்ணிக்கையிலடங்கா வருடங்கள் . ஒரே வேலை . ஜீவ மூட்டைகளைப் படைத்துப் படைத்துப் பையிலடைத்து அனுப்பும் வேலை. அவ்வப்போது சில சுவாரசியமான படைப்புகள் - அவதாரங்கள் , மேதைகள் , கொடுங்கோலர்கள் , பேரழகிகள் ! மற்றபடி இயந்திரகதி தான் . அதிலும் சமீப காலமாக
பட்டறையில் வேலை நேரம் கூடிக் கொண்டே போகிறது .

கிரீடத்தைக் கழற்றி வைத்து விட்டு உச்சந்தலையைச் சொறிந்து கொண்டே முனகுகிறான் , " இப்படிச் செய்தால் எப்படி ?"

...............................................................................................

இடம் : முத்து லட்சுமி மருத்துவமனை , அம்பாசமுத்திரம்
நேரம் : 17-05-1995   மாலை : 06:32

குறித்த தேதிக்குப் பல நாட்கள் முன்னதாகவே அவள் இடுப்பைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட ஆரம்பித்துவிட்டாள் . வீட்டவர்க்கெல்லாம் ஒரே பரபரப்பு . முத்துலட்சுமி அம்மாவுக்கு இது மற்றுமொரு பிரசவ கேஸ் அவ்வளவுதான் .

ஆண் குழந்தை . அவசரக்காரன். அதிலும் தாய் வயிற்றில் கத்தி வைத்தல்தான் வெளி வருவேன் என்றொரு அடம் வேறு . சிசேரியன் . 2.94 கிலோ . இரண்டு நாள் இன்குபேட்டர் வாசம் பரிந்துரைக்கப் பட்டது .

கர்ப்பப்பை வெப்பத்துக்கும் இன்குபேட்டர் வெப்பத்துக்கும் வித்தியாசம் இருந்தது. தீபத்துக்கும் தீக்குச்சிக்கும் உள்ள வித்தியாசம் !
 அவன் அவதரித்து விட்டான் .


.....................................................................


இந்தக் கதை சுவாரசியமாகத் தொடங்கி இருக்கிறதா? இத்தோடு நான் எழுதிய இன்னும் சில சிறுகதைகளும் சுவாரசியமாக இருக்கின்றன என்று பலரும் உசுப்பேற்றிவிட்டதால் இந்தக் கதையை 'முதல் போணி' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பில் பிரசுரித்திருக்கிறார்கள். புத்தகம் இப்போது சுடச்சுட விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் கதை எப்படிச் செல்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்க இந்த முன்னுரை உங்களுக்கு உதவலாம் :-) புத்தகத்தைப் பற்றி ஊர் என்ன பேசிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் ஜோதியில் கலந்து கொள்ளவும் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை எட்டிப்பாருங்கள். புத்தகத்தை வாங்குவதற்கான இணையதளங்கள் கீழ்க்காணுமாறு

உடுமலை.காம்
Flipkart
நன்நூல் இந்திய இணையதளம்
Indiaplaza
நன்நூல் உலக இணையதளம் - இவர்கள் வெளி நாடுகளில் வசிப்போர்க்கும் புத்தகத்தை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்களாம்...


மதி