Mar 18, 2009

சாசுவதம்


ஆதி முதல் துளி
கீழிறங்கி வருகையில்
அமிர்தமா
அமிலமா என்றறிய
கை நீட்டினோம் .
பின் குகை செய்தோம்
உடை செய்தோம்
குடை செய்தோம்
நம்
விரல்களுக்கு மட்டும்
சளி பிடிப்பதில்லை என்று
கண்டுகொண்டோம்.
மழை பொழிகிறது
நம் பிள்ளைகள்
உள்ளங்கையில் மழை பிடிக்கின்றனர் .

Mar 17, 2009

என் நகல்


( ஒரு மழை நாள் மாலையில்
கடவுள்
என் கதவு தட்டி
காபி காரமெல்லாம் தின்றுவிட்டு
புதிதாய்ப் பிறப்பதற்கு
உமக்கு வாய்ப்பளித்தோம்
எப்படி வசதியென்று
எழுதிக் கொடும் என்றார் .
அவரிடம் பூர்த்தி செய்து கொடுத்த
விண்ணப்பத்தின் நகல் இதோ )

மழலை :-

குட்டியாக இருக்கையில்
கழுதை கூடக் கவிதைதான் !
பிறந்திடுகிறேன்
போதும் எனக்கு

வீட்டார் :-

கதை சொல்லித்
தூங்க வைக்கும்
அப்பா
நான் சொல்லிக்
கதை கேட்கும்
அம்மா
நான்கு வயது வித்தியாசத்தில்
ஒரு தங்கை


பிள்ளைப் பிராயம் :-

1. சின்னதாய்த் தப்புப் பண்ணி
அப்பாவிடம் அடி வாங்கி
தற்காலிகத் தஞ்சத்திற்கு
சேலையைத் தேடி ஓடி
தனியாகப் பிறகு
அம்மாவிடம் ஏச்சு வாங்க வேண்டும் .
2. வெளியிடம்
வீதிகளுக்குச் சென்றால்
தங்கையின் கைபிடித்து
உலகம் சொல்லித் தர வேண்டும்
3. மேகங்களுக்குச் சளியென்று
விசாரிக்கப் போய் நனைந்து
ஜன்னி வந்து பிழைக்க வேண்டும்

வாலிபம் :-

1. பாதைகள்
ஒவ்வொன்றாய்க் கொண்டாலும்
பார்வை
ஒன்றே கொண்ட
தோழர்கள் தோள் வேண்டும்
2. வாழும் சமூகம்
வாலிபரை நம்ப வேண்டும்
3. தேர்ந்திட்ட பாதையில்
பல தூரம் பயணித்தாலும்
அடுத்த மைலை
எட்டிப்பார்க்க ஆவல் வேண்டும்
4. திரும்பிப் பார்க்கச் சொல்லும்
திவ்விய மங்கையர்
தினம் ஒருமுறையாவது
பார்வையில் பட வேண்டும்
முடிந்தால் அவ்ர்கள்
பார்வையும் பட வேண்டும்


காதல் :-

குறைந்த பட்சம்
மூன்றாவது வேண்டும்
கண் பார்த்துச் சொல்லிட
கவிதைகள் வேண்டும்
கண் மூடிச் சிரித்திட
கனவுகள் வேண்டும்
கைகோத்து நடந்திட
கடற்கரை வேண்டும்
பல்சரில் கூட்டிச் செல்ல
பெட்ரோலுக்குக் காசு வேண்டும்
உள்துறை அமைச்சகத்தில்
தங்கையின் துணை வேண்டும்

பெண்வாசம் :-

தோழியாய் ஒரு தாயும்
தாயாய் ஒரு தோழியும்
குழந்தையாய் ஒரு காதலியும்
அவள் ஜாடையில் ஒரு
பெண் குழந்தையும்
பெற்றுவிட்டால் வாழ்வினில்
பெண்சொந்தம்
பரிபூரணம்

குடும்பம் :-

குழந்தையில் நான்
கொண்ட குடும்பம்
என் குழந்தைகளும் அடையட்டும்
என் தந்தை போலவே
ஒரு 'நான்' வேண்டும்
( பி.கு ) குழந்தைகளுக்குச் சொல்ல
கதைப் பஞ்சம் வரவே கூடாது

மரணம் :-
உம் விருப்பம் !

Mar 14, 2009

கடவுள்


கடவுள் யார் ?
கடவுள் என்ன ?
கடவுள் எது ?
மனிதனைப் படைத்த தாயா ?
மனிதன் உயிர் கொடுத்த சேயா ?
...............................
குழப்பம் வேண்டாம்.

உண்டென்று சொல்வோர்
உறுதியாகச் சொல்லுங்கள்
இல்லையென்போர்
இம்மியளவும் பிசக வேண்டாம் .

வடிவங்கள் வேண்டுமா ?
வைத்துக் கொள்ளுங்கள்.
வெறும் பொய்தானா ?
விட்டுத் தள்ளுங்கள் .
மாலைகள் தேவையா ?
மனமாரச் சாத்துங்கள் .
மாய வலையா ?
கிழித்து வீசுங்கள் .
.........................

நம்பிக்கை நம் பிறப்புரிமை ,
சந்தேகமில்லை
நாம் தனித்தனியாகத் தான்
பிறந்தோம் என்பதும்
நினைவிருக்கட்டும் .

பூசையறையோ குப்பைத் தொட்டியோ
கடவுளை உங்கள் வீட்டிலேயே
வைத்துக் கொள்ளுங்கள் .
..............................

கள்ளமில்லாக் குழந்தையின்
கவி மழலைப் பேச்சு ,
சோதிதனில் கலந்துவிட்டால்
சொப்பனங்கள் தோற்கடிக்கும் நட்புலகம் ,
அவ்வப்பொழுது அசைத்துப் பார்க்கும்
கைகூடா எண்ணங்கள் ,
வாடிக்கைக் கவலைகளின்
வடிகாலாய் இயற்கை ,
பிறவிப் பொருளுணர்த்தும்
ஒரு பாசப் பார்வை ,
கொடுத்துப் பெறும் அன்பு
.........
வாழ்க்கை வாழ்வதற்கே !
வாதங்கள் வீண் வேலை !
..........................

நிலையான பரம்பொருள்
அமைதி
......
கடவுள் வடிவானாலும் சரி
கடவுளே பொய்யென்றாலும் சரி !
....................................

குழம்ப வேண்டாம்
குழப்ப வேண்டாம்
பூசையறையோ
குப்பைத் தொட்டியோ
கடவுள் உங்கள்
வீட்டோடேயே இருக்கட்டும் .

Mar 12, 2009

கொஞ்சம் குட்டி விஷயங்கள் !!

மழை
அவசர அவசரமாய்
நனைந்தோடி வந்து
தலை உதறி நிமிர்ந்ததும்
கண் சிமிட்டி மறைந்தது
எனக்கெனப் பெய்த மழை !


வாலிபம் (அ) தேர்வறை


விடைகளைக் கையில் வைத்துக் கொண்டு
வினாக்களைத் தேடிப் பிடிக்கும்
வேடிக்கை விளையாட்டு !
முரண்வாழ்க்கை
சின்னச் சின்ன முரண்பாடுகளைக்
கவிதையாக்குகிறது
பெரிய முரன்பாடுகளைக்
கலாச்சாரம் ஆக்கி விடுகிறது !

திசை


என்றாவது ஒரு நாள்
திசை மாறிப் போனவன்தான்
உலகை முழுதுமறிகிறான் !
மெய்


உறங்காமலும்
விழிக்காமலும் இருந்திடும்
பொழுதுகளில்
மெய் தரிசனம்
சில மின்னல் கீற்றுகளாய்
வந்து போகிறது !

Mar 8, 2009

கோபித்துப் போன குரல்


நேற்று வரை
நாங்கள் இப்படிப் பழகவில்லை .

சொல்லாமல் கொள்ளாமல்
ஒரு உச்சத்தில் உடைந்து
என்னை ஊமையாக்கியது குரல் .

கட்டிக் கொண்ட தொண்டை
காற்றை மட்டும்தான் உமிழ்கிறது .
காற்றால் பேச முடியவில்லை
என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை .
சைகை புரியும் கைகளோடும்
என் சைகைகள் புரியும் நண்பர்களோடும்
மௌன மொழி பயின்றேன் ....
ஒரு மூன்று நாட்களுக்கு !

உலகம் வித்தியாசமாய்த் தெரிந்தது
மொழி சுவாரசியமாய் இருந்தது .

புரியவைக்க முடியவில்லை
குழந்தையாய் உணர்ந்தேன் .
பிறர் புரிந்து கொள்ளவில்லை
ஞானியாய் உணர்ந்தேன் .

என் சைகைப் பரிவர்த்தனை கண்டு
'பாவம் பிறவி ஊமை' என்று
பரிதாபப்பட்டாள் பேருந்தில் ஒருத்தி .
நேற்று
புதிதாய்ப் பிறந்தது போல் உணர்ந்தேன் .

கேள்வியும் பதிலும் கருத்தும் இல்லாமல்
பேசாமல் ,
'வெறுமனே' உலகைப் பார்த்ததில்
மௌனத்தின் மதிப்பறிந்தேன் .

பேசத் துடித்து
பிரயத்தனப்பட்டுப் புரியவைத்த
ஓரிரு வார்த்தைகளில்
மொழியின் மதிப்பறிந்தேன் .

கண்ணின் அசைவுகள்
காதலிக்கு மட்டுமல்ல
கச்சிதமாய்த் தோழர்க்கும் புரிந்தது .

பலவேறு வார்த்தைகளின் இடத்தில்
ஒரு புன்னகை போதுமென்றானது .

என்னோடு பேசிக்கொண்டதில்
எல்லோரையும் மௌனம் தொற்றியது .

சப்தங்கள் குறையக் குறைய
உள்ளுக்குள் சலனங்கள் குறைய
ஆழ்மனத்தில் அமைதி உணர்ந்தேன் .
பரம்பொருள் பக்கமானது .

கோபித்துப் போன குரல்
பழம் விட்டுச் சேர்ந்ததும்
வார்த்தை வார்த்தையாய்ச்
சொல்லிப் பார்த்துத்
துள்ளிக் குதித்தேன் .
பால்யம் திரும்பி வந்தது .

எக்கச்சக்கக் கோணங்கள்
புதுப் புது பார்வைகள் .

தொண்டை வேந்தே !

நேற்று போல் நாம்
இதுவரை பழகவில்லை !

Mar 7, 2009

எதிர்வினை ஏக்கம் - வெண்பா


விரிந்தமலர் தேன்தாங்கி வண்டேங்கி நிற்கும்
உறவாட தன்னுள்ளில் காதல் வரிந்து
வினைக்கான வோர்நல் லெதிர்வினைப் பார்வைக்காய்க்
காத்தேங்கும் காதலர் போல .

-மதி

பூத்து விரிந்த மலர் தன்னிடம் தேன் குடித்து உறவாட வரும் வண்டிற்காய்க் காத்து ஒரு சின்ன ஏக்கத்துடன் நிற்பது , தன் உள்ளத்தில் காதலை வளர்த்துக் கொண்டு தான் விடும் விழியம்புகளுக்கு எதிர் வினையாக ஒரு நல்ல காதல் பார்வை வாராதா என்று காத்து ஏங்கித் தவிக்கும் காதலரை ஒத்திருக்கிறது என்று பொருள். 


மீதிக் கவிதை


அடுத்த அறையில்

அப்பா விடும் குறட்டைச் சத்தம்
என் அறைக் கடிகாரம்
நொடி நொடியாய் நடந்து போகும்
கால(டி)ச் சத்தம்
ஒரு மின்விசிறி
என் மூச்சுக் காற்று .....
நான்கு சத்தங்களின் துணையுடன்
நான் தூங்காமலிருக்கிறேன் .இப்படித்தான் துவங்க வேண்டுமென்று
ஒவ்வொரு பின்னிரவும் யோசிக்கிறேன்
தூங்கி விடுகிறேன் !

பிள்ளையார்சுழி


ஏதாவது எழுத வேண்டும்
எனக்குள் வாழும்
எனக்காக .
அடிக்கடி இப்படித் தோன்றும் .
கைகள் பேனா தேடும்
கண்கள் காகிதம் தேடும்
மூளை என் எழுத்துக்கு
முகவரி தேடும்
ஏதோ ஒன்று கிடைக்காமல்
எத்தனையோ எண்ணங்கள்
மொட்டிலேயே
பட்டுப் போயிருக்கின்றன !
இன்று எல்லாம் கிடைத்திருக்கிறது
ஏதாவது எழுத வேண்டும் !
மழலைச் சிரிப்பா ?
மனிதச் செருக்கா ?
மழை நாள் கிறக்கமா ?
மத்தியான உறக்கமா ?
உயிர்ப்பா ? தவிப்பா ?
கனவா ? திட்டமா ?
தாயா ? தமிழா ?
கடவுளா ? கலையா ?
நிகழ் காலமா ? எதிர் காலமா ?
காலத்தை வென்ற
கரப்பான்பூச்சியா ?
மரபுக் கவிதையா ?
புதுக் கவிதையா ?
எதை ?
ஏதாவது ...
சில சமயம் இப்படித்தான்
என் நரம்புப் பின்னல்கள்
தேவைக்கதிகமாக
உணர்ச்சிவசப்பட்டுவிடும் ,
தேவையைப் பூர்த்தி செய்யாமலேயே !
கடிதம் எழுத விழைகிறேன்
என் பேனாவில்
பிள்ளையார்சுழி
போட மட்டுமே
மை இருக்கிறது !
அதுவும் அழகாய்த்தானே இருக்கிறது
இப்போதைக்கு
இந்தப் பிள்ளையார்சுழியுடனே
'இப்படிக்கு' போடுகிறேன் !